தங்கச்சிறை?
மூன்றாவது முறை அமெரிக்கா வந்தபோது மனிதர்கள், காட்சிகள், எல்லாமே பழகிப்போயிருந்தன. முதல்முறை அமெரிக்க மண்ணில் கால் வைத்தபோது பார்க்கும் எல்லாமே புதுமையாகவும், விந்தையாகவும் இருந்தன. ஒரு எறும்பைப் பார்த்தால்கூட "ஓ, இது அமெரிக்க எறும்பு!" என்று ஆச்சரியப்பட்டு பார்ப்பேன். இந்தமுறை ஒரு பேருண்மை புலப்பட்டது. மனிதர்களின் நடையுடை, பாவனைதான் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறதே தவிர மற்றபடி அடிப்படை உணர்வுகள் உலகமனிதர்கள் எல்லோருக்கும் ஒன்றுதான். ஒரு வாரயிறுதி நாளில் மகள், மருமகன், பேரன், என் கணவர், நான் எல்லோரும் ஸ்டின்சன் பீச் போயிருந்தோம். எப்போதும் ஆக்ரோஷமாக அலைகளை வீசும் பசிஃபிக் மகாசமுத்திரம் இங்கே எந்த ஆர்ப்பரிப்பும் இல்லாமல் மிக அமைதியாக இருந்தது. கோடைகாலமானதால் சூரியன் இரவு எட்டு மணிக்குத்தான் சூரியன் அஸ்தமிக்கும்.

நாங்கள் சென்றது மாலைநேரம். ஜிலுஜிலுவென கடல்காற்று. மனதிற்கு இதமான சூழ்நிலை. மகள் குடும்பம் அலைகளுடன் விளையாடச்செல்ல நானும் என் கணவரும் கொண்டுவந்திருந்த கேம்ப் நாற்காலிகளில் சாய்ந்து உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது "ஹை பாட்டி!" என்ற குரல்கேட்டுத் திரும்பிப்பார்த்தால் கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகள், சற்று வயதான பெண்மணி ஒருவர் அடங்கிய இந்தியக்குடும்பம் ஒன்று வந்துகொண்டிருந்தது. புடவையில் என்னைப் பார்த்ததும் இதுவொரு இந்தியப்பாட்டி என்று அடையாளம் கண்டு அவர்களுடன் வந்த சிறுவன் கூப்பிட்டிருக்கிறான். பதிலுக்கு நானும் கையுயர்த்தி "ஹை" என்று சொல்ல அவர்கள் எங்களருகே வந்து அறிமுகமாகிக்கொண்டார்கள். மற்றவர்கள் கடலருகே செல்ல, வயதான பெண்மணிமட்டும் என்னருகிலேயே அமர்ந்துகொண்டார் "நீங்கள் தமிழா?" என்று கேட்டார். "ஆம், உங்களுக்கு எந்த ஊர்?" என்று கேட்டேன். அதற்குப்பிறகு எங்கள் பேச்சு மெல்ல வளர்ந்து தன் குடும்பச் சூழ்நிலைபற்றிப் பேசுமளவிற்கு அவர் வந்துவிட்டார்.

அமெரிக்காவில் சந்திக்கும் பெற்றோர்கள் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்ளும் கட்டாயக் கேள்வி "நீங்கள் எப்போது ஊருக்குக் கிளம்புகிறீர்கள்" என்பதுதான். நானும் அவரிடம் (இனி அவரை லலிதா என்று அழைப்போம்) "எப்போது நீங்கள் ஊருக்குக் கிளம்புகிறீர்கள்?" என்று கேட்டேன். அடுத்த நிமிடம் லலிதாவின் முகத்தில் இருள்கவிந்து அவருடைய கண்கள் கடலை வெறித்துப் பார்த்தன. சிறிது நேரத்திற்குப் பிறகு என்பக்கம் திரும்பியவர் "அம்மா, என் கணவர் ஒரு உயர்ந்த பதவியில் இருந்தவர். எங்களுக்கு ஒரே பிள்ளை. அமெரிக்காவில் வேலை கிடைத்து இங்கே வந்து பதினைந்து வருடங்கள் ஆகிறது. திருமணமாகி இரண்டு குழந்தைகளும் ஆயிற்று. என் கணவர் இறந்து இரண்டு வருடங்களாகிறது. அவர் இருக்கும்போது ஒருமுறை அமெரிக்கா வந்து பல இடங்களைச் சுற்றிப்பார்த்தோம். இப்போது நான் தனியாக வந்திருக்கிறேன். அம்மா, ஊரிலிருப்பவர்கள் நாம் அமெரிக்கா வந்ததைப்பற்றி பெருமையாகப் பேசுவார்கள். ஆனால் இது..... ஒரு தங்கச்சிறை அம்மா!" என்று கூறி நிறுத்தினார். சற்று நேரத்தில் எல்லோரும் வர அவர் கிளம்பிவிட்டார்.

வீட்டுக்கு திரும்பிவந்து இரவுணவை முடித்துவிட்டு உறங்கப் போகுமுன் மனதில் மீண்டும் மீண்டும் வந்துபோனது "தங்கச்சிறை... தங்கச்சிறை" என்ற வார்த்தை. என் மனச்சாட்சி என்னைக் கேட்டது "நீ உண்மையில் இங்கே மகள் வீட்டில் மனப்பூர்வமான மகிழ்ச்சியுடன் இருக்கிறாயா?" என்று. அமெரிக்காவில் உள்ள பிள்ளைகள் வீட்டிற்கு வந்திருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் அமெரிக்காவுக்கு வருவதற்கு முக்கியக் காரணம் பிள்ளைகளுக்கு உதவியாக இருப்பதற்குத்தான். கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்தால் இன்னும் அதிகமாக உதவி தேவைப்படுகிறது. சமையல், பிள்ளைவளர்ப்பு, வீட்டைப் பாதுகாப்பது எனப் பல வேலைகள்.

நம் ஊரில் வீட்டுவேலை, சமையல் செய்ய நமக்கு எளிதில் பணியாட்கள் கிடைப்பார்கள். பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி அவர்களை வாழ்க்கையில் செட்டில் பண்ணி, நம் வேலையிலிருந்து ரிடையராகி, இனி நமக்கென ஒரு வாழ்வு, நினைத்த நேரம் கோவில், பொழுதுபோக்காக டி.வி. என்று ஓய்வாக இருக்கலாம் என்று நினைக்கும்போது அமெரிக்காவிலிருந்து வரும் அன்புக்கட்டளையை மீறமுடிவதில்லை. அமெரிக்கா வந்து இறங்கியதும் பிள்ளைகளுக்காக வயது, உடல்தெம்பையும் மீறி வேலை செய்யவேண்டிய கட்டாயம்.

ஆனால் இது தங்கச்சிறையா? பெரிய வீடு, சுற்றி அழகான தோட்டம், பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள், சிநேகிதமாய் நம்மைப் பார்த்துச் சிரிக்கும் அமெரிக்கர்கள், பிரம்மாண்டமான கடைகள், அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான பொருட்கள் (பிரெட் மட்டும் ஐம்பதுக்கு மேற்பட்ட வகைகள் இருக்கும் அதேபோல் வெண்ணெயும், சீஸும்!) வண்ண வண்ண விளையாட்டுப் பொம்மைகள், நன்கு பராமரிக்கப்படும் தேசியப் பூங்காக்கள், விதவிதமான கார்கள் இத்தனையும் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியும், ஆச்சரியமும் நம் பிள்ளைகளின் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் ஏற்படுகிறதா என்பதுதான் கேள்வி.

வேலைக்குப் பறந்து செல்லும் பிள்ளைகள், பள்ளிக்குக் கிளம்பும் பேரக்குழந்தைகள் இவர்களுடன் அதிவேகமாய் இயங்குகிறோம். இரவு சாப்பாட்டிற்கு நாம் சுடச்சுட சமைத்து வைக்கும் வெஜிடபிள் பிரியாணி, இட்லி சாம்பார் எல்லாம் பிள்ளைகள் சுவைத்துச் சாப்பிடும் அழகைப் பார்க்கும்போது நம் களைப்பு பறந்துபோகும். சாப்பிடும் மருமகள் கண்ணில் நன்றியும், பேரனிடமிருந்து "Yummy food Grandma" என்ற பாராட்டும், மகன் அல்லது மகளிடமிருந்து "அம்மா இதுதான் ஊர் வாசனை, உங்கள் சமையலில் தமிழ்நாடே இங்கே வந்து விடுகிறது" என்று சொல்லக் கேட்கும்போது, ஐயோ பாவம் பிள்ளைகள், அவர்கள் நன்றாகச் சாப்பிட வேண்டும்; நாம் இங்கு இருக்கும்வரை சமையல் நம் பொறுப்புதான் என்று முடிவெடுத்துவிடுவோம். ஊரில் ஒரு வேலையும் செய்யாத என் கணவர்கூட இங்கே வந்தால் ஆளே மாறிவிடுவார். வீடு, தோட்டம் இரண்டையும் சுத்தமாக வைத்துக்கொள்வதைத் தன் வேலையாக எடுத்துக்கொள்வார். அதற்குமேல் வாக்கிங், ஜிம் எல்லாம் வேறு.

பிள்ளைகளின் சிநேகிதர்கள் சிலர் "உங்களுக்கு இங்கே பொழுதுபோகிறதா?" என்று கேட்பதுண்டு. காலை எழுந்தால் இரவு படுக்கும்வரை சுறுசுறுப்பாக இருப்பதற்கான வாய்ப்புகளை வீட்டிற்குள்ளேயே நாங்கள் உருவாக்கி இருக்கும்போது எப்படி போரடிக்கும்! ஆறுமாத காலம் அதிவேகத்தில் சென்று முடியும். தாத்தாவும் பாட்டியும் ஊருக்குப் போகிறார்கள் என்ற ஏக்கம் பேரப்பிள்ளைகள் முகத்தில் வந்துவிடும். "தாத்தா, பாட்டி, கம் பேக் ஸூன்" என்று சொல்லும்போது மனமும் உடலும் பூரிக்கும். திரும்ப சீக்கிரம் வரவேண்டும் என்ற தீர்மானம் வரும்.

"தங்கச்சிறை" என்றாரே லலிதா அம்மையார், எனக்கு அப்படித் தோன்றவில்லையே, ஏன்?

இசை சேகர்,
விரிகுடாப் பகுதி, கலிஃபோர்னியா

© TamilOnline.com