ஷாந்தி: கலிபோர்னியாவை மெய்மறக்கச் செய்த இசைநிகழ்ச்சி
2000 பேர் நிறைந்த அரங்கில், தம்பூரா இசைக்க, கருப்பும் பொன்னிறமும் கலந்த ஆடைகளை அணிந்த 150 பாடகர்கள் வழங்கும் சேர்ந்திசை நிகழ்ச்சிக்குத் திரை விலகும் கணத்தைக் கற்பனை செய்யுங்கள். கல்யாணி ராகம் மெல்லலையாக உருவெடுக்கிறது; அதனுடன் பெரிய இசைக்குழுவின் பின்னணியிசை இணைகிறது, பின்பு நடனக்கலைஞர்கள் கங்கை நதியின் ஓட்டத்தை இணைப்பதுப்போலச் சீராக மேடையில் இயங்குகிறார்கள். இப்படித்தான் "ஷாந்தி-ஓர் அமைதிப் பயணம்" தொடங்கியது.

2004ல் சின்சின்னாடியில் தொடங்கி, 12 ஆண்டுகள் கழித்து கலிஃபோர்னியாவின் கூப்பர்டினோவில், ஃப்ளின்ட் சென்டர் அரங்கில் ஏப்ரல் 30 அன்று நிகழ்த்தப்பட்டது. இந்தியாவின் 5000 வருடப் பாரம்பரியத்தைப் பற்றிய ஒலி, ஒளி, நடன சேர்ந்திசை நிகழ்வாகும் இது. சின்சின்னாட்டி இசைமைப்பாளர் Dr. கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் கற்பனையில் விளைந்தது. இந்திய அமெரிக்க சேர்ந்திசை அமைப்புகளின் முன்னோடியாகக் கருதப்படுபவர் கன்னிக்ஸ்.

ஷாந்தியின் இசையமைப்பு 'oratorio' இசைவகையைச் சார்ந்ததாகும். அது இந்திய மற்றும் மேற்கத்திய இசைகளின் கூறுகளைக் கொண்டு நேர்த்தியாகக் கோக்கப்பட்ட ராகாவளி.

துர்க்கா ராகத்தின் மூலம் நாகரீகத்தின் வெளிப்பாட்டையும் சரஸ்வதி ராகத்தின் மூலம் ஸ்வரங்களின் ஜாலத்தில் நிகழும் தியானத்தையும் ஷாந்தி நமக்குத் தருகிறது. ஹிந்துஸ்தானி ஸ்ரீ ராகத்தில் அமைந்த அஷாந்தி: என்கிற இசைத்தொகுப்பு, உணரவியலாத வாழ்வின் பல்வேறு பின்னிப் பிணைந்த பகுதிகளை உணர்த்துகிறது. தேஷ் ராகத்தில் அமைந்த புதுயுகப் பார்வை கூடிய நவபாரதம் என்ற தொகுப்புடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

நடனக்கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள், பாடகர்கள், சேர்ந்திசைக் கலைஞர்கள் போன்றோர்களால் சம்ஸ்கிருதம், தமிழ் மற்றும் பாலி மொழிகளில் இருந்து எடுத்துக் கோக்கப்பட்ட புனித ஆன்மீக வரிகளில் இசைக்கப்படுவது ஷாந்தி. இவ்வாறான இசைத்தொகுப்புகளில் இதுவே முதன்முதலானது.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவழிப் பாடகர்கள் 120 பேர் ஒத்திகைகள் பல செய்து அதன்பின் நிகழ்த்தப்பட்டது இந்த நிகழ்ச்சி. Santa Clara Chorale என்று அறியப்பட்ட மேற்கத்திய சேர்ந்திசைக் குழுவும் அதன் நடத்துனர் Dr. Scot Hanna-Weirவும், இந்தக் குழுவினருடன் மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் இணைந்தனர். இதற்கிடையில் 'சங்கம் ஆர்ட்ஸ்' அமைப்பின் மூலம் நடனக் கலைஞர்கள் மற்றும் அமைப்பாளர்கள் தத்தம் நடனப்பகுதிகளை அமைத்தனர். எஞ்சிய வாய்ப்பாட்டுப் பகுதிகளை விதிதா கன்னிக்ஸ் பாடினார்.

Dharma Civilizational Foundation என்ற இயக்கம், நிகழ்ச்சியை விரிகுடாப்பகுதியில் வழங்கியது. ஆன்மிகத் தலைவர் தாதா வாஸ்வானியின் சிறிய உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ரசிகர்களில் ஒருவர் "ஷாந்தி அசாதாரணமான பாட்டு, நடனம் போன்றவற்றால் எங்களை அமைதிக்கான பயணத்தையே நேரில் உணரும்படி செய்துவிட்டது" என்று வர்ணித்தார்.

"அடுத்து ஷாந்தியைச் சென்னையில் நிகழ்த்துவது என் கனவு" என்கிறார் அதைத் தன் சொந்த ஊராகக் கொண்ட கன்னிகேஸ்வரன். "மேற்கத்திய இசையமைப்பில் கல்யாணியையும் பந்துவராளியையும் அழகாக அற்புதமாக இணைத்துள்ளார் இசையமைப்பாளர் கன்னிக்ஸ்! இவரது இசையைத் தமிழ்நாடு விரைவில் தெரிந்துகொள்ளும்" எனப் பதினோரு வருடங்களுக்கு முன்பாகவே எழுத்தாளர் சுஜாதா வியந்து எழுதியுள்ளது நினைவுகூரத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு: www.dcsshanti.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com