ABCD
அந்த மாலைநேரத்தில் அப்படி ஒரு தொலைபேசி அழைப்பைக் கனிமொழி எதிர்பார்த்திருக்கவில்லை. சாதரணமாக எடுத்து "ஹலோ" என்றாள். ஆங்கிலத்தில் நடந்த உரையாடல் இதுதான்:

ஃபோன் குரல்: ஹை, வீலர் ஹைஸ்கூலிலிருந்து பார்பரா பேசுகிறேன். கார்த்திக்கோட பெற்றோர்கிட்ட பேசலாமா?

கனி: நான் கார்த்திக்கோட அம்மாதான் பேசறேன்.

பார்பரா: ஓ, ஹை திருமதி. சுந்தர். ஹௌ ஆர் யூ?

கனி: நல்லாருக்கேன். ஏதாவது ஏடாகூடமா?

பார்பரா: இல்லையில்லை. கவலைப்படாதீங்க. பள்ளிக்கூடத்தில ஒரு அவார்ட் ஃபங்ஷன் இருக்கு. அதுக்கு உங்களை அழைக்கத்தான் கூப்பிட்டேன். உங்கள் கணவரோடு வாருங்கள். மே மாதம் 17ம் தேதி காலை 9 மணிக்கு, ஓல்டு ஜிம்முக்கு வாங்க.

கனி: நிச்சயம். என்ன அவார்டு, தெரிஞ்சுக்கலாமா?

பார்பரா: விவரமெல்லாம் நீங்க இங்க வரும்போது சொல்றோம். ஆங், பசங்களுக்கு இது சர்ப்ரைஸ், தெரியாது. அதனால கார்த்திக் கிட்ட இதைப்பத்திச் சொல்லாதீங்க. நன்றி.

பெருமுச்சு விட்டபடி அழைப்பைத் துண்டித்தாள் கனி. 12வது படிக்கும் பிள்ளையைப் பற்றி பள்ளியிலிருந்து தொலைபேசி வந்தாலே பதட்டம்தான். அவன் ஒன்றும் கெட்டவழியில் போகிறவன் இல்லையென்றாலும், இந்த அமெரிக்கக் கலாசாரத்தில், குழம்பிய மனநிலையில், பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோருக்கு விதிக்கப்பட்ட சாபம் இது என்று நினைத்துக் கொண்டாள். எது எப்படியோ, நல்ல விஷயம்தான். ஆனால் ஆண்டிறுதியில் பரிசளிப்பு விழாவிற்காக ஒரு துண்டுக்காகிதம்தான் வரும். இதென்ன புதிதாகத் தொலைபேசி அழைப்பு? கனிமொழிக்கு ஒன்றும் விளங்கவில்லை.

கார்த்தியிடமும் கேட்கமுடியாது. தோழி கவிதாவிடம் விசாரிக்கலாம் என்றால், அவளது பிள்ளை இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கவில்லை என்றால் சங்கடமாகி விடுவது மட்டுமில்லாமல், மறைமுகமாகப் பெருமையடித்துக் கொள்வதுபோல் இருக்கும். அந்த எண்ணத்தைக் கைவிட்டாள். கணவர் சுந்தரிடம் இதுபற்றிப் புலம்பியபோது, "நீ பேசியபோதே இன்னும் விவரங்கள் கேட்டிருக்க வேண்டும். சரி விடு. எப்படியும் 17ம் தேதி தெரியத்தானே போகிறது" என்று வாயடைத்தார்.

ஒருவிதமான பரபரப்போடு 10 நாட்களைக் கடத்தி, மே 17ம் தேதி சரியாக 8:45 மணிக்கு ஓல்டு ஜிம்மை ஒட்டியிருந்த அறைக்கு வந்தார்கள் கனியும் சுந்தரும். இந்தியர் ஒருவர் உட்படச் சில பெற்றோர் ஏற்கனவே வந்திருந்தார்கள். பார்பரா அவர்களை வரவேற்று, மேசையில் வைக்கப்பட்டிருந்த காலைச் சிற்றுண்டியையும் காஃபியையும் எடுத்துக்கொள்ளச் சொன்னார். மற்ற பெற்றோருடன் அறிமுகம் செய்துகொண்டபோது, அந்த இந்தியரின் மகன் ரிஷி என்றும், அவனைப் பற்றி கார்த்தி அடிக்கடிச் சொல்லியிருப்பதும் நினைவு வந்தது. அனைவரும் வந்தவுடன் பார்பரா விருதைப்பற்றிய விவரம் சொன்னார்.

12ம் வகுப்பு ஆசிரியர்கள் 15 பேரும் அவரவர் வகுப்பிலிருந்து ஒரு மாணவனைத் தேர்ந்தெடுத்து, படிப்பைத்தவிர, அவர்களிடமிருக்கும் ஒரு உயர்ந்த பண்பிற்காக இந்தச் சிறப்பு விருதை வழங்குகிறார்கள் என்றும், 400 மாணவர்களில் 15 பேருக்கு மட்டுமே விருது வழங்கப்படுகிறதென்றும், விருதுபெறும் நேரத்தில் அந்தப் பண்புகளை ஊட்டிய பெற்றோர் உடனிருக்க வேண்டுமென்று பள்ளி நிர்வாகம் விரும்பியதால் இந்த ரகசிய ஏற்பாடு என்றும் கூறினார். இப்பொழுது அருகிலிருந்த ஓல்டு ஜிம்மில் மாணவர்கள் வந்து கூடும் சத்தம் கேட்டது.

நிகழ்ச்சி தொடங்கியவுடன், அந்தந்த மாணவரை அழைக்கும் போது, அவரவர் பெற்றோரை இந்த அறையிலிருந்து கூடத்திற்குள் அனுப்புவதாக ஏற்பாடு.

சரியாக அடுத்த 10 நிமிடங்களில் விழா தொடங்கியது. முதல்வரின் உரைக்குப்பின் 15 ஆசிரியர்களும் மேடையேறினார்கள். இவையனைத்தையும் அந்த அறைக்கதவின் கண்ணாடி வழியாக கனியும் ஏனையோரும் பார்க்க முடிந்தது. இப்பொழுது முதல் ஆசிரியர் முன்னே வந்து, தன்னைப்பற்றிய விவரத்தையும், தான் கண்டுவியந்த பண்பையும், விருதுக்கான காரணத்தையும் கூறி, கடைசியாக மாணவன் ஜேஸன் என்று பெயரைச் சொல்ல அரங்கமே அதிர்ந்தது கரவொலியில். சரியாக அந்த நொடியில் கதவைத் திறந்து, ஜேஸனின் பெற்றோரைக் கூடத்திற்குள் விட்டார் பார்பரா. ஜேஸன் எழுந்து மேடையை நோக்கிப் பாதிவழி வரும்பொழுது, மூலையில் இருந்த கதவின் வழியே பெற்றோர் வருவதைக் கண்டு ஆச்சரியத்தில் துள்ளினான். விருதை வாங்கியபின் பெற்றோரைத் தழுவிக் கொண்டு, "வாட் ஆர் யூ கய்ஸ் டூயிங் ஹியர்!" என்றான். அந்தத் தாயின் பெருமிதத்தையும், மகனின் அளவில்லாத மகிழ்ச்சியையும் கண்டு கண்ணீர்விட்டாள் கனி.

அந்த அற்புதமான தருணத்தை எதிர்பார்த்து ஏனைய பெற்றோரும் காத்திருக்க, மூன்றாவதாகக் கார்த்தியை அழைத்தார்கள். இப்பொழுது மாணவர்கள், பெற்றோர் வந்திருப்பதை அறிந்துகொண்டுவிட்டார்கள். ஆச்சர்யம் மறைந்து பெருமிதம் மட்டுமே இருந்தது. அதே பெருமிதத்தோடு, கனியும் சுந்தரும் உள்ளே சென்று, விருதுடன் வந்த கார்த்திக்கைக் கட்டித்தழுவி, ஏனைய பெற்றோருடன் அமர்ந்து நிகழ்ச்சியை ரசிக்கத் தொடங்கினர்.

ஏழாவதாக ரிஷியை அழைத்தார்கள். மேடையை நோக்கி வந்தவன் பெற்றோரைக் கண்டதும், மேடைக்குச் செல்லாமல் நேராக அவர்களிடம் வந்தான். அப்பாவின் காலைத்தொட்டு வணங்கி, அம்மாவைத் தழுவி, இருவரையும் அழைத்துக்கொண்டு மேடைக்குச் சென்று விருதை வாங்கினான். பெற்றோரை வணங்கும் இந்தியப் பண்பாட்டைக் கண்டு அரங்கமே எழுந்து நின்று மரியாதை செய்து கை தட்டியது. பல கண்களில் கண்ணீர்.

யார் சொன்னது 'American Born Confused Desis' என்று? இவர்கள் 'American Born Cultured Desis' அல்லவா?

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com