நியூ ஜெர்சி: திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா!
மே 15, 2016, ஞாயிறன்று நியூ ஜெர்சி மாநிலம், எடிசனில் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் 6வது ஆண்டுவிழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் குழந்தைகள்நல மருத்துவரும், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க நிறுவனருமான டாக்டர் பழனிசாமி சுந்தரம் பங்கேற்றார். தமிழ்ச்சங்கத் தலைவர் திருமதி. உஷா கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் திரு. கல்யாணசுந்தரம் முத்துசாமி ஆகியோரும் பங்கேற்றுப் பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

2010ம் ஆண்டில் லாப-நோக்கற்ற அமைப்பாக நிறுவப்பட்டது திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி. முதலாமாண்டில் 65 மாணாக்கர்களையும் 12 தன்னார்வலர்களையும் கொண்டிருந்த, இப்பள்ளி, தற்போது 60 தன்னார்வலர்களின் உதவியுடன் சுமார் 325 மாணவர்களுக்குத் தமிழைக் கற்பித்து வருகிறது. பல நிலைகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஆண்டுவிழா, எடிசன் J.P. ஸ்டீவன்ஸ் உயர்நிலைப்பள்ளிக் கலையரங்கில் பள்ளிக் குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடத் துவங்கியது. ஆசிரியை திருமதி. சத்யா பால் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் திரு. செந்தில்நாதன் முத்துசாமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். முதல்வர் திருமதி. சாந்தி தங்கராஜ் பட்டயம் வழங்கியும், துணைமுதல்வர் திரு. லக்ஷ்மிகாந்தன் சுந்தரராஜன் பொன்னாடை போர்த்தியும் சிறப்பு விருந்தினரைக் கௌரவித்தனர்.

நிகழ்ச்சிகளைத் தன்னார்வ ஆசிரியர்கள் திரு. ஸ்ரீதர், திருமதி. ஸ்ரீலக்ஷ்மி, திரு. கருப்பையா, திருமதி. செந்தில்நாயகி தொகுத்து வழங்கினர். விழாவில், மூன்று முதல் பதினைந்து வயதுவரையிலான சுமார் 300 குழந்தைகள் பல்சுவை தமிழ்க் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

மாணவர்கள் மழலைப் பாடல்கள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களைப் பாடினர். குற்றாலக் குறவஞ்சி, தமிழ் கிராமிய, தமிழ் பண்டிகைப் பாடல்கள், திரைப்படப் பாடல்களின் பின்னணி இசையில் பரதநாட்டியம், ஹிப்ஹாப், கங்னம் ஸ்டைல், கதம்பம் (fusion) எனப் பலவகை நடனங்களை மாணவர்கள் ஆடினர். விழாவில் மொத்தம் 15 நாடகங்கள் அரங்கேறின. திருக்குறள் நீதிக்கதைகள், தெனாலிராமன் கதைகள், அறிவியல் புனைக்கதை, இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றுப் புனைக்கதை, நகைச்சுவைக் கதைகள் என பல விதமான நாடகங்களை வழங்கினர். பல சிலப்பதிகாரக் காட்சிகளையும் அரங்கேற்றினர்.

பெரியோர்களும் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். தன்னார்வத் தொண்டர் திரு. ராஜேஷ் பன்னீர்செல்வம் பிரபல நடிகர்கள், பிரமுகர்கள்போல் மிமிக்ரி செய்தார். பள்ளி ஆசிரியர்கள் சிலர் சேர்ந்து நடித்த 'தமிழை அவமதிக்காதே' என்ற நகைச்சுவை நாடகம் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

துணைமுதல்வர் நன்றி கூறினார். இந்திய நாட்டுப்பண்ணுடன் ஆண்டுவிழா நிறைவுற்றது.

பார்த்திபன் சுந்தரம்,
எடிசன், நியூ ஜெர்சி

© TamilOnline.com