பி.எஸ். இராமையா
நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் 'மணிக்கொடி காலம் (1933-39) என்றொரு பகுப்பு உண்டு. வேறு வார்த்தையில் சொன்னால் நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்பவர்கள் மணிக்கொடியை ஓர் எல்லையாகக் கொள்வது தவிர்க்க இயலாததாகிவிட்டது. மணிக்கொடியின் பரிணாமம் அவ்வாறு கொள்வதிலுள்ள நியாயங்களை இயல்பாகக் கொண்டிருந்தது.

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மணிக் கொடிக்கு முக்கியமான இடமுண்டு. குறிப்பாக பி.எஸ். இராமையா காலத்து மணிக்கொடி சிறுகதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. மணிக்கொடி என்றால் சிறுகதை, சிறுகதை என்றால் மணிக்கொடி என்பதான மாற்றம் உருவானது.

பி.எஸ். இராமையா என்றழைக்கப்படும் வத்தலக்குண்டு இராமையா நாடகம், சிறுகதை, நாவல், திரைப்படம், எனப்பல துறைகளிலும் ஈடுபாடு காட்டியவர். அதைவிட சுதந்திரப் போராட்டத்திலும் தீவிரமாகப் பங்கு கொண்டவர். இவர் 1905 ல் வத்தலக்குண்டில் பிறந்தார். தனது பதினெட்டாவது வயதில் எழுத்துத்துறையில் நுழைந்தார். அன்று முதல் தீவிர எழுத்தாளராகவே மாறினார். அதிகமாக எழுதிக் குவித்தார். இதுவே அவர் குறித்த முரண்பாடான மதிப்பீடுகளுக்கும் காரணமாயிற்று.

பி.எஸ். இராமையா முந்நூறுக்கும் குறை வில்லாமல் சிறுகதைகள் எழுதியுள்ளார். ஆனால் இவரது கதைகள் பற்றி விமரிசகர் கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் உண்டு. குறிப்பாக இவர் எழுதிய கதைகள் பெரும்பாலும் நாவல் சுருக்கமாகவே அமைந்துள்ளன. சிறுகதைக்குரிய பண்பில் 'எதிர்க்கட்சி' போன்ற ஒரு சில கதைகள்தாம் தேறும் எனவும் கருத்து நிலவுகிறது. ஆனால் இது பி.எஸ். இராமையாவின் மொத்தப் படைப்பாளுமை சார்ந்து, ஏனைய சிறுகதைப் படைப்புகளுடன் ஒப்பிட்டு ஆய்வு நோக்கி வெளிப்பட்ட கருத்து அல்ல.

பரிசு பெற்ற 'மலரும் மணமும்' கதை குறித்து பி.எஸ். வெளிப்படுத்திய சிந்தனை இவ்விடத்தில் நோக்கத்தக்கது. "உண்மை யைச் சொல்கிறேன் உருவம் என்பதெல்லாம் எதுவும் தெரியாது. சிறுகதை, கதை என்ற வித்தியாசம் தெரியாது. விதவை மறுவிவாகம் என்பது அப்போது பெரிதாகப் பேசப்பட்ட பிரச்சினை. இந்து சமூகத்தில் பெண்கள் மனசைக் கிளறும் வாய்ப்புகள் அதிகம். சாப்பாட்டுக்கு இலை போட்டுக் கையைக் கட்டிப் போடுவது மாதிரி. இரண்டாவது எங்கள் கிராமத்தில் பாட்டி கற்சட்டியில் பழைய சாதம் பிசைந்து குழந்தைகளுக்குக் கையில் போடுவது வழக்கம். இந்தச் சித்திரங்கள் நினைவில் இருந்தன. தவிர, மெனக்கெட்டு நினைத்துச் செய்தது அல்ல. கதை தரவேண்டும் என்பது ஒன்றுதான். தவிரவும், பசிக்கும் போதுதான் சாப்பாடு வேண்டும், பசி அடங்கினால் அமிர்தமும் தேவை இல்லை."

இதன் மூலம் பி.எஸ். இராமையாவின் படைப்பு மனநிலை, சிந்தனை, இலக்கியம் பற்றிய நோக்கு அல்லது தேடல் என்ன வென்பது தெளிவாகிறது. தொடர்ந்து மணிக்கொடி மூலம் சிறுகதை பற்றிய பிரக்ஞைமேலும் வலுவும் தெளிவும் பெற்றது. தரமான கதைகள் தனித்துவத்துடன் வெளிப்பட வேண்டும் என்ற சிந்தனைக்குத் தக்கவாறு படைப்பு வெளி விரிந்தது. விரிவுக்கேற்ப வளம் நிறைந்தும் காணப்பட்டது.

ஆனால் சிறுகதை உருவம் குறித்து திட்டப்பாங்கான முறைசார்ந்த கருத்தாடலில் பி.எஸ். இராமையா பதுங்கிக் கொள்ளவில்லை. முந்நூறு கதைகள் எழுதிய பின்பும் கூட சிறுகதை உருவம்பற்றி இப்படித்தான் கூறிக்கொண்டார். "உண்மையை அப்பட்டமாகக் சொல்வதனால், இன்றுவரை எனக்கு சிறுகதை உருவத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நான் கதை எழுதும்போது அதைப்படிக்கப் போகும் மக்களைப் பற்றிய பிரக்ஞை கூட எனக்குக் கிடையாது. எங்கேயோ தொடங்கி ஒரே ஓட்டமாக ஓடிக் கதையை எங்கேயோ முடிப்பேன். அதில் விழுந்ததுதான் அதன் உருவம். அதன் விதி. இன்றுவரை நான் ஒரு கதைகூட உருவத்தைப் பற்றிச் சிந்தித்தோ, தெரிந்தோ எழுதியதே இல்லை."

இது போன்ற கருத்துகளை பி.எஸ். ராமையா 'எழுத்து' இதழுக்கு (ஜூன், 1965) வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். பி.எஸ். ராமையா தன்னளவில் கருத்துத் தெளிவுடன், படைப்பு உந்துதல் சார்ந்து தான் சிறுகதையின் பரப்பில் தனித்துவத்துடன் செயற்பட்டுள்ளார். "ஒரு கருத்து, ஒரு தத்துவம் அல்லது ஒரு மனநிலை அல்லது ஒரு சம்பவம் அல்லது இவை இல்லாத குண அமைப்பு உள்ள மனித வடிவம், இதை மையமாக அமைத்துக் கதை எழுத வேண்டும் என்ற வேகம் பிறக்கிறது. இந்த மையச்சரக்கை எந்தப் பின்தளத்தில் வைத்துக் காட்டினால் அதன் வேகம், அழகு தெரியும் என்பதை எழுத்தாளன் நிச்சயிக்க வேண்டி இருக்கிறது. வாழ்க்கையில் அவன் பெற்ற அனுபவத்தைக் கொண்டு அவன் அந்தப் பின்தளத்தைத் தேர்ந்தெடுக்கிறான்" என அவரே குறிப்பிடுவது, அவர் சார்ந்த படைப்புலகு மீதான பார்வைக்கும் மதிப்பீட்டுக்கும் உரிய ஆய்வுக் கருவிகளைத் தரத்தக்கது.

நவீனத் தமிழ் இலக்கியம் பயில்வுக்கும் பிரக்ஞைக்கும் உரிய களங்களைச் சாத்தியமாக்கிய நபர்களுள் பி.எஸ். ராமையாவும் ஒருவர். அதைவிட தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றிலும் இவரது கதைகள் தனித்து அடையாளம் காட்டக் கூடியவைதான்.

பி.எஸ். ராமையா அந்தப் பேட்டியில் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பயன்படுகிற வகையில் தெரிவித்த செய்தி முக்கியம். அதைவிட அந்தச் செய்தி மூலம் தான் யார், தனது பயணம் எத்தகையது என்பதையும் அறிவு, அனுபவம் சார்ந்து வெளிப்படுத்திய பாங்கு மேதைமை சார்ந்தது. அவை காலம் கடந்தும், இன்றும் கூட நமக்கான செய்திதான்.

"எழுத்தாளர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். வாழ்கையில் துன்பம் இருக்கிறது. துயரம் இருக்கிறது, இன்பம் இருக்கிறது. அதே போல் தீமை, புன்மை, கயமை ஆகிய தன்மைகளும் இருக்கின்றன. இவை எல்லாவற்றிலும் அழகு இருப்பதாக எழுதிவிட முடியும், திறமையுள்ள ஓர் எழுத்தாளனால். ஆனால், தீமையும் புன்மையும் கயமையும் எவ்வளவு அழகு படுத்தப்பட்டாலும் இலக்கியச் சரக்கு ஆகாது. அந்தத் தன்மைகளைச் சிறப்புப்படுத்திக் காட்டும் எழுத்து அப்போதைக்கு இலக்கியத்தரம் உள்ளதான ஒரு மயக்கத்தை எழுப்புமேயின்றி நிலைத்து நிற்கவே நிற்காது. இது நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள எந்த நாட்டிலும் நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் இலக்கியங்களைப் பார்த்தால் விளங்கிவிடும். அசிங்கத்தை அழகுபடுத்திக் காட்டுவது ஒரு அரிய திறமைதான். ஆனால் அறிவாளிகள் அதை மதிப்பதில்லை. வருங்காலத் தலை முறைகள் அதை மதிக்கவே மதிக்காது. இதை நினைவில் வைத்துக் கொண்டு எழுத வேண்டும் என்பது நான் சொல்ல விரும்பும் செய்தி."

"வாசகர்களுக்கு : சாப்பிடுகிறவன் சுவைத் தகுதி அளவுக்கு தான் சமையல் அமையும் என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. உங்களுக்குக் கிடைக்கும் இலக்கியத்தின் தரம் உங்கள் சுவைத்தகுதி அளவுக்குத்தான் இருக்கும்."

தெ. மதுசூதனன்

© TamilOnline.com