தமிழ்நாடு அறக்கட்டளையின் ABC திட்டம்!
"வணக்கம் டீஈஈஈ..ச்ச்சர்!" என்று நீளமாக ராகம்பாடி வரவேற்கிறார்கள் அந்த மாணவ மாணவியர். ஆங்காங்கே நைந்திருந்தாலும், துவைத்து உடுத்திய சுத்தமான சீருடை. பளிச்சென்ற முகங்கள். புதிதாக வந்திருக்கும் ஒருவருடன் அளவளாவப் போகும் உற்சாகம் கண்களில் தெரிகிறது. அது சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு அருகில் இருக்கும் கொன்னத்தான்பட்டி என்ற குக்கிராமத்தின் ஊராட்சி நடுநிலைப்பள்ளி. அமெரிக்காவாழ் தமிழர்கள் தங்கள் தாய்மண்ணுக்காக உருவாக்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் ABC திட்டம் செயல்படும் பள்ளிகளில் ஒன்று.

ஆறாம் வகுப்பில் படித்தாலும் ஆனா, ஆவன்னா தெரியாமல் இருக்கும் பரிதாபமான மாணவர்களுக்கு எழுத்தறிவித்துள்ளது TNF. அடிப்படைப் பாடங்கள்கூடத் தெரியாமல் பள்ளிக்குப் பையோடு வந்துபோய்க் கொண்டிருந்த, கல்வியில் மிகவும் பின்தங்கிய மாணவர்களை, சிறப்புப் பயிற்சிகள் மூலம் முன்னணிக்குக் கொண்டுவந்திருக்கிறது TNF. இதற்காகக் கல்வித்துறையுடன் ‘புரிந்துணர்வு ஒப்பந்தம்’ கையெழுத்திடப்பட்டுள்ளது. கல்வித்துறையில் ஒரு மகத்தான சாதனை இது.

நம்முடன் வந்திருந்த TNF சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத்கண்ணன், "நிறைய மாணவர்களுக்கு அடிப்படை அரிச்சுவடிகூடத் தெரியாத நிலைமைதான் இருந்தது. படிக்கவே தெரியாத பிள்ளைகளை ஒரு கட்டத்தில் படிப்பை நிறுத்திட்டு, வீட்டுவேலைக்கு அனுப்பிடுவாங்க. பின்தங்கிய மாணவர்களை மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வுசெய்து, அவங்களுக்குத் தனிக்கவனம் செலுத்தினோம். எங்க ABC திட்டத்தின்கீழ் பி.எட். படிச்ச ஆசிரியர்களை நியமித்திருக்கிறோம். இதற்காக இந்த ஆசிரியர்கள் சிறப்புப் பயிற்சி எடுத்திருக்காங்க. தினமும் தனிப்பட்ட முறையில் 2 மணிநேரம் தமிழ், ஆங்கிலம், கணிதம் இந்த மூன்று பாடங்களிலும் வாசித்தல், எழுதுதல் எல்லாமே கற்பிக்கிறாங்க. 30 மதிப்பெண் வாங்கின மாணவர்கள் இப்போ 60 மதிப்பெண் வாங்குறாங்க!" என்று கூறி நம்மிடம் மதிப்பெண் பட்டியலைக் காண்பித்தார்.

தலைமை ஆசிரியை பாலாமணி, "படிப்பில் பின்தங்கிய பிள்ளைங்களுக்கு நாங்க தனிப்பட்ட கவனம் செலுத்த முடியறதில்லை. ஆனா, எங்க வேலையை எடுத்துச் செய்யுது தமிழ்நாடு அறக்கட்டளை. மோசமா இருந்தவங்க மட்டும் இல்லை; ஆர்வம் இருக்கிற எந்த மாணவர் வேணாலும் இந்த வகுப்பில் வந்து படிக்கிறாங்க. ஒவ்வொரு மாதமும் முன்னேற்றம் பாக்கமுடியுது. எங்க சிரமத்தைப் புரிஞ்சுக்கிட்டு, எங்க வேலையைப் பகிர்ந்துக்கும் அறக்கட்டளைக்கு நன்றி" என்று கைகூப்புகிறார். அவ்வூரில் ABC திட்டத்தின் ஆசிரியை வெண்ணிலா மேலும் விளக்கினார். அங்கிருக்கும் அனைத்து மாணவர்களும் கூலித்தொழிலாளிகளின் பிள்ளைகளாம். முக்கால்வாசிப் பெற்றோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். "படிப்பு வரலையா... ஆடு, மாடு மேய்" என்ற நிலைமை இருந்திருக்கிறது. அத்தனை பேருக்கும் அதிரடியாக மாற்றம் தந்திருக்கிறது, ஆயிரக்கணக்கான மைல்தூரம் தள்ளியிருக்கும் அமெரிக்கத் தமிழர்களின் அக்கறை.

குழந்தைகளின் முன்னேற்றத்தைப் பார்க்கும் பெற்றோர்களிடமும் பெருமகிழ்ச்சி. எட்டாம் வகுப்பு படிக்கும் ஷாலினியின் தாய் மகாலெட்சுமி, கோயில் வாசலில் தேங்காய், பழக் கடை நடத்துபவர். அவருடைய கணவருக்கு வேலை இல்லை. மகளின் மேம்பாட்டைக் கண்டு நெகிழ்ந்து, "எங்களுக்கு எங்கேங்க இதையெல்லாம் கவனிக்க நேரம்! இந்த ஏ.பி.சி. வகுப்புக்குப் போனதில இருந்து எல்லாத்தையும் ஸ்கூல்லயே பார்த்துக்கிறாங்க. இப்ப நல்லாப் படிக்குது" என்கிறார். "எனக்கு கலெக்டர் ஆகணும்னு ஆசை. அதுக்கு இங்கிலீஷ் படிக்கணுமேன்னு கவலையா இருந்துச்சு. இப்போ ஸ்பெஷல் க்ளாஸ் மூலமா எனக்கு இங்கிலீஷ், தமிழ், மேத்ஸ் எல்லாமே நல்லாப் படிக்கமுடியுது. நல்ல மார்க் எடுத்திருக்கேன்!" என்கிறார் வருங்கால ஐ.ஏ.எஸ். ஷாலினி.

ABC திட்டத்துக்கென தனியாக பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு, அதுவே அனைத்துப் பள்ளிகளிலும் பின்பற்றப்படுகிறது. அதேபோல் மாணவர்களின் முன்னேற்றமும் கூர்ந்து நோக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகிறது.

அருகிலிருக்கும் வடுகபட்டி கிராமப்பள்ளியிலும் பார்வையிட்டோம். குறிசொல்லும் ஜோஸியக்காரர்கள் நிறைந்த அந்தக் கிராமத்தில், ஒவ்வொரு மாணவருமே குடும்பத்தில் பள்ளிவரும் முதல்நபராம். அறக்கட்டளை சிறப்பு ஆசிரியர் சாரதா ஆங்கிலம் வாசிக்க இந்த மாணவர்களுக்கு ஃபொனடிக்ஸ் முறையில் கற்பிக்கிறார். அழகாக ஆங்கிலம் வாசிக்கிறார்கள் பிள்ளைகள். கேட்க ஆச்சரியமாக இருக்கிறது.

ABC திட்டத்தை, TNFக்காக 2010ல் வித்திட்ட அதன் துணைத்தலைவர் சோமலெ சோமசுந்தரத்திடம் பேசினோம். "உருவாக்கிய அன்றே, இத்திட்டம் ஆலமரமாக வளரும் என்று நினைத்தோம். இன்று சிவகங்கை, வேலூர், கடலூர், நாமக்கல், நாகப்பட்டினம், திருவாரூர், சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி என பல மாவட்டங்களின் கிராமங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியைத் தருகிறது" என்கிறார். "இந்த அரசுப் பள்ளிகளில் நாம் தரும் மென்திறன் பயிற்சி, கல்லூரி சுற்றுப்பயணம் போன்ற செயல்பாடுகள், நன்றாகப் படிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுகிறது" என்கிறார் அறக்கட்டளையின் சென்னை அறங்காவலர்குழுத் தலைவர் ரகுராஜ்.

"தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ABC திட்டத்தைச் செயல்படுத்த விரும்புவதாக, TNF தலைவர் சிவசைலம் தெரிவித்துள்ளது, அரசுபள்ளி மாணவர்களுக்குக் கிடைத்த அற்புதப் பரிசு!" என்கிறார் சென்னை மையத்தின் அறங்காவலர் ராஜரெத்தினம்.

இணையதளம்: tnfusa.org

பிரேமா நாராயணன்,
சென்னை.

© TamilOnline.com