லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயில்
மஹாவிஷ்ணுவின் தீவிர பக்தன் பிரகலாதன். அவன் தந்தை ஹிரண்ய கசிபு அகங்கார மமகாரத்தின் மறு உருவம். தன்னை எந்த மனிதனாலும் அழிக்க முடியாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான் என்பதே இதற்குக் காரணம். மனிதனால் அழிக்க முடியாத அவனை அழிக்க, சிங்கமுகம் கொண்ட மனித உருவில் நரசிம்மமாய் (நரன்-மனிதன், சிம்மம்-சிங்கம்) தோன்றினார் திருமால். நாராயணன் ஒருவனையே வழிபட்ட தன் மகனிடம் "எங்கே உன் நாராயணன்?" என்று கேட்ட தந்தைக்கு "அவர் எங்கும் நிறைந்தவர். தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்" என்று பதிலளித்தான் சிறுவன். அருகிலிருந்த தூணை ஹிரண்ய கசிபு எட்டி உதைத்து "இதிலிருக்கிறானா உன் நாராயணன்?" என்றபோது தூணைப் பிளந்துகொண்டு நரசிம்மனாய் வெளிவந்து அவனை அழித்தார் என்பது புராண வரலாறு. இது நிகழ்ந்த இடம் நரசிம்மபுரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள பெருமாள் லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள்.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன் விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இக்கோயில் சென்னை - தண்டராம்பட்டு - பேரம்பாக்கம் பாதையில் அரக்கோணத் திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்கள் மூலம் இக்கோயில் பற்றிய அரிய வரலாற்றுச் செய்திகள் பல கிடைக்கின்றன. விஜயநகரப் பேரரசர் அச்சுததேவ மஹாராயர், வீர வேங்கடபதிராயர் ஆகியோர் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்கள் "தீர்த்தார பிள்ளை என்பவர் 'பெரியபுலியாரா' அல்லது நரசிம்மபுரம் என்றழைக்கப்படும் ஊரில் குடியிருக்கும் அந்தணர்களிடம் இக்கோயிலைப் பராமரிக்கும் பொறுப்பைக் கொடுத்து அதற்கு ஈடாக இந்த ஊரை அவர்களுக்கு நன்கொடையாகக் கொடுத்தார்" என்று சொல்கின்றன.

மேலும், அச்சுத தேவராயரின் தந்தை நரச நாயக்கர் நலம் கருதி நாள்தோறும் இக்கோயிலில் வேதபாராயணம் செய்வதற் காக அவ்வூர் அந்தணர்களுக்குப் பல்வேறு கொடைகள் அளிக்கப்பட்ட செய்தியும் இக்கல்வெட்டில் காணப்படுகின்றன. இதே கல்வெட்டு, தீர்த்தாரபிள்ளை இக்கோயிலி லுள்ள 'பிரகலாதபுரந்தரர்' என்றழைக்கப் படும் உற்சவமூர்த்தியைப் பிரதிஷ்டை செய்ததாக மற்றொரு செய்தியைக் கூறுகிறது.

நரசிம்மப் பெருமாள் கோயில் கட்டப் பட்டுள்ள 'கூவம் தியாகசமுத்திர நல்லூர்' என்ற ஊருக்கு 'நரசநாயக்கர்புரம்' என்றொரு பெயர் உண்டு என்ற குறிப்பும் கல்வெட்டில் காணப்படுகின்றது. ஜயங்கொண்ட சோழ மண்டலத்தில் சந்திரகிரி ராஜ்ஜியத்தில் 'மணவில் கோட்டம்' என்ற நகரத்தில்தான் நரசநாயக்கர்புரம் உள்ளது. ஆக, கி.பி.14 அல்லது 15-ஆம் நூற்றாண்டில் அரசாண்ட சோழ பரம்பரையினரும் விஜயநகர பரம்பரையினரும் தமிழகத்தை ஆண்ட காலத்தில்தான் இக்கோயில் கட்டப் பட்டிருக்கின்றது என்பது தெளிவாகிறது.

கோயிலின் அமைப்பு: கிழக்கிலும் மேற்கிலு மாக இரண்டு நுழைவாயில்கள் கொண்டு அமைந்துள்ளது இக்கோயில். இவற்றில் கிழக்கு வாயில்தான் பிரதான நுழைவாயில். இக்கோயில் ஒரு காலத்தில் மிகப்பிரம் மாண்டமான கோபுரத்தைக் கொண்டிருந்திருக்க வேண்டும். இன்று அடித்தளமும் இரண்டே நிலைகளையும்கொண்டு, மற்றவை சிதைந்து பரிதாபமாகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றது. கொடிமரம் இல்லாமல் துவஜஸ்தம்பத்தின் அடிப்பாகம் மட்டுமே காணப்படுகின்றது.

கருடாழ்வார்: பொதுவாகப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு எதிரே இரு கரங்களையும் கூப்பியபடி நிற்கின்ற கருடாழ்வார் சிலை அமைந்திருக்கும். ஆனால் இங்கு கருடாழ்வார் வலதுகாலை மண்டியிட்டு மூலவரை வணங்கி நிற்பது போல் தனிச் சந்நிதியில் அமைந்துள்ளது.

மூலவர் சந்நிதி: செங்கல்பட்டு மாவட்டத்தில் காஞ்சிபுரம் செல்லும் பாதையில் உள்ள பழைய சீவரம் தலத்திலுள்ள நரசிம்மரைப் போலவே இங்குள்ள நரசிம்மரும் கம்பீர மாகக் காட்சி தருகின்றார். நரசிம்மத்தின் உக்கிரத்தைத் தணிக்கத் தாயார் குளிர்ந்த பார்வையுடன் பெருமாளின் இடது தொடை மீது அமர்ந்து ஆசுவாசப்படுத்தும் அதே கோலத்தில்தான் இங்கும் காணப்படுகின்றது. ஆனால் பழைய சீவரத்தில் உள்ள சிலை 6 அடி என்றால் இங்குள்ள சிலை 7 அடி உயரத்தில் இன்னும் ஆஜானுபாஹ¤வாகக் காட்சி தருகின்றது என்பதுதான் விசேஷம். மூலவருக்கு அருகிலேயே தனியாக அமைந்த சந்நிதியில் 5 அடி உயரத்தில் மரகதவல்லித் தாயார் சிலை கம்பீரமாகக் காட்சி தருகின்றது.

உத்சவ மண்டபம்: மூலவர் சந்நிதிக்கு எதிர்க்கோடியில் ஸ்ரீதேவி பூதேவி சகிதம் நரசிம்மமாய் வீற்றிருக்கும் உருவச் சிலைகள் இங்கு இடம் பெற்றுள்ளன. இச்சிலைகள் கால எல்லைகளைக் கடந்து இன்றும் பொலிவு குன்றாமல் காணப்படுகின்றன.

மகாமண்டபம்: இங்கு பன்னிரு ஆழ்வார் களின் உருவச் சிலைகள் வெகு அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

கலியாணமண்டபம்: மூலவர் சந்நிதியின் வடக்குப் பிரகாரத்திலுள்ள கலியாண மண்டபத்தில் கல்தூண்களில் செதுக்கப் பட்டுள்ள திருமாலின் பத்து அவதார உருவங்களும் அவதார நிகழ்வுகளும் மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காண்பவர் கருத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. மண்டபத்தின் விதானத்தில் (மேற்கூரையில்) நாட்டிய மாதர்களின் உருவங்களும் விதவிதமான இசைக் கருவிகளும் அழகிய சித்திரங்களாகக் கண்கவர் வண்ணங்களில் தீட்டப்பட்டுள்ளன.

இக்கோயிலின் கலை அழகு நிரம்பிய நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிலைகளும் மண்டபங்களும் தூண்களும் விதானத்துச் சித்திரங்களும் சோழர்காலப் பாணியில் அமைந்துள்ளன. கோயிலின் நுழைவாயிலுக்குத் தற்போது கதவு இல்லாத காரணத்தினால் (காலத்தின் கொடுமை!) இம்மண்டபம் இன்று ஆடுமாடுகள் இளைப் பாறும் தொழுவமாக மாறியிருப்பது வேதனைக் குரியது. கோயிலுக்கு மானியமாக எழுதி வைக்கப்பட்டுள்ள 15 ஏக்கர் நிலம் இருந்தும் நிலத்திலிருந்து வருமானம் இல்லாமல், அரசு மானியமும் இல்லாமல் ஊர்மக்கள் இந் நிலத்தில் பாடுபட்டுக் கிடைக்கும் சொற்பத் தொகையில் ஒரு வேளை பூஜை மட்டுமே இக்கோயிலில் நடைபெற்று வருகிறது. இங்கு கொண்டாடப்படும் ஒரே ஒரு திருவிழா ஆண்டுதோறும் மே மாதம் வரும் நரசிம்ம ஜயந்தி விழா.

அகோபில மடத்தின் 45-ஆவது ஜீயர் நாராயண யதீந்திர மகாதேசிகன் அவர்கள் இக்கோயிலுக்கு மங்களாசாசனம் பாடியுள்ளார் என்ற பெருமை பெற்ற தலம் இது. இன்று கோயிலின் முகப்பையே மறைக்கும் அளவிற்குச் செடியும் கொடியும் ஏகமாய் மண்டிக் கிடக்கும் அவலநிலையில் உள்ளது. ஊர் மக்கள் அவ்வப்போது பிரதிபலன் எதிர் பாராமல் உழைத்துச் செடிகொடிகளை வெட்டிச் சீராக்குகின்றனர். எனினும் கோயில் சீரமைப்புக்கு ஒரு டிரஸ்டு ஏற்பாடு செய்து 20 லட்சம் ரூபாய் செலவாகும் என்று திட்டமிட்டு நிதி திரட்டி, உள்ளூர் மக்கள் முயற்சியால் ஆஞ்சநேயர் சந்நிதி சீரமைப்புப் பணிகள் முடிந்தன.

இப்போது தாயார் சந்நிதி சீரமைப்புப்பணி நிதி பற்றாமை காரணமாக ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இதற்குமேல் ஆண்டாள் சந்நிதி, இடிபாடுகளுடன் காணப்படும் மூலவர் சந்நிதி, புதிய துவஜஸ்தம்பம், கோபுரச் சீரமைப்பு ஆகிய பணிகள் நிதியை எதிர்பார்த்துக் கொண்டிருக் கின்றன. இதில் வியப்புக்குரியதும் வேதனைக் குரியதும் இக்கோயில் இந்து சமய அற நிலைத்துறையின் நிர்வாகத்தில் இருக்கின்ற கோயில். தமிழக முதல்வர் 10 லட்சம் கொடுப்பதாக அறிவித்துள்ளார். அரசு முனைப்புடன் செயல்பட்டால் நம்முடைய சிற்பக்கலை கட்டிடக்கலை ஓவியக்கலை ஆகிய பொக்கிஷங்களைக் காப்பாற்றி, சோழர்காலக் கலைப்பெட்டகத்தை வருங் கால சந்ததியினருக்குப் பெருமையுடன் விட்டுச் செல்ல முடியும். அவன் அருளால் அவன் கோயில் சீரமைப்புப்பணி செவ்வனே நிறைவேற வேண்டுவோம்.

முனைவர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com