CMAY: நெய்வேலி சந்தானகோபாலன் கச்சேரி
ஏப்ரல் 9, 2016 அன்று, இளையோர்க்குச் செவ்வியல் விழிப்புணர்வு (Classical Music Awareness among Youth-CMAY) அமைப்பு, 'பயிர் ட்ரஸ்ட்' என்னும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 'Rhythm Meets Melody' என்ற கருத்தில், கர்நாடக இசைநிகழ்ச்சி ஒன்றை, மில்பிடாஸ் ஷிர்டி சாய் பரிவாரில் நடத்தியது. நெய்வேலி ஆர். சந்தானகோபாலன், டில்லி பி.சுந்தர்ராஜன், நெய்வேலி ஆர். நாராயணன் ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சியை வழங்கினர். CMAYயின் விக்ரம் பாரதி தமது குரு ஸ்ரீ நெய்வேலி ஆர். நாராயணன் அவர்களுடன் இணைந்து மிருதங்கம் வாசித்து அசத்தினார்.

நிகழ்ச்சிமூலம் திரட்டப்பட்ட நிதி 'பயிர்' அமைப்புக்கு அளிக்கப்பட்டது. முழுமையான கிராமப்புற வளர்ச்சியே 'பயி'ரின் முக்கிய இலக்காகும். சமூக முன்னேற்றம், மகளிர் ஆரோக்கியம் பேணப்படுதலிலும், சமூகத்தின் சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும் அக்கறை செலுத்துகிறது பயிர். மாணவர்களுக்கு எளிய முறையில் கல்வி புகட்ட, விரிவுபடுத்தப்பட்ட பள்ளி, சுற்றுலா, விளையாட்டு நிகழ்வுகள், மின் கற்றல், கிராமப்புற நூலகம் போன்ற பல திட்டங்களுக்கும் மாணவர்களுக்கு காலையில் சத்துணவு வழங்குவதிலும் 'பயிர்' அக்கறை செலுத்துகிறது. கிராமப்புற பெண்களின் மேம்பாட்டிற்காக "பெண்கள் வாழ்வாதாரத் திட்டம்" ஒன்றையும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அப்பெண்கள் தூரிகைக் கைப்பைகளைத் தயாரித்து பலனடைந்து வருகிறார்கள்.

பயிர் நிறுவனத்திற்கு நிதியுதவ வலைமனை: www.payir.org
CMAYயுடன் தொடர்புகொள்ள: www.cmay.org

சுதா லக்ஷ்மிநாராயணன்,
கூப்பர்டினோ

© TamilOnline.com