நாகரீக வரலாற்றில் நாணயம்
நாகரீக வரலாற்றில் நாணயம் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. தனித்தனியாக வாழ்ந்த மக்கள் குழுக்களாக இணைந்து செயல்படத் துவங்கியதும் பண்டமாற்றுக்குப் பசுக்களையும், பொருட்களையும் மாற்றாகக் கொடுத்து வந்தனர். தேவை அதிகமானதும் உலோகங்கள், ஆபரணங்கள், நகைகளையும், பின்னர் நாணயங்களையும் வழங்கி பொருளாதாரம், சமூகம், தேவை களை வளர்த்தனர். இத்தகைய நாணயப் பரிமாற்றம் இன்று உலகமயமாக்கலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அதே நேரம் பழங்கால நாணயங்கள் அக்காலப் பண்பாடு, குலச்சின்னங்கள், வாழ்க்கை முறைகள், தொடர்புகள், வணிகம், அயல்நாட்டுத் தொடர்பு போன்ற வற்றை வெளிக்கொண்டு வருகின்றன. கால வரலாற்றை ஆதாரமாகக் கூறுபவை நாணயங்கள்.

சுப்பிரமணியம், தஞ்சாவூர்த் தமிழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர், சோழ மண்டல நாணயவியல் கழகத்தில் பேசியது...

*****


தமிழ் மொழி சாலப் பழமையுடையது. இலக்கண வளமும், இலக்கிய வளமும் செறிந்தது. அமெரிக்காவில் முருகன் கோயில் கட்டுகின்றனர். மலேசியாவில் தமிழ் மணம் வீசுகிறது. சிங்கப்பூரில் உள்ள ஆட்சி மொழிகளில் தமிழும் இடம் பிடித்துள்ளது. சீனாவிலும், எதியோப்பியாவிலும் வானொலி யில் தமிழ் மொழியைக் கேட்க முடிகிறது. அந்த வகையில் சர்வதேச அளவில் தமிழ் அன்னைக்குப் பெருமை சேர்த்து வருகிறது ராஜா சர் முத்தையா செட்டியாரின் குடும்பம்.

சென்னைக்கு கடற்கரை அழகு. மதுரைக்கு மீனாட்சியம்மன் அழகு. காஞ்சிபுரத்திற்கு காமாட்சியம்மன் அழகு. திருச்சிக்கு மலைக் கோட்டை அழகு. தஞ்சைக்குப் பெரிய கோயில் அழகு. சேலத்திற்கு மாம்பழம் அழகு. முத்தமிழுக்கு அண்ணாமலைச் செட்டியார் குடும்பம்தான் அழகு. இவரது குடும்பம் தமது செல்வத்தின் பெயரும் பகுதியைத் தமிழ் வளர்ச்சிக்காகவே செலவிட்டுத் தமிழுக்கும், தமிழனுக்குப் பெருமை சேர்த்து வருகிறது.

சந்திரசேகரன், தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை சிறப்புச் செயலர், டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியாரின் 101-வது பிறந்த நாள் விழாவில்...

*****


நாட்டில் எத்தனையோ பேர் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுக்கு முயற்சிக்கின்றனர். நூற்றுக்கும் குறைவானவர்கள் மட்டுமே தகுதி பெறுகின்றனர். இவை கிடைக்காவிட்டால் சோர்ந்துவிடக்கூடாது. வேறு வகையில் தங்கள் முயற்சிகளைத் தொடரவேண்டும். எல்லோருமே விஞ்ஞானியாகி விடமுடியாது என்பதை உணர வேண்டும்.

நமது நாட்டில் உள்ள 100 கோடிப் பேரும் தனித்தனியாக உயர்ந்துவிட்டால் நாடும் நல்ல நிலைக்கு உயர்ந்துவிடும். அதனால் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை நன்கு சமைக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆயிரம் பேரை அழைத்துக் கருத்துச் சொல்வது பெரிய விஷயமல்ல. அதனால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. அது பெறும் தீப் பொறியாக மட்டுமே மறந்துவிடும். இங்கு 50 பேர் மட்டுமே இருந்தாலும் நீங்கள் உள்வாங்கும் விஷயங்களைக் கொண்டு ஒவ்வொருவரும் அக்கினிக் குஞ்சாக மாற வேண்டும்.

பிரபல விஞ்ஞானி ஒய்.எஸ். ராஜன், குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நண்பர், 'பெரிதினும் பெரிது கேள்' சொற்பொழிவில்...

*****


சமுதாயத்தில் ஏழைமைப் பிரிவினரைத் தவிர இதரப் பிரிவினருக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் நமது நிதிநிலைமை மோசமடையும் என நான் அடிக்கடி கூறி வந்திருக்கிறேன்.

பெட்ரோல், டீசல் போல மின்சாரத்தையும் உரிய விலை கொடுத்து வாங்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான தரத்தில் மின்சாரம் வழங்கப் படுவதை நாம் உறுதிப்படுத்த முடியும். பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரப் பற்றாக்குறை என்பது மிகப்பெரிய இடையூறாகும். எனவே மின் உற்பத்தியை விரைவாக அதிகரிப்பதையும், மின் பற்றாக்குறையை நீக்குவதையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.

மன்மோகன்சிங், பிரதமர், சுதந்திர தினவிழா உரையில்...

*****


என்னை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் என்று மன்றத்தினரிடம் கூறியுள்ளேன். புரட்சிக் கலைஞர், கேப்டன் என்று அழைத்து வந்த ரசிகர்கள் இப்போது கறுப்பு எம்.ஜி.ஆர் என்று அழைக்கிறார்கள். இதை நான் எப்படித் தடுக்கமுடியும்?

சின்ன எம்.ஜி.ஆர் என்று கூறுவதால் ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிவிட்டேன் என்றும்கூடக் கூறுகிறார்கள். அப்படி இருந்தால் நான் ஏன் சொத்துக்களை விற்று மாநாட்டை நடத்தப் போகிறேன்?

திரையுலகிலேயே சிலர் என்னை விமர்சிக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் நான் பதில் கூறப்போவதில்லை. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து தோல்வியுற்ற சிலரை உதாரணம் காட்டுகிறீர்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் என வெற்றி பெற்றவர்களையே நான் முன் உதாரணமாகக் கொள்கிறேன். எனது தன்னம்பிக்கை அனைத்துப் பிரச்சனைகளையும் சமாளிக்க உதவும்.

விஜயகாந்த், நடிகர், விரைவில் புதிய கட்சி தொடங்கவிருப்பது பற்றிப் பத்திரிகையாளர்களிடம் பேசியது...

*****


திருக்குறளில் வள்ளுவர் தெரிவித்த நீதிநெறிகள் சூத்திரங்கள் என்றால் அதனை விரிதுரைப்பதாகவே கம்பராமாயணம் உள்ளது. திருக்குறளில் சூத்திரங்களாகத் தெரிவிக்கப்பட்ட நீதிநெறிகளை விவரிப்பதற்காக கம்பர், வால்மீகியின் ராமாயணத்தை ஊடகமாகப் பயன்படுத்தியுள்ளார்.

மக்கள் மட்டுமல்ல மன்னர்களும் நீதிநெறி களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது கம்பராமாயணத்தின் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாலகாண்டத்தில கோசல நாட்டை வர்ணிக்கும் கம்பர் ஒருநாடு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணமாகக் கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல நெறிமுறைகளை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

கம்பராமாயணத்தில் தெரிவிக்கப்பட்ட இன்னும் பல அரிய கருத்துகள் வெளிவராமல் உள்ளன. அவற்றை ஆய்வுசெய்து மக்களுக்குப் புத்தகங்களாக எடுத்துரைக்க இளைய சமூகத்தினர் முன் வரவேண்டும்.

சி. ரங்கராஜன், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் த¨லைவர், சென்னையில் நடந்த 31-வது கம்பன் விழாவில் பேசியது...

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com