அம்மா என்னும் அரிய சக்தி
இந்த இதழில் எழுதுவது வாசகர் கடிதம் இல்லை.

என்னுடைய அனுபவம்.
இரண்டு வார விடுமுறையை அருமையான நண்பர்கள், குடும்பங்கள் என்று மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு நிம்மதியாக வீடு திரும்பித் தூங்க முயற்சித்தேன். இரவு 12 மணி. அந்த "ஃபோன் கால்" வந்தது. "Outsourcing" தொழில் நிமித்தமாக வேலை செய்பவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு மனத்தில் ஒரு 'பகீர்' என்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் அந்த நேர 'தொலைபேசி' குரல். எதிர்பார்த்தது. அம்மா.

மனம் அழுகிறது. அறிவு ஆறுதல் சொல்லுகிறது. "உனக்கே வயதாகிவிட்டது. உனது அம்மா, வலியும் வேதனையும் இனி இல்லை. பூரண வாழ்க்கை. உன்னைவிடச் சிறிய வயதில் இருப்பவர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நீ கொடுத்து வைத்தவள். மகிழ்ச்சியாக விடை கொடு." மனம் முரண்டு பிடித்தது. நினைவுகளின் தாக்கமும், ஏக்கமும், துக்கமும், அன்றிரவு அந்த அறிவைத் தள்ளிவைத்தது.

அம்மா என்னும் அந்த அரிய சக்தியைப்பற்றி என் பார்வையில் எழுதத் தோன்றியது. இலக்கணம் தெரியாமல் எழுதுகிறேன். தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்.

உன்னில் கருவாய் இருந்து
கருவில் உருவாய் வளர்ந்து
உருவில் உயிராய் வெளிவந்து
உயிரின் உணர்வாய் குரல் கொடுத்து
குரலின் ஓசையாய் உனை அழைக்க
ஓசையின் ஆசையாய் எனை அணைக்க
ஆசையின் உறவாய் உனைப் பார்க்க
உறவின் உரிமையில் உலகம் அறிய
உலகம் முழுவதும் உறவெனப் புரிய
உன்னால் மட்டுமே முடியும் அம்மா
'மா' என்னும் மாபெரும் உறவை
முதலில் வித்திட்டது நீ தானே!

தாயைப் பிரிந்து நினைவுகளுடன் வாழும் அத்தனை அன்பர்களுக்கும் இந்தப் பகுதி சமர்ப்பணம்

டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com