தென்றல் பேசுகிறது...
தென்றல், மார்ச் 2016 இதழில் 'பார்வை' என்ற சிறுகதை எப்படி செல்பேசி அடிமைத்தனம் கண்ணிருப்பவர்களையும் பார்வையற்றவர்களாகச் செய்துவிடுகிறதென்பதை அழகாகச் சொன்னபோது பல வாசகர்களும் அதைப் பாராட்டினார்கள். கார் ஓட்டும்போது செல்ஃபோனில் பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது, முகநூல் போன்ற வலைதளங்களைப் பார்ப்பது ஆகியவை ஓட்டுனரின் கவனத்தைச் சிதைத்து விபத்துக்களுக்குக் காரணமாகிவிடுவதை அறியாதவரில்லை. இதைப் புரிந்துகொள்ள ஐன்ஸ்டீனாக இருக்கவேண்டியதில்லை. அறிந்தாலும், புரிந்தாலும் "என்ன ஆகிவிடப் போகிறது!" என்ற அலட்சியப் போக்கினாலும், செல்பேசிக்கு அடிமையாகிவிட்டதாலும் காரோட்டுகையில் இவற்றைச் செய்து விபத்துக்கு ஆளாகுபவர் மிகப்பலர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தனக்கும் பிறருக்கும் எத்தனை ஆபத்தானதோ, அதற்குச் சற்றும் குறைவில்லாதது செல்ஃபோனில் கண்ணைப் பதித்தவண்ணம் ஓட்டுவதும். அதைச் சட்டபூர்வமாகத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக Textalyzer மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உடனே Breathalyzer நினைவுக்கு வரும். சுருக்கமாகக் கூறினால் விபத்து நடந்த சமயத்தில் காரோட்டி செல்பேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாரா என்பதை இந்த மென்பொருள் போலீஸுக்குக் கூறிவிடும். இதைப் பயன்படுத்தச் சட்டரீதியான தடங்கல்கள் இருந்தாலும், இப்படி ஒன்று வருவதும், கடுமையான தடுப்புச் சட்டங்களை இயற்றுவதும் அவசியம். பல ஆண்டுகளாகக் குறைந்துகொண்டே வந்த சாலை விபத்துக்கள், 2015ம் ஆண்டில் 8 சதவீதம் கூடியிருப்பதே இதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

*****


மகாராஷ்டிர மந்திரி ஒருவர் வறட்சிப் பகுதிகளைப் பார்வையிடப் போன இடத்தில் தனக்குப் பின்னே வறண்ட ஏரி இருக்குமாறு ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டது முகநூலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மலையுச்சி, நான்காவது மாடியின் விளிம்பு என்று கிட்டத்தட்ட தற்கொலை முனைகளில் நின்றுகொண்டு செல்ஃபி எடுக்க முயன்று, உயிரை இழப்பதும் அன்றாடம் செய்திகளில் வருகிறது. அதைவிட நெஞ்சில் ஈரமற்ற செயல் விபத்து நடந்த இடத்தில் அடிபட்டவர் கிடக்கும்போது அவர்முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்வதாகும். மிதமிஞ்சிய சுயபோதையின் வெளிப்பாடுகள் இவை. தன்னம்பிக்கை, தன்னை நேசித்தல் என்பதைத் தாண்டி, தன்னையன்றி வேறெதுவும் முக்கியமல்ல என்கிற அளவுக்கு இந்தச் சுயபோதை மனிதர்களைத் தள்ளிவிடுகிறது. இதைச் சட்டத்தால் தடுக்கமுடியாது. ஆனால், ரயில்நிலையத்தில் செல்ஃபி எடுத்துக் கொள்வதைத் தடைசெய்திருக்கிறது இந்திய ரயில்வே. செல்ஃபோன் வரமா, சாபமா என்பதைத் தீர்மானிப்பது அதைப் பயன்படுத்துபவரின் கையில்தான் இருக்கிறது.

*****


2016ல் இந்திய அரசின் 'பத்மஸ்ரீ' விருதைப் பெற்றுள்ள D.K. ஸ்ரீநிவாஸன் பிரபல ஹிந்து மிஷன் ஆஸ்பத்திரியை நிறுவியதோடு, தாம்பரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்களை நாள் தவறாமல் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திவருகிறவர். எளியோருக்கும் சிறந்த கல்விதரும் 'வள்ளுவர் குருகுலம்' பள்ளிகளின் தாளாளாராக இருந்து பல ஆண்டுகளாகச் சிறப்புற நடத்திவருகிறவர். அவரது நேர்காணல் எவருக்கும் சேவைப்பணியில் ஈடுபட உற்சாகம் தருவதாக இருக்கும். வாஷிங்டன் காங்கிரஷனல் மாவட்டத்தின் டெமாக்ரடிக் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் பிரமீளா ஜெயபால், இந்தியாவில் பிறந்து, இந்தோனேஷியாவில் படித்து, அமெரிக்காவில் சமூகப்பணியில் முன்னணியில் நிற்பவர். அமெரிக்காவுக்குக் குடிவந்தோர் சமத்துவம் மற்றும் உரிமைகளுக்காக OneAmericaவைத் தோற்றுவித்துப் போராடி வருகிறவர். பொதுவாழ்க்கையில் இந்திய அமெரிக்கர்கள் தடம்பதிக்க வேண்டுமென்றால் எத்தகையை நெடுநோக்கோடு உழைக்கவேண்டுமென்பதற்கு ஒரு முன்னுதாரணம். அவரது நேர்காணல் இந்த இதழின் சிறப்பு. இன்னும் பல சுவையான அம்சங்களும் உண்டு.

வாசகர்களுக்கு மே தினம், புத்தபூர்ணிமை மற்றும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

மே 2016

© TamilOnline.com