அச்சமில்லை, அச்சமில்லை!
மார்ச் 27, 2016 அன்று ஓலோனி ஸ்மித் மையத்தில் SAVE மற்றும் மைத்ரி சேவைநிறுவனங்களுக்கு நிதி திரட்டும் பொருட்டு, 'அச்சமில்லை, அச்சமில்லை' என்ற தமிழ் மெல்லிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதை ராஹுல் சுதர்சன், ராகவன் கோப்பே என்ற இரண்டு ஃப்ரீமான்ட் பள்ளி மாணவர்களும் SAVE அமைப்பின் தொண்டர்களும் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சி ஃப்ரீமான்ட் மேயர் திரு. பில் ஹாரிசன் முதன்மை விருந்தாளியாக வந்திருந்ததோடு, இரண்டு இளைஞர்களின் இந்த நன்முயற்சியை கௌரவித்தார்.

அனு நடராஜன் (முன்னாள் துணைமேயர்), கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் (இயக்குனர், SAVE) ஆகியோர் முக்கியப் பேச்சாளர்களாகப் பங்கேற்றனர்.

40வது ஆண்டைக் கொண்டாடும் SAVE, இந்த நிகழ்ச்சியைத் தனது 20வது ஆண்டைக் கொண்டாடும் 'பல்லவி' இசைக்குழுவினரை அழைத்து இந்நிகழ்ச்சியை நடத்தியது. 'பல்லவி' விரிகுடாப்பகுதியில் பல்வேறு அமைப்புகளுக்கு நிதியுதவிக் கச்சேரிகள் செய்துவருகிறது.

நிதியுதவி பெற்ற இவ்விரண்டு அமைப்புகளும் இல்லத்தில் வன்முறைக்கு ஆட்பட்டோருக்கு அதிலிருந்து விடுபட உதவுகின்றன. ராஹுலும் ராகவனும் 2015 கோடைக்காலத்திலிருந்து இவ்வமைப்புகளின் சேவை குறித்த பிரசுரங்களை கடைகள், வீடுகள், கோவில்கள் மற்றும் தெற்காசிய உணவகங்களில் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

400 பார்வையாளர்கள் வந்திருந்த இந்த நிகழ்ச்சியின்மூலம் $17,000 நிதி திரட்டப்பட்டது.

பிரியா சுதர்சன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com