குமாரசாமி தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
மே 21, 2016 அன்று நியூ ஜெர்சி மாநிலத்தின் செளத் பிரன்ஸ்விக் (South Brunswick) நகரிலுள்ள குமாரசாமி தமிழ்ப்பள்ளியின் இரண்டாம் ஆண்டுவிழா நடைபெற்றது.

கிராஸ்ரோடு (வடக்கு) நடுநிலைப்பள்ளி, செளத் பிரன்ஸ்விக் அரங்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. திரு. கபிலன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

திரு. சக்தி அவர்கள், இப்பள்ளி உருவாக உறுதுணையாக இருந்த கோவை பேரூராதினம் தவத்திரு. மருதாச்சலம் அடிகளாரின் வாழ்த்துரையை வாசித்தார்.

பள்ளி மாணவ மாணவியர் கலைநிகழ்ச்சி 'சங்கே முழங்கு' பாடலோடு தொடங்கியது. நிகழ்ச்சிகளை திரு. பிரபு மற்றும் திருமதி. சுபா சுவைபடத் தொகுத்து வழங்கினர்.

மாணவர்கள் வார்த்தை விளையாட்டு, தமிழ் முழக்கம், மௌன மொழி எனப் பல நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்தினர். இடையிடையே பாட்டு, நடனம், பேச்சு, நாடகம் என்று முத்தமிழும் முழங்கின.

தலைமையுரை நிகழ்த்திய திரு. நாஞ்சில் பீற்றர் (தலைவர், FETNA), சிறப்புரை வழங்கிய திரு. சிவக்குமார் (அமைப்பாளர், வளர்தமிழ் இயக்கம்) மற்றும் வாழ்த்துரை தந்த மருத்துவர் திரு. சுந்தரம் (முன்னாள் தலைவர், நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம்) ஆகியோர் குழந்தைகளின் திறனைப் பாராட்டிப் பேசினர். ஏழு மணிநேரம் தொய்வின்றி நடந்த விழா, திரு. இரவி நன்றியுரையுடன் இனிதாக முடிந்தது.

குமாரசாமி தமிழ்ப்பள்ளி தன்னார்வலர்களால் நடத்தப்படுகிற லாப நோக்கற்ற நிறுவனம். 2014ம் ஆண்டு 70 மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்டது இப்பொழுது 135 மாணவர்கள் உள்ளனர். சனிக்கிழமை தோறும் மாலை 3 மணி முதல் 5 மணிவரை கிராஸ்ரோடு (வடக்கு) நடுநிலைப்பள்ளி, செளத் பிரன்ஸ்விக், நியூ ஜெர்சியில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

ராஜாமணி செங்கோடன்,
செளத் பிரன்ஸ்விக், நியூ ஜெர்சி

© TamilOnline.com