அளவுக்கு மிஞ்சினால் அமிலமும் நஞ்சு!
நம் வயிற்றுப்பகுதியில் அமிலம் சுரக்கிறது. இந்த அமிலம் உணவைச் செரிக்கவைத்து அதிலிருக்கும் சத்துகளை உடலுக்கு அளிக்க உதவுகிறது. இந்த அமிலத்தின் அளவு அதிகமானால் ஏற்படும் உபாதைகளைப்பற்றி இங்கு அறியலாம்.

நெஞ்சுக் கரிப்பு, வயிற்றுப்புண்
அமிலம் அதிகமானால் வயிற்றுப்பகுதியில் புண் ஏற்படலாம். இது வயிற்றுவலி அல்லது, நெஞ்சுக்கரிப்பாக வெளிப்படும். பல வேளைகளில் இது உணவுண்டால் அல்லது பால் அருந்தினால் சரியாகும். வாயு பிடிப்பாகவும் வெளிப்படலாம். வயிறு உப்புசம் அல்லது வீங்குவது போன்ற உணர்வு ஏற்படலாம். நெஞ்சுக் கரிப்பு மார்பில் பரவலாம். இது மார்படைப்பு போலவே இருக்கும். கைதேர்ந்த நிபுணருக்கும் இதுவொரு சவால். அதனால் மார்புவலி அதிகம் இருந்தால் உடனே மருத்துவமனையை நாடவேண்டும். கருவுற்ற பெண்களுக்கு அமிலச்சுரப்பு அதிகமாகலாம். இவர்களுக்கு வாயு உபாதையும் அதிகம் ஏற்படும்.

தொண்டை கரகரப்பு, இருமல்
அமிலம் தொண்டைப்பகுதியில் குடிகொண்டால் குரலில் கரகரப்பு ஏற்படலாம். தொடர்ந்து வறட்டு இருமல் உண்டாகலாம். சிலருக்கு இந்த உபாதை வயிற்றுவலி, நெஞ்சுக்கரிப்பு இல்லாமல் தொண்டைப் பகுதியை மட்டுமே பாதிக்கலாம். சிலருக்கு இரண்டும் இருக்கலாம். இதனை Laryngopharyngeal Reflux என்று சொல்வர். இதனை ENT மருத்துவர்கள் மூக்குப்பகுதி மூலம் தொண்டையைப் பரிசோதித்துக் கண்டறிவர்.

ரத்தக்கசிவு
வயிற்றில் புண் ஏற்பட்டால் அதனால் வயிற்றுப்பகுதியில் இருக்கும் ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டு வாந்தி அல்லது பேதி ஏற்படலாம். அவற்றில் ரத்தம் கலந்து வரலாம். வயிற்றில் கசியும் ரத்தம் சிறுகுடல், பெருங்குடல் வழியாக வரும்போது நிறம் மாறி மலம் கருப்பாகப் போகலாம்.

புற்றுநோய்
தொண்டைக்குழாயின் புண் புற்றுநோய்க்கான அணுக்களாக மாறலாம். நாளடைவில் வயிற்றுப்புண் சரியாகக் கவனிக்கப்படாமல் இருந்தால் தொண்டைக்குழாய் (Esophagus) வயிற்றுடன் (Gastric junction) இணையும் பகுதியில் மாற்றம் ஏற்படலாம். இதை Barrett’s Esophagitis என்று சொல்வர். இது புற்றுநோயாக மாறும் வாய்ப்பு உண்டு. அதனால் இவர்களுக்கு வாழ்க்கை முழுதும் அமிலம் குறைக்கும் மருந்துகள் தேவைப்படும்.

அமிலம் அளவுக்கதிகமாகச் சுரப்பதை தவிர்ப்பது எப்படி?
1. வேளாவேளைக்கு உண்ணவேண்டும். 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒருமுறை உண்ணவேண்டும். பட்டினி கிடப்பதையும் நீண்டநேரம் உண்ணாமல் இருப்பதையும் தவிர்க்கவேண்டும். காலை உணவு மிகவும் அவசியம். இரவு முழுதும் உண்ணாமல் பட்டினியை உடைப்பதாலேயே அதற்கு ஆங்கிலத்தில் Breakfast என்று பெயர். காலையில் உணவு உண்ணாமல் அதிகமாக காஃபி அல்லது தேநீர் அருந்துவது அமிலம் சுரப்பதை அதிகரிக்கும்.

2. அமிலம் அதிகமாகச் சுரக்கும் உணவுகளை அளவோடு சாப்பிடவேண்டும் . ஒருசிலர் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒரேநாளில் அதிகமாக அமிலம் சுரக்கும் உணவுகளை உண்ணாமல் அவற்றைச் சிறிது சிறிதாக உண்ணலாம். இந்த உணவுகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். அதிகக் காரமுள்ள உணவுகள், எண்ணெய்ப் பண்டங்கள், தக்காளி சாஸ், புதினா, சாக்லேட், காஃபி, தேநீர், வாயு உண்டாக்கும் சில காய்கறிகள், கிழங்கு வகைகள், மசாலாப் பொருட்கள், பூண்டு, வெங்காயம் போன்றவை அதிகமாக அமிலத்தைச் சுரக்கவைக்கும்.

3. மது அருந்துவதும் புகைபிடிப்பதும் அமிலச் சுரப்பை அதிகரிக்கலாம். புற்றுநோய்க்கான வாய்ப்புகளும் இவ்விரு பழக்கமுள்ளோருக்கு அதிகம்.

4. உணவுண்ட பின்பு உடனடியாகப் படுக்கக்கூடாது. குறைந்தது 2 மணிநேரம் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும். இரவுணவை மிகவும் தாமதமாக உண்பதைத் தவிர்க்க வேண்டும். இரவுணவுக்கும் உறங்கும் நேரத்திற்கும் 3-4 மணிநேரம் இடைவெளி இருப்பது நல்லது.

5. உடல் எடை அதிகம் இருப்போருக்கு அமிலம் சுரப்பது அதிகமாக இருக்கும். இவர்களுக்கு Hiatal Hernia என்று சொல்லப்படும் வயிற்று உபாதை இருக்கலாம். அதனால் உடல் எடையைக் குறைப்பது நல்லது.

தீர்வு முறைகள்
அமிலத்தைக் குறைக்க பல மருந்துகள் உள்ளன. இவற்றை மருத்துவர் சீட்டு இல்லாமல் கடையில் பெறலாம். Tums, Gelucil, Peptobismol போன்ற அன்டாசிட் முதலில் எடுக்கலாம். அவை உடனடி நிவாரணம் தரும். Zantac மாத்திரையும் மருந்துக்கடைகளில் கிடைக்கும்.

இவற்றைத் தவிர Prilosec, Nexium போன்ற மாத்திரைகள் அமிலம் சுரப்பதைக் குறைக்கும். இவற்றை ஆறு வாரத்துக்கு தினமும் உட்கொள்ள வேண்டும். அப்படி எடுத்தால் வயிற்றுப்புண் ஆறும். அதற்குப்பிறகு தேவைப்படும் நாட்களில் மட்டும் எடுக்கலாம்.

ஆறு வாரத்துக்குப் பிறகும் தினமும் இந்த மருந்து தேவைப்பட்டால் வயிற்றுப்பகுதி நிபுணரைக் காணவேண்டும். இவர்களுக்குத் தொண்டைக் குழாய் மூலம் கேமரா செலுத்தி வயிற்றுப்குதியில் புண் இருக்கிறதா என்று பார்க்கும் Endoscopy தேவைப்படும்.

ஒரு சிலருக்கு H Pylori என்று சொல்லப்படும் ஒருவித நுண்ணுயிர்க் கிருமித் தாக்கம் இருந்தாலும் இந்த உபாதை அதிக நாட்களுக்குத் தொடரலாம். அதற்கு தேவையான பரிசோதனைகள் செய்து 10 நாட்களுக்கு ஆன்டிபயாடிக்ஸ் தேவைப்படும்.

பெரும்பாலும் சரியான உணவுப்பழக்கம், உடல் எடை மாற்றம் மூலமே இந்த உபாதையைக் குணப்படுத்தி விடலாம். முடியாதவர்கள் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். அளவோடு உண்டால் வளமாக வாழலாம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com