மே 2016: வாசகர் கடிதம்
மினியாபோலிஸில் வசிக்கும் என் மகன் இல்லத்திற்கு நானும் என் கணவரும் வந்திருந்தோம். அப்போது, கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற அனைத்துப் பகுதிகளையும் கொண்டிருக்கும் தென்றல் இதழை வாசித்தோம். தமிழ்நாட்டில் வெளிவரும் பத்திரிக்கைகளுக்குச் சிறிதும் குறையாத தரத்தில் இப்பத்திரிக்கை உள்ளது. தென்றல் நன்கு வளர எங்கள் வாழ்த்துக்கள்.

சித்ரா ரகோத்தம ராவ்,
சென்னை

*****


வசந்தகாலத் 'தென்றல்' இதழ் ஆடியசைந்து கண்களைப் பறிக்கும் நிறங்களில் தவழ்ந்து வந்தது. படித்தவுடன் மனதுக்கு இனிமையூட்டியது. மட்டுமல்ல, ஓவியர் இளையராஜாவின் 'மாயம் செய்த ஓவியம்', 'மனிதநேயத்தின் மறுபெயர் ரவிச்சந்திரன்' - செய்திகளைப் படித்தவுடன் என் உள்ளம் சிலிர்த்தது. மிக்க நன்றி.

கமலா சுந்தர்,
பிரின்ஸ்டன் ஜங்ஷன், நியூ ஜெர்சி

*****


ஏப்ரல் மாதத் தென்றல், புத்தாண்டை வரவேற்கும் மலராக மிகவும் அருமையாக இருந்தது. எழுத்தாளர் கௌரி கிருபானந்தன் அவர்கள் தமிழாக்கம் செய்த 'பெற்ற கடன்' மாற்றி யோசிக்க வைத்தது. ராமா கார்த்திகேயனின் 'ஆனந்தாசனம்', எல்லே சுவாமிநாதனின் 'பொறையார் கபே' சிறுகதைகள் ரசிக்கவைத்தன. முன்னோடி உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் பற்றிய கட்டுரைக்கு மிக்க நன்றி. நிசப்தம் அறக்கட்டளை வா. மணிகண்டன் நேர்காணல் அற்புதமாக இருந்தது.

இளம் விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்தியாவின் பாரம்பரியப் பயிர்கள் மற்றும் சிறுதானியங்களை மீட்டெடுப்பவரும், இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துபவருமான ராஜ்சீலம், நேர்காணல்மூலம் நிறைய விஷயங்களைப் புரிந்துகொண்டோம்.

மார்ச் இதழில் ஓவியர் இளையராஜா பற்றிய விவரங்கள் படித்து மகிழ்ந்தோம். அவரது கலைச்சேவையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அனைத்து விஷயங்களையும் அற்புதமாகத் தெரிவித்து வரும் தென்றல் இதழுக்கு எங்கள் அன்பார்ந்த நன்றிகள்.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com