காக்கிஸ்வில்: உழவர் திருவிழா
ஜனவரி 9, 2016 அன்று மேரிலாந்தின் காக்கிஸ்வில் தமிழ்மக்கள் 'உழவர் திருவிழா'வைக் கொண்டாடினர். அமெரிக்காவின் கிழக்கு மாகாணப் பகுதிகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்க, ஏறத்தாழ 500 பேர் வாஷிங்டன், வர்ஜீனியா, டெலவர், நியூ ஜெர்சி மற்றும் பென்சில்வேனியாவிலிருந்து வந்து பங்கேற்றனர்.

நாகஸ்வர இசை அரங்கத்தில் பொங்கி ஓட, தமிழகப் பாரம்பரிய உடையிலிருந்த விருந்தோம்பல் குழுவினர் வந்தோரை வரவேற்றனர். பறையிசை முழங்க, தலைப்பாகை கட்டிக் கலைஞர்கள் அனைவரும் அணிவகுக்க, "தண்டோரா" அறிவிப்புடன் உழவர் திருவிழா துவங்கியது.

விவசாயிகளின் மேன்மையைச் சொல்லிய வில்லுப்பாட்டுடன் தொடங்கிய நிகழ்ச்சி, கோலாட்டம், ஒயிலாட்டம், மகளிர் கும்மி, கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம், பறையிசை, குறத்தி நடனம் எனப் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகளால் மனதைக் கவர்ந்தது. திரைப் பாடல்களின் ஆதிக்கம் இல்லாது கலைநிகழ்ச்சிகள், கலாசார விழுமியங்கள் கொண்டு அமைந்திருந்தது சிறப்பம்சமாக இருந்தது.

"புலம்பெயர்ந்த வாழ்க்கையில் நாம் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்னும் தலைப்பில் நிகழ்ந்த பொங்கல் சிறப்புப் பட்டிமன்றத்தை வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. ஜான் பெனடிக்ட் நடுவராக இருந்து நடத்திக்கொடுத்தார்.

நடுவர் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி பெற்றதே மிகுதி என்று தீர்ப்பாகச் சொன்னாலும், இழந்ததை ஈடுகட்டமுடியாது என்று தீர்ப்பளித்தார்.

சிறுவர், சிறுமியருக்கான பயிலரங்கத்தில் பம்பரம், பல்லாங்குழி, கோலிக்குண்டு, பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்தல் ஆகியவை இடம்பெற்றன. உரியடி, சாக்கு ஓட்டம், கயிறு இழுத்தல், கரும்பு உடைத்தல் போன்ற பாரம்பரிய வீர விளையாட்டுகளும் கலகலப்பூட்டின. பொங்கல் சிறப்புக் கண்காட்சி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர். வாழை இலையில் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. அனைவரும் தமிழகத்துக்கே சென்றுவந்த மகிழ்ச்சியைப் பெற்றதை அவர்கள் கண்களில் காணமுடிந்தது.

மகேந்திரன் பெரியசாமி,
காக்கிஸ்வில், மேரிலாண்ட்

© TamilOnline.com