முத்துமீனாட்சி
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என இரு தளங்களிலும் இயங்கிவருபவர் முத்துமீனாட்சி. இயற்பெயர் வசந்தா சியாமளம். பிறந்தது, வளர்ந்தது, படித்தது நாக்பூரில். தந்தை தனியார் நிறுவன அதிகாரி. தாயார் வீணை வித்வான். தாயிடமிருந்து இசைகற்றுத் தேர்ந்தார். உயர்கல்வியை முடித்தவுடன் திருமணம். கணவர், காஸ்யபன் மதுரையில் எல்.ஐ.சி. அதிகாரி. மணமானதும் மதுரைக்கு வந்த முத்துமீனாட்சி, ஓய்வுநேரத்தில் பக்கத்துவீட்டுக் குழந்தைகளுக்கு ஹிந்தி கற்றுக்கொடுத்தார். அதைச் செய்துகொண்டே எம்.ஏ., பி.எட். பயின்றார். மதுரை மகாத்மா காந்தி பள்ளியில் ஹிந்தித்துறையில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. கணவர் காஸ்யபன் அடிப்படையில் ஓர் எழுத்தாளர். பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் பற்றுடையவர். களப்பணியாளரும் கூட. அவர், மனைவியின் திறனறிந்து, எழுத ஊக்குவித்தார். முதல் சிறுகதை 'அடி' மங்கையர் மலரில் பிரசுரமானது. அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 'தாமரை' இதழில், 'குறையொன்றுமில்லை' என்ற சிறுகதையை எழுதினார். ஆரம்பகாலத் தயக்கங்கள் விலக, சூட்சுமம் பிடிபட, தொடர்ந்து எழுதினார். தாமரை, செம்மலர், தினபூமி போன்ற இதழ்களில் சிறுகதைகள் தொடர்ந்து வெளியாகின.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி நன்கறிந்த முத்துமீனாட்சி மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தத் துவங்கினார். ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்ததை வாசிப்பதைவிட, மூலத்திலிருந்தே மொழிபெயர்த்ததை வாசிக்கும்போது, அது மூலப்படைப்பையே வாசித்த அனுபவத்தைத் தரும் என்பதால் ஹிந்தியிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஹிந்திக்கும் மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டார். முதல் ஹிந்தி-தமிழ் மொழிபெயர்ப்பாக 'அஜிமுல்லாகான்' வெளிவந்தது. முதல் சுதந்திரப் போராட்டம் எப்படி, யாரால் நிகழ்ந்தது என்பதை மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த வரலாற்றாசிரியர் ஆர்.ஆர். யாதவ் வட இந்தியா முழுவதும் சென்று ஆராய்ந்து ஒரு நூலாக வெளியிட்டார். அதன் தமிழ் மொழிபெயர்ப்பே 'அஜிமுல்லாகான்.' அது அஜிமுல்லாகான், ரங்கோ பாபுஜி, அஜிமன் பாயி போன்றோரின் வீரம்செறிந்த போராட்டங்களையும், மறைந்திருந்த பல வரலாற்று உண்மைகளையும் உலகிற்கு வெளிக்கொணர்ந்தது. அதற்குக் கிடைத்த வரவேற்பு முத்துமீனாட்சிக்கு மேலும் பல நூல்களை மொழிபெயர்க்கும் ஆவலைத் தந்தது. தொடர்ந்து 'புதிய உலகம்' என்ற தலைப்பில் பகத்சிங்கின் தோழர் யஷ்பால், முற்போக்கு இந்திச் சிறுகதையின் பிதாமகன் பிரேம்சந்த், விடுதலைப் போராட்டக்காலப் படைப்பாளி வியோகிஹரி, Click Here Enlargeபீகார் செங்கொடி இயக்கத்தில் தம்மைப் பிணைத்துக் கொண்ட இஸ்ராயில், தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராம்தரஷ் மிஸ்ரா, மலையாள எழுத்தாளர் கேசவதேவ் ஆகியோரின் கதைகளைத் தமிழில் அளித்தார். பாரதி புத்தகாலயம் இந்நூலை வெளியிட்டிருந்தது. இந்திய இலக்கிய உலகை அறிந்துகொள்ள மிகச்சிறந்த வாயிலாக இச்சிறுக்கதைகள் அமைந்துள்ளன. இஸ்ராயிலின் 'வித்தியாசம்' கதை வர்க்க வேறுபாட்டைப் படம்பிடித்துக் காண்பிக்கிறது. யஷ்பாலின் 'புதிய உலகம்' தொழிலாளர்களின் போராட்டத்தை, பெரும் முதலாளிகளின் பூர்ஷாவத்தனத்தை, இவற்றினோடு சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களையும் படம்பிடித்துக் காண்பிக்கிறது. ராம்தரஷ் மிஸ்ராவின் 'பொட்டப்புள்ள' கதை பெண்ணடிமைத்தனத்தை, அது பெண் குழந்தையாக இருக்கும்போதே எப்படித் துவங்கி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.

சம்ஸ்கிருதத்தின்மீது கொண்ட ஆர்வத்தால் அம்மொழியைப் பயின்று முதுகலைப்பட்டம் பெற்ற முத்துமீனாட்சி, அடுத்து சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து சம்ஸ்கிருதத்திற்கும் மொழிபெயர்க்கத் துவங்கினார். கணவர் காஸ்யபனின் சிறுகதைகளையும், செம்மலர், தாமரை போன்ற இதழ்களில் வெளியான சிறுகதைகளையும், கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற திரு. முருகானந்தம் எழுதிய 'போன்ஸாயின் நிழல்கள்' என்ற கதையையும் ஹிந்தியிலும், சம்ஸ்கிருதத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டார். காஸ்யபனின் கதைகள் 'ஜகதா' என்ற தலைப்பில் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியின் முன்னுரையுடன் ஹிந்தியில் வெளியானது. அதே கதைகள், அதே தலைப்பில் சம்ஸ்கிருதத்திலும் வெளியாயின. இம்முயற்சிகளுக்காக முத்துமீனாட்சிக்கு நல்லி திசையெட்டும் விருது கிடைத்தது. முத்துமீனாட்சி ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய 'Beat' என்ற சிறுகதை 'Transfire' இதழில் வெளியாகியுள்ளது

மொழிபெயர்ப்புபற்றி முத்துமீனாட்சி, “மொழிபெயர்ப்பு என்பது அவ்வளவு சுலபமில்லை. அர்த்தமும் உணர்ச்சியும் மாறிவிடக்கூடாது. சில இடங்களில் மூலமொழியில் பழமொழி இருக்கும். அதை அப்படியே மொழிபெயர்க்க முடியாது. அந்தச் சமயத்தில் தமிழ்ப் பழமொழியில் எது சரியாகப் பொருந்துமோ அதைப் பயன்படுத்துவேன். இப்போது ஆண்டாள், கோப்பெருந்தேவி, பிசிராந்தையார், திருவள்ளுவர், அவ்வையார், பாரி வள்ளல் கதைகளை மொழிபெயர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறேன்” என்கிறார். இவர் எழுதிய மற்றும் மொழிபெயர்த்த சம்ஸ்கிருதச் சிறுகதைகள், கவிதை, கட்டுரைகள் சம்ஸ்க்ருத ஸம்பாஷணம், ரசனா, சம்ஸ்க்ருத பவிதவ்யம், சம்பாஷண சந்தேஷா போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. ஸரிதா, காதம்பரி (ஹிந்துஸ்தான் டைம்ஸ் துணை இதழ்) போன்ற ஹிந்தி இதழ்களிலும் இவரது சிறுகதைகளும், மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் வெளியாகியுள்ளன. சாகித்ய அகாதமி விருது பெற்ற நானக்சிங் அவர்களது 'நரபக்ஷிணி' நாவலை சாகித்ய அகாதமிக்காக தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூல்பற்றி “இந்திய மொழிகளின் நவீன இலக்கியம் குறித்து அறிய விரும்புபவர்களுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய ஒன்று” என்கிறது தினமணி. ராகுல ஸாங்க்ருத்யாயன் எழுதிய 'வால்காவிலிருந்து கங்கைவரை' இவரது செம்மையான மொழியாக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கிறது. இதுவரை ஏழு நூல்கள் வெளியாகியிருக்கின்றன.

எந்த ஆரவாரமுமின்றி சுயவிருப்புடன் மொழிபெயர்ப்பு இலக்கிய சேவை செய்துவரும் முத்துமீனாட்சி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர். பொதுவுடைமைக் கொள்கைகளில் மிகுந்த ஈர்ப்புடையவர். 75 வயது கடந்தும் கார் டிரைவிங், வீணை வாசிப்பு, எழுத்து, மொழிபெயர்ப்பு என்று தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார். மகள் ஹன்ஸா காஷ்யப் வழக்குரைஞர், எழுத்தாளர். சிறந்த ஓவியரும்கூட மகன் சத்தியமூர்த்தி, நாக்பூரில் தீயணைப்புத் துறையில் பணியாற்றுகிறார். கணவர் காஸ்யபனுடனும், மகன் குடும்பத்தினருடனும் நாக்பூரில் வசித்துவருகிறார் முத்துமீனாட்சி.

அரவிந்த்

© TamilOnline.com