மார்ச் 2016: வாசகர் கடிதம்
இந்தமாதம் தங்கள் பத்திரிகையில் இடம்பெற்ற அனைத்து விஷயங்களையும் முழுவதுமாக மடிக்கணினியில் கேட்டு ரசித்து மகிழ்ந்தேன். வலைத்தளத்தில் உள்ள தென்றலின் ஒலிவடிவத்தை இதுநாள்வரை நான் உபயோகப் படுத்தியதில்லை. வீட்டில் வேலை செய்துகொண்டே தென்றலைக் கேட்பது மிகவும் சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. வெளியுலகிற்கு அதிகம் அறியப்படாத தமிழ்வல்லுனர்களை, வழிகாட்டிகளை வெளிக்கொணரும் மேடையாகத் திகழும் தென்றலுக்கு என்னுடைய நன்றி.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிபோர்னியா

*****


கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த இந்தியர்கள் சிறு குடும்பமாகப் பிரிந்து, தம் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கமாகியுள்ளது. அதுவும் அமெரிக்காவில் வசித்துவரும் இந்தியர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து சாதிப்பதைப் பார்த்துப் பெருமையாகவே இருக்கின்றது. பல மாநிலங்களில் இருந்தும் வந்து அவரவர் தம் மொழிகளுடன் இணைந்து சங்கங்கள் வைத்துப் பண்டிகை தினங்களைக் கொண்டாடி மகிழ்கின்றனர். "சுத்தம் சோறு போடும்" என்பதற்கேற்ப தம் வேலைகளைத் தாமே செய்துகொண்டு பொறுப்புடன் இருக்கிறார்கள் இளைஞர்கள். 'மரம் ஒரு வரம்' என எங்கும் சுத்தமாகச் சாலைகளை அலங்கரிக்கும் மரங்கள் ஒரு பிரமிப்பே! தொலைதூரம் வந்தாலும் இந்தியர்கள் என்ற உணர்வு மறக்கமுடியாது. ஆறு மாதங்களே அனுமதியிருந்தும் தம் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளைக் காணவரும் பெற்றோரும் சம்பந்திகளும் இணைய வழிவகுக்கும் அமெரிக்காவை இந்தியர்களுக்கு 'வழிகாட்டும் பூமி'யாகக் கருதுகிறேன்.

எஸ்.ஜி. சித்ரா,
சார்லட்

*****


நான் சமீபத்தில் கலிஃபோர்னியாவில் என் மகள் வீட்டுக்கு வந்திருந்தபோது ஒரு கடையில் 'தென்றல்' பார்த்தேன். அட்டைப்படத்தால் கவரப்பட்டு விலை என்னவென்று கேட்டேன். இலவசம் என்று அறிந்து ஆச்சரியமடைந்தேன். அற்புதமான கட்டுரைகள், அதிகமான தகவல்கள் என்று தரம் மிகுந்ததாக இருப்பதைப் பார்த்தேன். எனது பாராட்டுகள்.

விஸ்வநாதன் பிச்சை, சென்னை

*****


ஃபிப்ரவரி இதழ் சாதனையாளர் நான்குவயது அன்விதா பிரபாத் 109 ஆத்திசூடிப் பாக்களை அழகாகச் சொல்லிப் பரிசைத் தட்டிச்சென்றது பெரிய சாதனை. ராஜா கிருஷ்ணமூர்த்தி நேர்காணல் மற்றும் இதர பகுதிகள் வழக்கம்போல் சுகமான தென்றலைக் கொடுத்தது. அன்னிய மண்ணில் இந்தியர்களுக்குத் தென்றல் ஒரு வரப்பிரசாதம்.

கே.ராகவன்,
பெங்களூரு, இந்தியா

© TamilOnline.com