பாசடேனா: தமிழ்ப்புத்தாண்டு விழா
ஏப்ரல் 23, 2016 அன்று அறநெறிப் பாடசாலை சார்பாக தமிழ்ப் புத்தாண்டு விழா பாசடேனாவில் சங்கரா ஐ ஃபவுண்டேஷனின் உறுதுணையுடன் Duarte performance Arts அரங்கில் நடைபெற்றது. லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சுற்றுப்புறத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் இருந்தும் மாணவ மாணவியர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக திரு. விக்னேஸ்வரன் மற்றும் திரு. நந்தகுமார் கணேசன் பங்கேற்றனர். அனைத்துப் பள்ளிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக மழலைகள் வழங்கிய ஆத்திசூடி ஒப்புவித்தல், தமிழ் இலக்கியப் பாடல்கள் மற்றும் ஆகர்ஷணா நாட்டியப்பள்ளி மாணவிகளின் நடனம் சிறப்பாக இருந்தது. நமது கிராமத்துப் பாரம்பரியக் கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை நடனங்களை சௌத்பே தமிழ்க்கல்வி மாணவர்கள் வழங்கியபோது பார்வையாளர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

வள்ளுவன், பாரதி, கண்ணதாசன், அப்துல்கலாம் போல் வேடமிட்டு செரிடாஸ் தமிழ்ச்சங்க மாணவர்கள் நடித்துக்காட்டினர். பிள்ளைகளின் பார்வையில் அமெரிக்கப் பள்ளி வாழ்க்கையைப் பற்றிய பட்டிமன்றம் லாஸ் ஏஞ்சலஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்டது. இயற்கையைப் போற்றுவோம் என்ற பெயரில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் சான்ட க்ளாரா தமிழ் அகாடமி மாணவர்களின் நாடகம் அருமை. அறநெறிப் பாடசாலை மாணவர்களின் 'தமிழா தமிழா' பாடல் சிலநொடிகள் அரங்கிலிருந்தோரை உணர்ச்சி வசப்படச் செய்தது. Brea தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மழலை செவிக்கு விருந்து. இன்லண்ட் எம்பயர் தமிழ்க்கல்வி மாணவர்கள் மழலை உலகத்தைத் தமிழில் பாடி அசத்தினர். மொத்ததில் இந்நிகழ்ச்சி கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந்திருந்தது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com