புண்படும்போது பண்படுகிறது!
அன்புள்ள சிநேகிதியே

பல வருடங்களாக உங்கள் பகுதியைப் படித்துக்கொண்டு வருகிறேன். உறவுக்கு முக்கியம் கொடுத்து எழுதிக்கொண்டு வருகிறீர்கள். நன்றாகத்தான் இருக்கும், எல்லாரும் சௌஜன்யமாக இருந்தால். ஆனால், சில உறவுகள் நம்மைப் புண்படுத்தி, அவமானப்படுத்திய சம்பவங்களை நினைத்தால் எப்படி அந்த உறவு பலப்படும்?

பல வருடங்களுக்கு முன்னால் நான் கூனிக்குறுகி, சோர்ந்த தினத்தை நினைத்துப் பார்க்கிறேன். என் பிள்ளை (எங்களுக்கு ஒரே பிள்ளைதான்) படிப்பில் எப்போதும் முதலிடம். எந்த டியூஷனும் வைத்ததில்லை. நல்ல மார்க் வாங்கி உதவித்தொகையோடு கல்லூரிப் படிப்பை முடித்தான். என் கணவர் ஒரு கிளர்க்காக இருந்தார். மிகக்குறைந்த வசதி. ஆனால், என் கணவர், மாமியார் எல்லோருமே அருமையானவர்கள். அக்கம்பக்கம் பலகாரம் செய்துகொடுத்து அந்தப் பணத்தைப் பேரனின் கைச்செலவுக்குக் கொடுத்து உதவுவார் என் மாமியார். அவருக்கு பணக்காரச் சொந்தக்காரர் இருந்தார். எங்கள் குடும்ப மனிதர்களிடம் பெரிய செல்வாக்கு அவருக்கு. அவ்வப்போது அவர்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு எங்களைக் கூப்பிடுவார்கள். எனக்கு ரொம்ப சங்கோஜமாக இருக்கும். என் மாமியார் மட்டும் போய் நிறைய உதவி செய்துவிட்டு வருவார்.

என் பையன் மேல்படிப்பு படிக்க அமெரிக்காவிற்கு வரவேண்டிய நிலை. அட்மிஷன் கிடைத்துவிட்டது. நிறைய உதவித்தொகையும் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால், நாங்கள் முதலில் சில லட்சங்கள் எங்கள் வங்கியில் இருப்பாகக் காட்டவேண்டி இருந்தது. அதுவும் தவிர, அவனுக்கு பயணச்செலவு, துணிமணி என்று வேறு செலவு. என் கணவரின் குறைந்த சம்பளத்தில் நாங்கள் கௌரவமாக வாழ்ந்து கொண்டிருந்தோம். யாரிடமும் ஒரு பைசா கடன் கேட்டதில்லை. ஆனால், என் பையனுக்கு வாழ்க்கையில் முக்கியமாகக் கிடைக்கும் வாய்ப்பை விட்டுவிடக் கூடாதே என்று கவலைப்பட்டோம். என் கணவரும் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர். என் பையனின் முகத்தைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.

என் மாமியார் வெட்கத்தை விட்டு அந்த உறவினரிடம் ஏதேனும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டிருக்கிறார். அவர் எங்களை வந்து பார்க்கச் சொல்லியனுப்பினார். மாலை நேரத்தில் வரச் சொன்னார். நான், என் பையன் மூவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் போனோம். அவர் வீட்டிலில்லை. மனைவி ஆச்சரியமாக எங்களைப் பார்த்தார். அவர் கணவர் நாங்கள் வரப்போவதைப் பற்றி எதுவும் தெரிவித்திருக்கவில்லை. நாங்கள் திக்குமுக்காடி வந்ததின் நோக்கத்தைச் சொன்னோம். அந்த மனிதர் வருவதற்கு மிகவும் நேரமாகி விட்டது. அந்த மாமி மறுநாள் வரச் சொன்னாள். "நாங்கள் இருந்து பார்த்துவிட்டுப் போகிறோம்" என்று சொல்லிக் காத்திருந்தோம். அந்த இரண்டு மணிநேரம் அந்த வீட்டில் காத்துக் கொண்டிருந்தது அவ்வளவு சங்கடமாக இருந்தது. பசி வேறு. டீ கொண்டுவந்து கொடுத்தாள், அவர்கள் வீட்டுச் சமையல் மாமி. முன்னாடியே தெரிந்திருந்தால் சமைத்திருக்கலாம் என்று சமாளிப்பாக ஏதோ சொன்னாள். உறவினர் மாமி யாரிடமோ உள்ளே ஃபோன் பேசப் போய்விட்டாள்.

கடைசியில் அந்த உறவினர் வந்தார். எங்களை வரச் சொன்னதை மறந்து விட்டிருந்தார். ஆனால், உட்கார்ந்து என் பையனின் படிப்பு விவரம் பற்றி எல்லாம் கேட்டார். அவனும் ஆர்வமாக பதில் சொன்னான். எனக்குள் சந்தோஷமாக இருந்தது. அப்புறம் எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்ற விவரம் கேட்டவுடன், நாங்கள் எங்கள் நிலைமையை தெளிவாக எடுத்துச் சொன்னோம். என் பையன் இரண்டு வருடங்களுக்குப் பிறகு சம்பாதித்தபின் உடனே திருப்பித் தந்து விடுவான் என்றும் உத்தரவாதம் கொடுத்தோம். அவர் அமைதியாக இருந்தார். நாங்கள் கேட்ட பணம் அதிகமாகப் பட்டிருக்கிறதா அல்லது எங்களிடம் நம்பிக்கை இல்லையா என்பது தெரியவில்லை. ஏதோ சாக்கில் 'இதோ வருகிறேன்' என்று அவர் ரூமுக்குச் சென்றார். நான், 'செக்புக் கொண்டு வருவதற்காகக்கூட இருக்கலாம். ஏன் நம்பிகை இழக்கவேண்டும்' என்று என் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டேன்.

பிறகு கணவன், மனைவியாக இரண்டு பேரும் வெளியே வந்தார்கள். அந்த மாமிதான் நிறையப் பேசினாள். "அந்த மாமாவிற்கு 'பிஸினஸில்' நஷ்டம். நாங்கள் எதிர்பார்க்கும் உதவி கிடைக்காது" என்பதை வழவழவென்று பேசினாள். அவர் அமைதியாக இருந்தார். அப்புறம் அந்த மாமி, எப்படி எங்களைப் போன்றவர்கள் பெரிதாக ஆசைப்படக் கூடாது; இந்தியாவில் இருந்துகொண்டே நல்ல வேலை கிடைத்து, எப்படி முன்னேறலாம் என்பதையெல்லாம் பற்றி ஒரு பெரிய லெக்சர் கொடுத்தாள். எனக்கு வயிற்றெரிச்சல் அப்போதுதான் ஆரம்பித்தது. நான் மெல்ல எழுந்து என் கணவருக்கு சைகை காட்டினேன். எல்லாரும் விடைபெற்றோம். டிரைவர் வீட்டிற்குச் சென்றுவிட்டதால் பஸ் ஸ்டாண்ட் வரை கொண்டு விடாததற்கு வருத்தம் வேறு தெரிவித்தார்கள். அந்த மாமா, பையன் கையை குலுக்கினார். எனக்கு வந்த ஆத்திரத்தில் அழுகையும் வரவில்லை. பேச்சும் வரவில்லை. அமைதியாக வீட்டுக்கு வந்தோம். மாமியார் ஆவலுடன் காத்திருந்தாள். புலம்பி அழுதேன். "கடவுள் விட்ட வழி" என்று உறங்கப் போனோம். என் கணவர், "எந்த தைரியத்தில் நாம் இவனை மேற்படிப்பிற்கு அனுப்ப நினைத்தோம். அந்த உறவினருக்கு நமக்கு உதவி செய்யவேண்டும் என்று என்ன கடமையிருக்கிறது? அவரைக் குறைசொல்லிப் பிரயோசனம் இல்லை. இவனுக்குத் தலையில் எழுதியிருக்கிறது என்றால் அது நடக்கும்" என்று சொல்லிவிட்டு மறுநாள் வேலைக்குப் போய்விட்டார்.

என் கணவர் சொன்னபடிதான் நடந்தது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு மளிகைக்கடைச் செட்டியார் அம்மாளுக்கு எங்கள் நிலை தெரிந்து, (என் மாமியார் உபயம்) அந்த நல்ல மனிதர் எங்களுக்கு வங்கியில் இருப்பைக் கட்டப் பணம் உதவினார். என் கணவரின் நண்பரின் உறவுக்காரர் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார். அந்த நண்பர் ப்ளேன் டிக்கெட் வாங்கிக்கொடுத்தார். இப்படி விஷயம் தெரிந்து இரண்டு, மூன்று பேர் தாங்களாலான உதவியைச் செய்து, எப்படியோ இங்கே வந்து படித்து, முடித்து, மிக நல்லநிலையில் இருக்கிறான். என்னால் முடிந்தவர்களுக்கெல்லாம் நானும் முடிந்த அளவு உதவிக் கொண்டிருக்கிறேன். என் கணவரும், மாமியாரும் இப்போது இல்லை. ஆனால், அவர்களுடைய நல்ல குணங்களை என் பையனிடம் விட்டுச் சென்றிருக்கிறார்கள். மிகவும் பெருமையாக இருக்கிறது.

இத்தனையும் நான் ஏன் எழுதுகிறேன் என்றால், சில மாதங்களுக்கு முன்னால் ஒரு பையனிடமிருந்து உதவி கேட்டு மின்னஞ்சல் வந்திருந்தது. அந்த 'அருமை' உறவினரின் பேரன் இவன். அவர் மறைந்து போய்விட்டார். அவர் மனைவிக்குத் தொழிலை நிர்வகிக்கத் தெரியாமல் நிறைய ஏமாற்றப்பட்டுவிட்டார். சொந்த மாப்பிள்ளையே ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகி விட்டார். அந்தப் பெண்ணும் அவளுடைய பையனும் அந்த மாமியுடன் இருக்கிறார்கள் என்று சில வருடங்கள் முன்பு இந்தியா போனபோது கிடைத்த செய்தி. நான் தான் அவர்களைப் பற்றி நினைப்பதையே விட்டுவிட்டேனே! எல்லோருக்கும் உதவி செய்கிறேன். ஆனால் சுடச்சுட அந்த மாமிக்குக் கடிதம்போட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. "தோணி வண்டி தோணி" என்பது போலத்தான். என் பையன், "உனக்கு இஷ்டமிருந்தால் அனுப்பு அம்மா. பழசையெல்லாம் மறந்துவிடு" என்கிறான். என்னால் முடியவில்லை. எல்லாரையும் இன்றும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன் - பக்கத்து வீட்டுச் செட்டியார், அமெரிக்காவில் இருந்த பாதிரியார், என் கணவர்கூட வேலைசெய்த கடைநிலை ஊழியர், எங்கள் கிராமத்தில் இருந்த உறவினர் - எல்லோரும் உதவிக்கரம் நீட்டியதை. ஆனால், இந்தக் குடும்பத்துக்கு எதுவும் செய்யப் பிடிக்கவில்லை. அவ்வளவு மனது காயமாகிவிட்டது. அந்தப் பையனுக்கே எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எல்லாவற்றையும் விவரமாக எழுதிவிடலாமா என்று தோன்றுகிறது. இதுபோன்ற உறவுகள் யாருக்கு வேண்டும்? நீங்களே சொல்லுங்கள். என் நிலைமையில் நீங்கள் இருந்தால் இந்த வலியில் என்ன செய்வீர்கள்?

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே,

உடலாலோ, பணத்தாலோ பிறரைச் சார்ந்து நின்று/நிற்க வேண்டிய அனுபவம் நம் எல்லாருக்குமே பொதுவாக இருக்கும். மிகச் சங்கடமான நிலை. ஆனால், இது ஒரு அருமையான அனுபவம். வாங்கும் நிலையில் இருந்தால்தான், கொடுக்கும் நிலையில் பெருமை தெரிகிறது. ஒருவர் நம்மைப் பிடித்துத் தள்ளும்போதுதான் நம்மை அணைத்த பிறரை பாராட்டத் தெரிகிறது. மனம் புண்படும்போது, பண்படுகிறது. ஒவ்வொரு கசப்பு அனுபவமும் காரம், ருசி நிறைந்த பாடமாக மாறுகிறது. உங்கள் மகனின் நிலை மற்றக் குழந்தைகளுக்கு இருக்கக்கூடாது என்று எல்லாருக்கும் உதவி செய்கிறீர்கள். செல்வாக்கின் கர்வத்திலோ, பொறாமையிலோ அந்த உறவினர் உங்களுக்கு்ள் ஏற்படுத்திய உணர்வலைகள்தான் இன்றைக்கு இல்லாத பலருக்கு உதவியலைகளாக மாறியிருக்கின்றன. இன்னும் எத்தனையோ நன்மைகளை நான் எழுதிக்கொண்டே போகலாம். குனிந்து நிற்கும்போது, நிமிர உடல் வளைந்து கொடுக்கிறது. இல்லாமை அவமானம் இல்லை. எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதிலும் தவறு இல்லை. எந்த அனுபவத்தையும் பாடமாக எடுத்துக் கொள்ளும்போது - மனது சுருங்கியிருக்கும். அப்போது அறிவு விரிந்து மனதை அணைத்து ஒத்தடம் கொடுக்கும். "இனிமேல் எதிர்பார்ப்புகளைக்கூட இப்படி எடுத்துக்கொள்" என்று அறிவுரை கொடுக்கும். நீங்கள் இன்று ஒரு பெருமையான தாய். ஒரு உறவை அடைத்தாலும் பல உறவுகளைப் பெருக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

முடிக்கும்முன் ஒரே ஒரு கேள்வி. அந்த உறவினரின் பேரன் - அவன் என்ன தவறு செய்தான்?

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com