சிகாகோ: எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு விழா
ஏப்ரல் 17, 2016 அன்று, மாபெரும் இசைமேதை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் நூற்றாண்டு விழாவை சிகாகோ மாநகரைச் சேர்ந்த 'சமஸ்க்ரிதி' நேப்பர்வில்லில் சிறப்புறக் கொண்டாடியது. விழாவில் எம்.எஸ். அவர்களின் கொள்ளுப்பேத்தி குமாரி. ஐஸ்வர்யா ஸ்ரீனிவாசன், அம்மா பிரபலப்படுத்திய பல பாடல்களைப் பாடி மகிழ்வித்தார். கச்சேரி தொடங்குவதற்கு முன் அம்மாவின் பேரன்களான திரு. ஸ்ரீனிவாசனும் திரு. சங்கரும் எம்.எஸ். பற்றிப் பேசுகையில், அவர் இசையின்மூலம் ஈட்டிய சன்மானத்தின் பெரும்பகுதியைத் தொண்டு அமைப்புகளுக்கு வழங்கிய நற்பண்பை ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

பின்னர் ஐஸ்வர்யா ராகமாலிகையிலமைந்த "நாராயண தே நமோ நமோ" என்ற அன்னமாசார்யா கிருதியுடன் கச்சேரியைத் தொடங்கினார். மாயாமாளவகௌளை, கல்யாணி ராகங்களை விஸ்தாரமான ஆலாபனை செய்தார். பின்னர் மைசூர் ஜெயசாம்ராஜ உடையாரின் துருவ தாளத்திலமைந்த "க்ஷீரசாகர", சுவாதித் திருநாளின் மிஸ்ரசாபு தாளத்திலமைந்த "பங்கஜலோசன" போன்ற பாடல்களை நிரவல் ஸ்வரத்துடன் அருமையாகப் பாடினார். கஞ்சதளாயதாக்ஷி, சீதம்மா மாயம்மா, காற்றினிலே வரும் கீதம், மீராபஜன், ஆரார் ஆசைப்படார் போன்ற பாடல்களைப் பாடி மகிழ்வித்தார். அவருடன் வயலினில் திரு. ஜெயஷங்கர் பாலனும் மிருதங்கத்தில் திரு. கல்லிடைக்குறிச்சி சிவக்குமாரும் அருமையாக வாசித்தனர்.

நிறைவாக, எம் எஸ் அம்மாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிகாகோ மாநகரச் சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் சேர்ந்து பாடிய "குறை ஒன்றும் இல்லை", "மைத்ரீம் பஜத" பாடல்கள் செவிக்கு விருந்தாகின. எம்.எஸ். அவர்களின் அரிய புகைப்படங்களைப் பெரிதாக்கி மேடையின் பின்திரையில் காட்டியது மனதைக் கவர்ந்தது.

'சமஸ்க்ரிதி'யின் நிறுவனர் திருமதி. ஷோபா நடராஜன் சிறந்த பரதநாட்டியம், குச்சுபுடி நடனம் மற்றும் இசை கலைஞர். இவர் இருபது ஆண்டுகளாக இந்திய சாஸ்த்ரீயக் கலைகளைக் கற்பித்து வருகிறார். பல புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு நடந்த 'ரஸானுபவம்' பெரும் வரவேற்பைப் பெற்றது.

சிகாகோவைச் சேர்ந்த இசை ஆர்வலர்கள் அவருக்கு எழுத்து மூலமாகவும் வீடியோ மூலமாகவும் அஞ்சலி செய்ததின் தொகுப்பை சமஸ்க்ரிதி அமைப்பின் இணையதளத்தில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு
வலைமனை: www.samskriti.com
மின்னஞ்சல்: samskriti@aol.com

வரலக்ஷ்மி வெங்கடராமன்,
நேப்பர்வில், இல்லினாய்ஸ்

© TamilOnline.com