தெரியுமா?: 'தமிழர் தகவல்' 25வது ஆண்டு விழா
கனடாவிலிருந்து வெளிவரும் தமிழர் தகவல் மாதாந்திர சஞ்சிகை அதன் வெள்ளி விழா மலர் வெளியீட்டை ஃபிப்ரவரி 7ம் திகதி ரொறன்ரோவில் நடத்தியது. 1991ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி வெளிவர ஆரம்பித்த தமிழர் தகவல் கடந்த 300 மாதங்களாக ஓர் இதழ்கூடத் திகதி தவறாமல் வெளியிடப்பட்ட சாதனைக்குரியது. ஏறத்தாழ நானூறுக்கும் அதிகமான எழுத்தாளர்களின் படைப்புகள் இருபத்தைந்து வருடகால இதழ்களில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஃபிப்ரவரி மாதத்தில் வெளிவரும் ஆண்டு மலர் நூற்றைம்பதுக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும்.

இந்த மாதம் வெளிவந்த வெள்ளி ஆண்டு மலர் 'இளந்தோப்புச் சுவடு' என்ற பெயரில் எழுபத்தைந்துக்கும் அதிகமானவர்களின் படைப்புகளைத் தாங்கி இருநூற்றியிருபது பக்கங்களில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகமொன்று வெளியிட வேண்டிய தகுதிகளைக் கொண்டதான தமிழர் தகவல் ஆண்டு மலர்கள் சமூகத்திலிருந்து சமூகத்துக்கு எனும் கருக்கோளுடன் வெளிக்கொணரப்படுவதை சான்றோர் பலரும் பாராட்டியுள்ளனர். ஆரம்பத்திலிருந்து ஒவ்வோர் ஆண்டும் மலர் வெளியீட்டுடன் இணைந்ததாக விருதுகள் வழங்கும் வைபவம் இடம்பெறும்.

இவ்வருடம் எண்மர் தமிழர் தகவல் விருதுகளையும் தங்கப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர். இவ்வருடம் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றவர் பிரிட்டனில் வாழும் மருத்துவப் பேராசிரியரும் மகப்பேற்று நிபுணருமான சர். சபாரட்ணம் அருள்குமரன் அவர்கள். 2009ம் ஆண்டில் இவரது அரும்பணிகளுக்காக இங்கிலாந்தின் முடிக்குரிய மகாராணியாரால் இவர் 'சர்' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். வாழ்க்கையின் மகத்துவத்தை பகவத் கீதையூடாக விளக்கி பேராசிரியர் ஆற்றிய ஏற்புரை வெள்ளிவிழாவின் மகுடமாக அமைந்தது. தமிழர் தகவலை ஆரம்பத்திலிருந்து வெற்றிகரமாக நடத்திவரும் முதன்மை ஆசிரியர் திரு. திருச்செல்வமும், ரஞ்சி திருச்செல்வமும் பாராட்டுக்குரியவர்கள்.

அ. முத்துலிங்கம்,
கனடா

© TamilOnline.com