முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 23)
முகமூடி உருவம் சூர்யாவைத் தள்ளி விழச்செய்து ஓடிமறைந்ததும் அதிர்ச்சியடைந்த அகஸ்டா விசாரணை வேண்டாம், போலீஸை அழைக்கலாம் என்றதும் சூர்யா மறுத்தார். நிர்வாகக்குழுவினரைக் கூட்டிப் பேசினால் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் என்று அவர் உத்தரவாதமளித்ததும் அகஸ்டா மிக்க நம்பிக்கையுடன் குட்டன்பயோர்கின் மேலாண்மைக் குழுவினர் நால்வரையும் அழைத்தாள்.

அகஸ்டாவின் அலுவலக அறையில் நீள்வட்ட மேஜையைச் சுற்றி சூர்யாவைத்தவிர அனைவரும் அமர்ந்திருந்தனர். சூர்யாவின் இடப்புறம் கிரண் ஷாலினியும், வலப்புறம் அகஸ்டாவும் அமர்ந்திருந்தனர். நீள்வட்ட மேஜையின் எதிர்ப்பக்கம் அலெக்ஸ் மார்ட்டன், ஜேகப் ரோஸன்பெர்க், நீல் ராபர்ட்ஸன், சேகர் சுப்ரமண்யன் நால்வரும் அமர்ந்திருந்தனர்.

சூர்யா வேண்டா வெறுப்பாக அமர்ந்திருந்த நால்வரையும் நோட்டம்விட்டார். அலெக்ஸ் முகச்சுளிப்புடனும், ஜேகப் எரிமலை போலக் குமுறும் சினத்துடனும், நீல் ராபர்ட்ஸன் எரிச்சலுடனும் இருந்தனர். சேகர் மட்டும் சோகமான முகபாவத்துடன் தலைகுனிந்திருந்தார்.

சூர்யாவின் நீண்டமௌனத்தைச் சகிக்கமுடியாமல் ஜேகப் வெடித்தேவிட்டார். "அகஸ்டா எதுக்கு இந்தமாதிரி எங்களைக் கூப்பிட்டு இந்த யூகமாந்திரீகன் முன்னால் சும்மா உக்கார வச்சிருக்கீங்க? எனக்கு ரொம்ப வேலையிருக்கு. நான் கிளம்பறேன்" என்று எழுந்தார். ஆமோதித்தபடி அவருடன் அலெக்ஸும் நீலும் எழுந்திருக்கவே, சூர்யா கையை உயர்த்தி "உக்காருங்க ப்ளீஸ்! நான் ஆரம்பிக்கறேன்" என்று ஆணையிடவே அவரது அதிகாரபூர்வக் குரல் தோரணையால் அனைவரும் தாக்கமடைந்து சட்டென அமர்ந்துவிட்டனர்.

சூர்யா மீண்டும் நால்வரையும் ஆழ்ந்து சில நொடிகள் நோக்கிவிட்டு திடீரென ஒரு அதிர்வேட்டு வீசினார். "நான் உங்களை இங்க அழைச்சதுக்கு காரணம் என்னன்னா, குட்டன்பயோர்கின் பிரச்சனைக்கு என்ன காரணம்னும், அதுக்கு மூலகர்த்தா யாருன்னும் நான் கண்டுபிடிச்சுட்டேன் அதனாலதான்!"

உடனே அறையில் ஒரே களேபரம் ஏற்பட்டது. அகஸ்டாவுடன் குட்டன்பயோர்க் குழு அனைத்தும் படாலென நாற்காலிகளை பின்தள்ளிவிட்டு எழுந்து உரக்கக் கேள்விகளை வீச ஆரம்பிக்கவே எல்லாக் குரல்களும் சேர்ந்து ஒரு சந்தைபோல ஆகிவிட்டது.

கிரண் ஒரு புத்தகத்தை எடுத்து டமாலென பலமாக மேஜைமேல் அறைந்து "ஸைலேன்ஸ்! எல்லாரும் பொத்திகிட்டு உக்காருங்க!" என்று கத்தவும் அனைவரும் திடுக்கிட்டு அமைதியாக அமர்ந்தனர்.

அகஸ்டா மௌனத்தை பரபரப்புடனும், உள்ளெழுந்த நம்பிக்கையுடனும் உடனே கலைத்தாள். "என்ன! பிரச்சனை எதுனாலன்னு தெரியுமா? யார் செஞ்சாங்கன்னும் கண்டுபிடிச்சிட்டீங்களா! வாவ்! ப்ளீஸ் உடனே சொல்லுங்க!"

சூர்யா முறுவலுடன் தொடர்ந்தார். "ஆமாம். அதுமட்டுமில்லை. உங்களையெல்லாம் கூட்டினதுக்கு இன்னும் முக்கிய காரணம், அந்த மூலகர்த்தா இப்ப இந்த அறையிலேயே நம் நடுவில இருக்கறதுதான்!"

மீண்டும் களேபரம்! குட்டன்பயோர்க் குழுவினர் அனைவரும் எழுந்து நின்று உச்சஸ்தாயில் பலவிதமாகக் கூச்சலிட்டனர்.

கிரண் மீண்டும் புத்தகத்தை படாலென மேஜைமேல் அடித்து பலத்த சத்தமெழுப்பி, "ஸைலேன்ஸ், ஸைலேன்ஸ், ஸைலேன்ஸ்!" என்று கூக்குரலிடவும் அனைவரும் மீண்டும் அமைதியடைந்தனர். ஆனால் அமரவில்லை.

கிரண் கொஞ்சம் சாய்ந்து அருகிலிருந்த ஷாலினியிடம், "ஹே, இது நான் நல்லா செய்யறேன் இல்லை? பாத்தியா, நம்ம அப்பா அம்மா அவ்ளோ பணம் கொட்டி எனக்கு ஃபைனான்ஸ் எம்பிஏ பட்டம் வாங்கிக் குடுத்தும், கோர்ட் அறிவிப்பாளன் வேலை செஞ்சுகிட்டிருக்கேன்!" என்றான்.

ஷாலினி முறுவலுடன், "உஷ்! கிரண், சும்மா இரு. சூர்யா என்ன சொல்றார் என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்! எனக்கே ரொம்ப ஆர்வமா இருக்கு."

அகஸ்டாவே மீண்டும் மௌனத்தைக் கலைத்தாள். "சூர்யா, திஸ் ஈஸ் டூ மச்! என்னால துளிக்கூட நம்பமுடியலை. நீங்க எல்லாரையும் பணத்தேவைபத்தி விசாரிக்கறப்பவே தடுக்கணும்னு தான் நினைச்சேன். இப்ப என்னன்னா வெளிப்படையாவே இப்படி குற்றம் சாட்டறீங்களே!

இவங்கமேல எனக்குப் பெரும் நம்பிக்கை இருக்கு!"

கிரண் இடையில் தாவினான். "அய்யோ பாவம், ஸ்வீட் இன்னொஸண்ட் அகஸ்டா! நாங்க விசாரித்த கேஸ்களில எல்லாம் நிறுவனத் தலைவர்கள் பாடற அதே பாட்டுதான் இது. ஒவ்வொரு முறையும் தப்புத் தாளமாயிடுது! அவங்க அப்படி சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு மில்லியன் டாலர் கிடைச்சா நான் இப்ப பில் கேட்ஸைவிட பெரிய பில்லியனர் ஆயிட்டிருப்பனே! குடுக்கறீங்களா அகஸ்டா?!"

அந்த இக்கட்டான நிலையிலும் அகஸ்டாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. இருந்தாலும், "அது உங்க அனுபவமாயிருக்கலாம். ஆனா இவங்களோட என் அனுபவத்தால அதை என்னால நம்ப முடியலை. எத வச்சு சொல்றீங்க சூர்யா?"

சூர்யா விளக்கலானார். "நிர்வாகக் குழுவினரில் யாருக்கு நிதித்தேவை இருக்குன்னு விசாரிச்சதுல நால்வருக்கும் இருக்குன்னு தெரியவந்தது. அதனால யாரையும் சந்தேகத்துக்கு விலக்க முடியலங்கறதுனால, ஒருவேளை நாலு பேரும் சேர்ந்தே செஞ்சிருக்கலாம்னு யோசிச்சேன்!"

நால்வரும் உடனே எழுந்து மீண்டும் கூச்சலிட்டனர். கிரண் மீண்டும் புத்தகத்தை எடுத்து படால் படாலென பலமுறை அடித்து கைநீட்டி உட்காருமாறு சைகை செய்தான். அவர்கள் அமைதியாக அமரவும், ஷாலினியிடம் கிரண், "கத்திக் கத்தித் தொண்டைக் கிழிஞ்சுடுச்சு! அதான் சும்மா சைகை" என்று விளக்கவும் அவள் விளையாட்டாக அவன் மண்டையில் தட்டி முறுவலுடன் உதட்டில் விரலை வைத்து அடக்கினாள்.

சூர்யா விரைவாகத் தொடர்ந்தார். "ஆனால் தங்கள் தங்கள் பணத்தேவைகளை ரொம்ப ரகசியமாக வைக்கப் பெரும் முயற்சிகள் எடுத்துகிட்டதால, இந்தப் பிரச்சனை ஏற்படுத்தவேண்டிய காரணத்தை பகிர்ந்து கூட்டு முயற்சிக்கு முன்வந்திருக்க மாட்டாங்கன்னு முடிவுக்கு வந்தேன். அப்படின்னா இவங்களில் ஒருவர்மட்டுமே செஞ்சிருக்கணும். அது யாரா இருக்கலாம்னு யோசிச்சதுல உடனே தோணலை. ஆனாலும் முதல்ல நான் சந்தேகிச்சது ஏற்கனவே பண ஊழலில் சிக்கிப் பதவி இழந்த ஜேகப் ரோஸன்பர்கைத்தான்."

மற்ற மூவரும் நிம்மதிப் பெருமூச்சு விடவும், ஜேகப் அளவுகடந்த சினத்துடன் எழுந்து "ஹேய், ஹேய்! வாட்ச் இட் மேன்! ஒரு தடவை தப்பு செஞ்சுட்டா வாழ்நாள் பூரா சந்தேகமா?" என்று கத்தவும், சூர்யா கையை உயர்த்திக் காட்டி, மறுதலித்தார்.

"கவலைப்படாதீங்க ஜேகப், பதற்றம் வேணாம். அந்த சந்தேகம் எனக்கு சீக்கிரமே போயிடுச்சு. ஏன்னா இந்தப் பிரச்சனை செய்ய ரொம்ப அதிமுன்னேறிய தொழில்நுட்பம் தெரிஞ்சிருக்கணும். ஆனா ஏற்கனவே இது கூட்டுமுயற்சியா இருக்க முடியாதுன்னு முடிவுக்கு வந்ததுனால ஜேகப் வேற யாரோடயோ சேர்ந்துதான் செய்ய வேண்டியதிருந்ததால், அவர் இந்தப் பிரச்சனைக்குக் காரணமிருக்க முடியாதுங்கற முடிவுக்கு வந்தேன்."

இப்போது ஜேகப் முகத்தில் நிம்மதி முறுவல் மலரவும், தொழில்நுட்ப நிபுணர்களான மற்ற மூவரும் கோபமடைந்தனர். அவர்கள் குரலெழுப்புமுன் கையை உயர்த்திக் காட்டித் தடுத்த சூர்யா விரைவாகத் தொடர்ந்தார்.

"இந்தப் பிரச்சனையில் இரண்டு உட்பகுதிகள் இருக்கு. ஒண்ணு முழு அங்கப் பகுதிகள் சரியாகப் பொருந்தாமலிருப்பது. இன்னொண்ணு, மூல உயிரணுப் பசை சரியாக ஒட்டாமல் போவது. அவை இரண்டிலுமே அவ்வப்போது சிறிய பிரச்சனை உருவாக்க முடிந்தவர் இந்த மூன்று தொழில்நுட்ப வல்லுனர்களில் ஒருவருக்கு மட்டும் சாத்தியம் உள்ளதா என்று யோசித்துப் பார்த்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறை நிபுணர்கள், ஆனால் இந்தப் பிரச்சனைக்கு மூன்று துறைத் திறனுமே தேவை. ஆனால் கூட்டுமுயற்சி இருக்கமுடியாது என்று ஏற்கனவே நினைத்ததால், மூன்று திறனும் ஓரளவுக்குப் பெற்றிருக்கும் ஒருவரே இதற்கு மூலகர்த்தா என்று உணர்ந்தேன். அதனால் இவர்களில் எவராவது ஒருவருக்காவது சந்தேகவிலக்கு அளிக்கலாமா என்று யோசித்துப் பார்த்தேன். ஆனால் மூவரும் ஒன்றுசேர்ந்தே முழு அங்கப் பதிப்புத் தடங்கல்களை நிவர்த்தித்தனர் என்று அகஸ்டா கூறியதால், பிரச்சனைக்குத் தேவையான திறனை ஒருவர் மற்றவரிடமிருந்து மூவருமே ஓரளவுக்கு யாருக்கும் தெரியாமல் பயின்று கொண்டிருக்கலாம்; அதனால் மூவரில் ஒருவரையும் நிரபராதியாக ஒதுக்கிவிட முடியாது என்ற முடிவுக்குத்தான் வரமுடிந்தது."

இதைக் கேட்டவுடன் அலெக்ஸ், நீல், சுரேஷ் மூவரும் மிதமிஞ்சிய கோபத்தோடு எழுந்தனர். ஆனால் அவர்கள் வாய் திறக்கும்முன் கிரண் புத்தகத்தை உயரத் தூக்கி மேஜைமேல் அடிப்பதாக பாவனைசெய்து மௌனமாக அமருமாறு வாய்பொத்தி, கையை மேலும் கீழும் ஆட்டி சைகை செய்யவே, மூவரும் சினம் தணியாமல் ஆனாலும் பேச்சை அடக்கிக்கொண்டு அமர்ந்தனர்.

சூர்யா மூச்செடுத்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தார். "மூவரையுமே ஒதுக்கமுடியாததால், பதிப்பான்களைக் கூர்ந்து ஆராய்ந்தால் எதாவது தடயம் கிடைக்கலாம் என்று பரிசோதித்தேன். அப்போதுதான் அதுவரை மிகச் சாமர்த்தியமாக தன் தீப்பணிகளைச் செய்துவந்த இந்தப் பிரச்சனைக்கு மூலகர்த்தா, இந்த விசாரணை அளித்த பதட்டத்தாலோ என்னவோ, தவறி தன்னைக் காட்டிக்கொடுக்கக் கூடிய ஒரு முக்கியத் தடயத்தை எனக்கு அளித்துவிட்டார்!"

அகஸ்டா பொங்கிவந்த ஆர்வத்தை அடக்க முடியாமல், "காட்டிக்கொடுக்கும் தடயமா, என்ன அது? அந்தக் கிராதகன் யார்? ப்ளீஸ் சொல்லுங்க சூர்யா" என்று கெஞ்சினாள்.

ஆனால் சூர்யாவோ, தலையசைத்து மறுத்துவிட்டு, விளக்கத்தைத் தொடர்ந்தார். "சொல்றேன். ஆனா அதுக்கு முன்னால அந்த மூலகர்த்தா யாருன்னு அடையாளம் காட்டிட்டு, ஏன் அந்த முடிவுக்கு வந்தேன்கறதை மொத்தமா விளக்கறேன்!"

அடுத்து வந்தது சூர்யாவின் அதிரடி விளக்கம்!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com