அரங்கேற்றம்: அமிர்தா சீனிவாசன்
டிசம்பர் 27, 2015 அன்று குரு திருமதி மீனாட்சி பாஸ்கரின் மாணவியும், திருமதி. ரம்யா, திரு. சீனிவாசன் தம்பதியரின் புதல்வியுமான அமிர்தாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஃபால்சம், கலிஃபோர்னியாவில் நடந்தது. சிங்கப்பூர் திருமதி. அம்புலியின் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. கம்பீர நாட்டையில், சங்கீரண நடையில் அலாரிப்புடன் நாட்டியம் களைகட்டியது. சாவேரி ராகத்தில் 'நமஹா' என்ற பாடலில் ஸ்ரீ மஹாகணபதியின் நிருத்ய கோலங்களை பக்தியுடன் அபிநயித்தார் அமிர்தா. அடுத்துவந்த ரஞ்சனி ராக வர்ணமான 'சிம்ம வாஹினி'யில் ஸ்வர, தாள, பாவங்களுக்குச் சிம்மம்போல நர்த்தனமாடினார். அதற்கு குருவின் நட்டுவாங்கமும், திரு. ஹரியின் மிருதங்கமும் பக்கபலமாக இருந்தன. தொடர்ந்து குரு. மீனாட்சியின் குருவும், தாயுமான திருமதி. சாந்தா பாஸ்கர் நடனமமைத்த 'வாரணமாயிரம்' பாடலுக்கு, ஆண்டாளாக அமிர்தா அபிநயித்தது சிறப்பு. திரு. கே.கே. சஷித் அவர்களின் வயலின் இசையும், திரு. அஸ்வின் அவர்களது புல்லாங்குழலும் சூழலை மேலும் அற்புதமாக்கின.

'ஆடிக் கொண்டார்' பாடலுக்கு சிவதாண்டவத்தை மேடையில் நிகழ்த்திக் காட்டினார் அமிர்தா. தொடர்ந்த ராகமாலிகையில் 'பாற்கடல் அலைமேலே' என்ற தசாவதாரக் கிருதியில் பத்து அவதாரங்களையும் பொருளுணர்ந்து கச்சிதமாக அபிநயித்தார். நிகழ்ச்சிக்குச் சிகரம் வைத்தாற்போல் கருடத்வ ராகத்தில் திரு. பாலமுரளி அமைத்த தில்லானாவை அமிர்தா மிக நேர்த்தியாக ஆடி அவையினரின் பாராட்டைப் பெற்றாள். நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டும்படி செல்வன் அக்‌ஷய் சீனிவாசனின் நகைச்சுவை கலந்த நிகழ்ச்சி வர்ணனை மனதைக் கவர்ந்தது.

கிருஷ்ணா சுகந்தராஜ்,
ஃபால்சம், கலிஃபோர்னியா

© TamilOnline.com