திருக்குற்றாலநாதர் ஆலயம்
தமிழ்நாட்டில் திருச்செந்தூர் மாவட்டம் தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது குற்றாலம். சென்னையிலிருந்து ரயில் அல்லது சாலை வழியே தென்காசிக்குச் சென்று அங்கிருந்து சாலைவழியே குற்றாலத்தை அடையலாம்.

உடல்பிணி, மனப்பிணி மட்டுமல்லாமல் பிறவிப்பிணியும் தீர்க்கும் தலம் குற்றாலம். கு என்றால் பிறவிப்பிணி என்பது பொருள். தாலம் என்றால் தீர்ப்பது என்று பொருள். கு + தாலம் = குற்றாலம் என மருவி அன்னை யோகசக்தியின் அருளால் பிறவிப்பிணி தீர்க்கும் தலமாக விளங்குகிறது. குற்றாலம் என்னும்போது குளிர்நீர் அருவிகளும் குறவஞ்சியும் பொதிகைமலையும் நினைவில் வரும். இது அன்னை பராசக்தியின் அருள்பொங்கும் மலையாகும். உயர்ந்து வளர்ந்த மூன்று சிகரங்களை தன்னகத்தே கொண்டிருப்பதால் திரிகூடமலை என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆதிபராசக்தியே மலையில் வந்து அமர்ந்திருப்பதால் இத்தலம் யோகபீடமாகவும் உள்ளது. அவனி முழுவதும் உருவாவதற்கு இந்த மலையே மையமாய் விளங்குவதால் திருக்குறாலம் தாணிமலை என்றும் புகழ்பெற்றுள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பதுபோல் மலை, சிகரம், அருவி என மூன்று சிறப்புப் பெற்றது இத்தலம். குற்றாலம் மலை என்றால், மூன்று சிகரங்களும் மும்மூர்த்திகள். எங்கும் பொங்கும் புனல்களான நீர்வீழ்ச்சிகளே தீர்த்தம். இத்தலத்தில் ஹரி, ஹரன், அயன் என மும்மூர்த்திகளும் அன்னை பராசக்தியால் குழந்தைகளாகத் தாலாட்டி வளர்க்கப்படுவதாக ஐதீகம். இறைவன் திருநாமம் குற்றாலநாதர். அன்னையின் நாமம் குழல்வாய் மொழியம்மை. திருஞானசம்பந்தர், கபிலர், பட்டினத்தார் ஆகியோர் இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். தலவிருட்சம் குறும்பலாமரம்.

குற்றாலநாதர் கோயிலின் ராஜகோபுரத்திற்கு வெளியே செண்பக விநாயகர் கோவில் உள்ளது. திருகூட மண்டபம், நமஸ்கார மண்டபம், மணிமண்டபம் தாண்டி கருவறையை அடைந்தால் குற்றாலநாதர் சிவலிங்கத் திருவுருவில் காட்சி தருகிறார். இறைவன் திருவுருவில் அகத்திய முனிவரின் கைரேகை பதிந்திருப்பதாகக் கூறுகிறார்கள். இதைப்பற்றி ஒரு புராணக்கதை வழங்கப்படுகிறது. முற்காலத்தில் இது திருமால் கோயிலாக விளங்கியது. அகத்தியர் திருமாலை வழிபட விரும்பினார். ஆலய அர்ச்சகர்கள் திருநீறணிந்து சிவனடியாராகக் காட்சி அளித்த அகத்தியரை உள்ளே அனுமதிக்கவில்லை. அகத்தியர் அருகிலுள்ள இலஞ்சி என்னும் தலத்தில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானிடம் தன் மனக்குமுறலைக் கொட்டினார். முருகன், வைணவக் கோலத்தில் ஆலயத்தினுள் சென்று இறைவனைச் சிவனாக வழிபடுமாறு சொன்னார். அவ்வாறே அகத்தியரும் செல்ல, அர்ச்சகர்கள் அனுமதித்தனர்.

உள்ளே சென்ற முனிவர், கருவறைக்குள் சென்று, திருமால் முடிமீது கைவைத்து அழுத்தி, "குறுக, குறுக" என்றாராம். திருமால் உருவம் குறுகி சிவலிங்கமாகி விட்டது. முனிவர் அதன்பின் தனது வழிபாட்டினை முடித்துக்கொண்டு திரும்பினார். வைணவத் தலமாக இருந்த திருக்குற்றாலம் இவ்வாறு சிவத்தலமாக மாறியது என்கிறது புராணம்.

குற்றாலநாதருக்குத் தினசரி சந்தனாதி திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. நைவேத்தியங்களில் சுக்குக் கஷாயம் பிரதானம். பிரகார வலம் வரும்போது காசி விஸ்வநாதர், அண்ணாமலையார், காளத்தீஸ்வரர், சிவாலய முனிவர், தர்மசாஸ்தா, வன்மீகநாதர், நெல்லையப்பர், அகத்தியர் சன்னிதிகளை தரிசிக்கலாம். திருக்குற்றாலநாதர் ஆலயத்தின் வடப்பக்கத்தில் அன்னை யோகசக்தியாக எழுந்தருளி உள்ளாள். மகாமேரு அமைந்துள்ள இந்தச் சன்னிதியில் தாணுமாலயன் தொட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது. குற்றாலநாதர் சன்னிதிக்கு வலப்பக்கத்தில் அன்னை குழல்வாய் மொழியம்மை தனிக்கோவில் கொண்டிருக்கிறார். நின்ற திருக்கோலத்தில், கருணை ததும்பும் விழிகளோடு உதட்டில் சற்றே புன்னகை மலரக் காட்சிதரும் அன்னையைப் பார்க்கப் பார்க்கப் பரவசம். குற்றாலநாதர் கோயிலுக்கு வடக்கே சித்திரங்கள் நிறைந்த சித்திரசபை உள்ளது. நடராஜப் பெருமானும் இதில் சித்திரமாக உள்ளார். அவருக்குரிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை இதுதான்.

அன்னையின் சன்னிதிக்குத் தென்புறத்தில் தலவிருட்சமான குறும்பலாமரம் உள்ளது. நான்கு வேதங்களும் தவம் செய்த பலாமரத்தடியில் ஒரு சிவலிங்கத் திருமேனி உள்ளது. அதனால் இத்தலத்திற்கு 'குற்றாலம்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு கருத்துண்டு. குறும்பலாமரமே ஈசன் வடிவம்; மரத்தின் பழம், சுளை, சுளையின் விதை என அனைத்துமே ஈசனின் சிவலிங்க வடிவம் என ஞானசம்பந்தப் பெருமான் தனது குறும்பலா பதிகத்தில் பாடியுள்ளார்.

குற்றாலத்தில் மூன்று அருவிகள் பிரபலமானவை. தேனருவி, செண்பகாதேவி அருவி, குற்றால அருவி என்பனவே அவை. செண்பகாதேவி அருவி அருகே ஒரு காளிகோவில் அமைந்துள்ளது. குற்றாலநாதர் கோவிலினுள் பிராகரத்தை வலம் வரும்போது சாளரம் வழியாகக் குற்றால அருவி பொழிவதை ஓரிடத்தில் காண இயலும். இந்த அருவிகளில் நீராடினால் உடற்பிணி, மனப்பிணி நீங்கி நலம்பெறுவதாக நம்பிக்கை. ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து நீராடி, ஈசனை வழிபட்டுச் செல்கின்றனர்.

சீதாதுரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com