அரங்கேற்றம்: பிரணவ் நம்பூதிரி
ஜூன் 11, 2016 அன்று அமடோர் உயர்நிலைப்பள்ளி அரங்கில் செல்வன் பிரணவ் நம்பூதிரியின் கருநாடக வாய்ப்பாட்டு அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் ஸ்ரீலலித கான வித்யாலயாவின் குரு திருமதி லதா ஸ்ரீராம் அவர்களிடம் பதின்மூன்று ஆண்டுகளாகக் கர்நாடக இசை பயின்றுவருகிறார்.

பிரணவ் "ஏறா நாபை" என்ற தோடிராக வர்ணத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார். "வல்லப நாயகஸ்ய" (பேகடா) மற்றும் "ராகரத்ன மாலிகசே" (ரீதிகௌளை) என்ற கீர்த்தனைகளில் கம்பீரமான குரல் வளத்துடனும் தெளிவான கமகங்களுடனும் பாடியவிதம் அருமை. "அம்பா காமாக்ஷி" (பைரவி) என்ற ஸ்வரஜதி நிறைவாக இருந்தது. பின்னர், தியாகராஜரின் "எந்துகு பேதல" என்ற சங்கராபரண ராகப் பாடலுக்கு ஆலாபனை, நிரவல், மற்றும் கல்பனா ஸ்வரத்தை பிரணவ் பாடியது மனதைக் கொள்ளைகொண்டது. தொடர்ந்து, "ராஜச சுகுமார்" என்ற அபங் உருக்கமாக இருந்தது. எஸ். கல்யாணராமன் இயற்றிய தில்லானாவை (தர்பாரி கானடா) விறுவிறுப்பாகப் பாடினார். திருப்புகழுடனும் மங்களத்துடனும் நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்தது. திரு. ரவீந்திரபாரதி ஸ்ரீதரனின் மிருதங்கமும் திரு. விக்ரம் ரகுகுமாரின் வயலின் இசையும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.

நிகழ்ச்சியின் நிறைவில் லதா அவர்கள் மனோதர்மத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசி, வித்யாலயா சார்பாகப் பிரணவுக்குப் பதக்கம் அளித்தார். இந்த இசைப்பள்ளி இருபத்தைந்தாம் ஆண்டை நோக்கி வெற்றிநடை போடுகின்றது.

சுருதி சொக்கலிங்கம்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com