'நரபட்சணி' நாவலிலிருந்து சில பகுதிகள்
நாற்சந்தியில் மக்கள் மெதுவாக, பெரிய கூட்டமாக, கூடிவிட்டார்கள். மனிதனிடம் ஒரு கெட்டகுணம் உண்டு. புதியதாக எதையாவது பார்க்கும் குணம். அது அவசியமா இல்லையா என்பதைப்பற்றி அவன் சிந்திப்பதில்லை. அவன் மனம் இதுவரை பார்த்திராத அபூர்வக் காட்சியினால் ஈர்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட ஆவலினால் உந்தப்பட்டு மக்கள் வேகவேகமாக அந்தக் கூட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் நடக்கும் காட்சி கண்ணுக்குத் தெரியாதவர்கள், காலை உன்னி உன்னிப் பக்கத்து மனிதனின் தோளில் கைவைத்து அருகில் இருப்பவர்களிடம் 'என்னாச்சு என்னாச்சு' என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

'என்னாச்சு' என்பதை அறிய மக்களுக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை. அமர்க்களத்தினுடன் சூழ்ந்திருப்பவர்களின் வட்டம் ஒரு ஓரமாக உடைந்தது. உள்ளிருந்து சிவப்புத் தலைப்பாகையுடன் ஒரு போலீஸ்காரன் வெளிப்பட்டான். அவனுக்குப் பின்னால் சில இளைஞர்கள் தங்கள் திடகாத்திரமான கைகளில் ஒரு மனிதனை இழுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு திருடனைப் பிடித்திருக்கிறார்கள். பாதையில் அவனைத் தரதரவென்று இழுத்துப்போகும் காட்சி பார்க்கவே பயங்கரமாக இருந்தது. ஆனால் அப்படி இழுத்து வருவது அவர்கள் தவறில்லை. குற்றம் அவனிடம்தான். காரணம் அந்தத் திருடனுக்கு ஒரு கால்தான் இருந்தது.

திருடனும் திருட்டும் எவ்வளவுதான் வெறுக்கத்தக்கதாக இருந்தாலும் ஏதாவது புதுமையாகப் பார்க்க வேண்டும் என்ற மனிதனின் ஆர்வம் சில சமயம் வெறுக்கத்தக்க பொருள்களைப் பார்க்கும்பொழுதும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

சத்தம் வந்து கொண்டிருந்தது. 'அடி ராஸ்கெல்... ஒத... பட்டப்பகல்ல திருட்டு'. இழுத்து வரப்பட்ட திருடனின் மீது எவ்வளவு அடிமேல் அடி விழுந்து கொண்டிருந்ததோ அவ்வளவு சுவாரசியம் மக்களிடம் கூடிக்கொண்டே வந்தது.

மிகவும் அதிகம் அடிபட்டதனால் திருடன் நாய் மாதிரி மூச்சிரைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய உடலில் அங்கும் இங்கும் தோல் உரிந்து தாடை வீங்கி மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது 'விட்டுடுப்பா, பாவம் அடிபட்டு செத்துடப்போறான்.'

இரக்கப்பட்டு மக்கள் சொன்ன இந்தச் சொற்கள் முதலிலேயே அந்தக் கூட்டத்தில் கேட்கவில்லை. இரண்டுக்குப் பதிலாக ஒன்றரைக் காலையும் மற்றொருவன் கையில் அவனுடைய ஊன்று கட்டையையும் பார்த்ததும் அதேமாதிரி மற்றவர்கள் குரல்கொடுக்க ஆரம்பித்தனர்.

மற்றொரு முனையில் குரல் கேட்டது. 'விட்டுடுப்பா விட்டுடு பாவம் நொண்டி.'

'எப்படி விடமுடியும்?' ஒரு பெருத்த குள்ளமான மனிதன் கத்தினான். "நஷ்டப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். நீங்கபாட்டுக்கு சொல்லிட்டீங்க விட்டுடுங்கன்னு. கொஞ்சம் போச்சுன்னா நூத்துக்கணக்கா நஷ்டமாகி இருக்குமே?"

லூதியானா போலீஸ் சதுக்கம் எண் மூன்றின் அருகில் சைந்தா என்ற நாற்சந்தியில் இந்த சம்பவம் நடந்துகொண்டிருந்தது. அஸ்தமித்துக் கொண்டிருக்கும் மாலை வேளையில் இந்தச் சத்தம் பயங்கரமாக, காட்டில் டஜன் கணக்கான சிங்கங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து கர்ஜிப்பதைப்போல இருந்தது.

நாற்சந்தியின் அருகில் பாதை ஓரத்தில் ஓரிடத்தில் மிருதுவான ரோமத்தால் செய்யப்பட்ட கம்பளியில் சாயம் ஏற்றும் ஒரு தொழிற்சாலை இருந்தது. அதில் நிறைய மனிதர்கள் வேலை பார்த்து வந்தனர். காய்ந்த சால்வைகளை எடுத்து மடித்து வைத்துக்கொண்டிருந்த போது அந்த நொண்டித் திருடன் ஊன்றுகட்டையின் உதவியுடன் நடந்துவந்து குழாயிலிருந்து தண்ணீர் குடிக்கும் சாக்கில் உள்ளே நுழைந்துவிட்டான். திரும்பும்பொழுது வெளியில் நடந்துகொண்டிருப்பவர்களின் கண்களில் படாமல் ஒரு சால்வையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். மக்களின் கவனமின்மை ஒருபுறம், மாலைநேர மங்கிய இருட்டு ஒருபுறம் இரண்டும் சேர்ந்து அவனுக்குத் துணை புரிந்தன. ஆனால் அதிர்ஷ்டம் அவனுக்குத் துணை புரியவில்லை. அதை எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே எதிரில் ஒரு தொழிலாளி வந்துவிட்டான். திருடனின் கக்கத்தில் சால்வையைப் பார்த்ததுமே அவன் கத்த ஆரம்பித்துவிட்டான். திருடன் பிடிக்கப்பட்டு விட்டான்.

ரொம்ப நேரம்வரை காதைத் துளைக்கும் வாதம் நடந்துவந்தது. சிலர் திருடனை விட்டுவிடும்படி வேண்டிக்கொண்டனர். சிலர் அவனைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கும்படிக் கூறினர். கடைசியில் நொண்டிக்கால் அவனுக்கு உதவியது. அதைப்பார்த்துத் தானே இரக்கமுள்ளவர்களின் எண்ணிக்கையும் கூடியது. சிலர் முன்வந்து அவனை விடும்படி வேண்டிக் கொண்டனர். பலனாக நாலைந்து அடி கொடுத்துவிட்டு அவனை விட்டுவிட்டனர். அவன் கீழே விழுந்ததும் ஊன்றுகோலும் அவன்மீது விழுந்தது.

கூட்டம் கலைந்து இன்னும் சிலரின் திட்டு அவன் காதுகளில் விழுந்து கொண்டிருந்தது. அவனுக்குத் தன் நிலைமை புரிந்து உடலின் முழுபலத்தையும் திரட்டி ஒருவாறு எழுந்து நிற்பதில் வெற்றிபெற்றான். அவனுடைய ஊன்றுகோலில் லேசான கீறல் விழுந்துவிட்டது. ஊன்றுகோலில் தன் முழுபலத்தையும் கொடுத்து மெது மெதுவாக, ஓரமாக நடக்க ஆரம்பித்தான்.

இப்படியே ஆடி அசைந்து அங்கிருந்து வெளியே வந்தான். இருள் அடர்ந்து விட்டிருந்தது. அவனுடைய வீடு இதே பகுதியில் ஓரமான பழைய குடியிருப்பில் இருந்தது. ஆனால் இப்பொழுது அவனுக்கு வீடுசெல்லும் எண்ணம் இல்லை. வீட்டுக்குச் செல்லும் வழியை விட்டுவிட்டு இஸ்லாமியா ஸ்கூல் ரோடில் நடந்துசென்று ஒரு தண்ணீர்க் குழாயின் அருகில் நின்றுவிட்டான்.

குழாயில் முகம் கை கால் கழுவி வாய் கொப்பளித்து பல்லிலுள்ள ரத்தத்தைச் சுத்தப்படுத்தினான். அடிபட்டதால் வந்த வேதனையைவிட வெயில்தரும் வேதனை அதிகமாக இருந்தது. துணியைக் கழற்றிவிட்டுக் குழாயில் குளிக்கலாம்போல் இருந்தது. ஆனால் முதலில் சர்க்கார் குழாயில் குளிப்பது குற்றம். இரண்டாவது இந்தக் கடும்வெயிலில் குளித்தால் தடுமம் வருமோ என்ற பயம். குளிப்பதற்குப் பதிலாகத் தண்ணீரை எடுத்துச் சூட்டைத் தணித்துக்கொண்டான். காயம்பட்ட இடத்தைச் சரிசெய்ய முயன்றான். பிறகு குழாயிலிருந்து சிறிது தூரம் சென்று நீளமாகப் படுத்துவிட்டான். கண்களை மூடி இன்றைய கெட்ட நிகழ்ச்சியைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தான். தண்ணீர் உடலில் பட்டதனாலேயும் காற்று வீசுவதனாலேயும் கொஞ்சம் செளகரியமாக உணர்ந்தான். கொஞ்சநேரம் படுத்தே கிடந்தான். பிறகு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் பயமாகவும் இருந்தது. இதை மறைக்கவும் முடியாது. அவனுடைய வீங்கிய முகம் காட்டிக் கொடுத்துவிடுமே. இருட்டான பின் வீடு சென்று பின் பேசாமல் கட்டிலில் சென்று படுத்துவிட வேண்டும். இதை விட்டால் வேறு வழி ஒன்றும் இல்லை. காலையில் வீக்கம் கொஞ்சம் குறைந்துவிடும். இல்லாவிட்டால்... ஏதாவது சாக்குப்போக்கு... கீழே விழுந்துவிட்டேன்... அல்லது... ஓடிவந்த மாடுமுட்டி... இப்படி ஏதாவது சாக்கு சொல்லித் தப்பிவிடலாம். எழுந்து வீட்டைநோக்கி நடந்தான்.

ஊன்றுகோலால் தான் அவன் நடந்தான் என்றாலும் அவன் கால் ஒத்துழைக்க மறுத்தது. எப்படியும் வீட்டுக்குப் போகத்தான் வேண்டும். வேறு என்ன செய்ய? கோபம், அவமானம், எதிர்காலத்தைப் பற்றிய கவலை ஆகியவற்றினால் அவன் மனம் மயானத்தில் நெருப்பு எரிவதுபோல் எரிந்துகொண்டிருந்தது. நடந்த சம்பவத்தை நினைத்ததுமே அவனுடைய கால் நின்றுவிடுகிறது. வரும்காலத்தில் நிகழப்போகும் எதை நினைத்தாலும் பெரிய இரும்புத்துண்டை விழுங்கியதைப் போலவும் அதை ஜீரணிக்க அவன் திண்டாடித் திணறுவதைப் போலவும் தோன்றியது. இருந்தாலும் வீட்டின்மீதுள்ள மோகம் அவன் கால்களை இழுத்துச் சென்றுகொண்டிருந்தது.

ஊனமுற்ற அடிபட்ட உடலுடன் அவன் ஆடி ஆடிச் சென்று கொண்டிருந்தான். வீட்டை இல்லை சாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைப்போல் இருந்தது. வாசல்படியில் காலை வைத்ததுமே நெருப்புத்துண்டம் போன்ற சத்தம் அவன் காதுகளில் பாய்ந்தது.

"ஊன்றுகோல் வெச்சு டக்கு டக்குன்னு நடந்து வெறும் கையோட வந்துட்டீங்களா? போகும்போது என்ன சொன்னேன் உங்ககிட்ட?"

வீட்டில் நுழைந்ததுமே சுலோசனா புருஷனை அதட்டினாள். அதுமட்டும் அவளுக்குத் திருப்தி அளிக்கவில்லை. இன்னும் திட்டு இருக்கு. காலையில் வெளியில் செல்லும் பொழுது பஜாரிலிருந்து வாங்கிவருவதற்காக ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்திருந்தாள். ஒருமுறை அல்ல மூன்றுமுறை எண்ணி எண்ணிப் பார்த்துக் கொடுத்திருந்தாள். ரொம்ப நாளாகவே எல்லா சாமான்களும் தீர்ந்துவிட்டிருந்தன. நாள் முழுவதும் எண்ணி எண்ணிப் பார்த்து விட்டிருந்தாள். புருஷன்மீது கோபம் அதிகரித்துக்கொண்டே வந்தது. அடிக்கடி அவனுடைய கடமையை ஞாபகப்படுத்தித் திட்டிக்கொண்டே இருந்தும் அவன் இப்படிக் கடமை மறந்து அலட்சியமாக இருப்பது மிகவும் அநியாயமாகப் பட்டது அவளுக்கு.

அடுப்படிக்கு ஒரு பெண்ணுக்கு நூறுவிதமான சாமான்கள் வேண்டி இருக்கும். இதில் உப்பு போன்ற சின்னச் சாமான் குறைந்தாலும் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. இதற்கெல்லாம் பொறுப்பு யார் என்று கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இன்று சீக்கிரமாகவே சிங்காராசிங் வீட்டிலிருந்து கிளம்பும்போதே சுலோசனா நினைவுபடுத்தினாள். "ராத்திரிக்கு மாவு இல்லை. விறகு வாங்கிக்கொண்டு வாங்க. துணி துவைக்கிற சோப்பும் தீர்ந்திடிச்சி. அப்புறம்... மண்ணெண்ணை... அப்புறம்..." இதற்கெல்லாம் ஒரே பதில்தான் இருந்தது சிங்காராசிங்கிடம்.

"சரி வாங்கி வரேன்."

பெண்மனம் ஆணைவிட அதிகம் உணர்ச்சிமயமானது. வருத்தப்படும் பொழுது அவள் தன் கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நினைவு கூர்கிறாள். தன் கடந்த காலத்தை எண்ணி சுலோசனா இன்று முழுதும் சோகமாக இருந்தாள். சிலசமயம் தன் தாய்-தந்தையரை, துரதிருஷ்டத்தை, சிலசமயம் தன் புருஷனை, திட்டிக்கொண்டிருந்தாள். அடிக்கடி அவளுடைய மனம் வேதனையைக் கொடுத்தது. எந்த நாசமாகப்போகிற வேளையில் இந்த பொறுப்பற்ற கொடூரமான மனிதனுடன் தன் வாழ்க்கை பிணைந்ததோ? இதைவிட வாழ்க்கை முழுவதும் கன்னியாகவே இருப்பது எவ்வளவோ மேல்.

கடுமையான வெயிலினாலும் வெக்கையினாலும் அவளுடைய நிலைமை மிகமோசமாக இருந்தது. இது போதாதென்று குறுகிய இருட்டான ஜன்னலே இல்லாத ஒரு சிறிய அறை. அதற்குப் பின்னால் ஒரு இருண்ட குட்டி அறை. சின்னமுற்றம் இருந்தாலாவது காற்று கொஞ்சமாவது எட்டிப்பார்க்கும். ஆனால் இருந்தால்தானே? கிழக்குப்பார்த்து கதவு இருப்பதனால் மதியம் ஆனதும் வீடுமுழுவதும் சூளை அடுப்பு மாதிரி கொதிக்கும். தவிர வீட்டில் ஒரு கைவிசிறிகூடக் கிடையாது. தினமும் அவள் சிங்காராசிங்கிடம் விசிறி வாங்கிவரச் சொல்வாள். தினமும் அவனும் "சரி" என்று சொல்வான். இந்தப் பயங்கர வெப்பத்திலிருந்து தப்புவதற்கு ஒரேவழி அவளிடமுள்ள அகலமான ஒரு அட்டை. அதுவும் இரண்டு துண்டாகக் கிழிந்திருந்தது.

மேலும் இது ஒருநாளைய கஷ்டமில்லையே? மதியம் வெப்பத்தின் உக்ரம் உயரும்போது அவள் அந்த அட்டையை எடுத்துக்கொண்டு வந்து வெளியே அமர்ந்துவிடுவாள். ஒருகணம் அவளுடைய பார்வை எதிர்வீட்டு இரண்டாவது மாடியில் படும். அதனுடைய அலங்காரமான கதவு அடிக்கடி திறந்தே இருக்கும். அதன்மேல் உள்ள மின்விசிறி முழு வேகத்துடன் சுற்றிக்கொண்டே இருக்கும். அவள் அந்த மின்விசிறியை ஒருமுறை பார்ப்பாள். உடனே அவளுள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் ஆசை விழித்தெழும். பின் யோசித்துக்கொண்டே இருந்துவிடுவாள். அந்த வீட்டுச் சொந்தக்காரன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி?

இன்றைய நாளை அவள் மிகவும் கஷ்டப்பட்டுக் கழித்தாள். ஒருவேளை நிரந்தரமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் அந்த மின்விசிறியையும் அதன் வேகத்தையும் பார்த்துத் தன் கையிலுள்ள அட்டை விசிறியை ஒப்பிட்டுக் கொண்டிருந்தாளோ என்னவோ? மின்விசிறியின் இனிமையான ஒலி அவள் காதுகளில் ஒலித்து அவளுடைய கோபத்தையும் குழப்பத்தையும் அதிகமாக்கிக் கொண்டிருந்தது. வெறும்கையுடன் வந்த சிங்காராசிங்கைப் பார்த்ததும் அவள் கோபத்திற்கு எல்லை இல்லாமல் போயிற்று. மனதிலுள்ள முழு கோபத்தையும் புருஷன்மீது அருவியாய்க் கொட்டிவிட வேண்டும் போலிருந்தது. ஆனால்...

"ஊன்றுகோலுடன் டக்டக்குனு சத்தப்படுத்திக்கிட்டு..." சுலோசனாவின் வாயிலிருந்து இந்தச் சின்னவாக்கியம் வெளிவந்து விட்டது. சுலோசனாவுக்கு என்ன தெரியும்? இந்தச் சின்ன வாக்கியம் அவனுக்கு ஆயிரம் திட்டுகளையும்விட அதிக கஷ்டத்தைக் கொடுக்கும் என்று?

சிங்காராசிங் கேட்டும் கேட்காததுபோல் இருந்தானா அல்லது அவனுடைய திருட்டுமனது அவனுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டதோ? சுலோசனாமீது ஒரு பார்வையும் தன் கை இடுக்கிலிருந்த ஊன்றுகோலின் மீது ஒரு பார்வையும் வைத்து வெடித்துவரும் தன் கோபத்தையும் விழுங்கிக்கொண்டான். பின் டக் டக் என்ற சத்தத்துடன் பின் அறைக்குச் சென்றுவிட்டான்.

புருஷனின் இந்த உதாசீனத்தினால் சுலோசனாவின் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. எப்பொழுதும்போல் சிங்காராசிங் பதிலுக்குப் பதில் கொடுத்து இரண்டு மூன்று திட்டும் திட்டி இருந்தால் ஒருவேளை சுலோசனாவின் கோபம் இவ்வளவு பெரிசாக எழும்பி இருக்காது.

இன்று கடைத்தெருவில் அவனுக்கு நேர்ந்த அவமானத்தைப் போல் என்றும் அவனுக்கு நேர்ந்ததில்லை. அவனுடைய கண்கள் உலர்ந்திருந்தாலும் ஒவ்வொரு அணுவும் வேதனையைக் கொடுத்தது. அவன் மனதில் பட்ட புண்களை ஆற்ற ஏதாவது ஆறுதலான வார்த்தைகள் மருந்துமாதிரி வேலை செய்யாதா என்ற எதிர்பார்ப்பில், உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை பட்ட அவமானத்தின் சுமை அவனை வீடுவரை இழுத்து வந்தது. சுலோசனாவின் வாயிலிருந்து ஊன்றுகட்டையைப் பற்றிய வார்த்தை வந்ததுமே அவனுடைய காயத்திற்கு, குளிர்ந்த சுகமான களிம்புக்குப் பதிலாகக் கூர்மையான கத்தியின்முனை அந்தக் காயத்தைக் குத்திக் குதறியது. கூட்டத்தில் பட்ட அடி உதையைவிட சுலோசனாவின் இந்த வாக்கியம் அவனுக்கு மிக அதிக வேதனையைக் கொடுத்தது. சின்னப் பறவையைப் பிடிக்கக் கழுகு அதைத் துரத்தும் பொழுது, சின்னப்பறவை தன் முழுபலத்தையும் திரட்டித் தன் கூட்டை நோக்கிப் பறக்கிறது. ஆனால் அந்தக் கூடே எரிந்து கொண்டிருந்தால்... அது எங்கு போகும்? சிங்காராசிங்கின் நிலைமையும் இப்பொழுது அப்படித்தான்.

உள்ளே சென்ற அவன் ஊன்றுகோலைச் சாய்த்து வைத்துவிட்டு உயிரற்றவன் போல் கட்டிலில் போய் விழுந்தான்.

இப்பொழுது அவனுடைய சிந்தனையெல்லாம் அவனுடைய உடல் வேதனையைப் பற்றியது அல்ல. சில நிமிடங்கள் முன்பு நடந்த நிகழ்ச்சியைப் பற்றியும் அல்ல. அவனுடைய பார்வை அந்த ஊன்றுகோலின் மீது இருந்தது. வெறுக்கத்தக்க அந்த ஊன்றுக்கட்டையை தூள்தூளாக்கி அடுப்பில் போட்டு எரித்துவிட வேண்டும்போல் இருந்தது. அவமானம், தன்மானமிழப்பு, வெட்கங்கெட்டதனம் இவற்றின் கடுமையான அனுபவம் இதுவரை அவனுக்கு வந்ததே இல்லை.

தமிழில்: முத்துமீனாட்சி
பஞ்சாபி மூலம்: நானக்சிங்

© TamilOnline.com