கான்கார்டு: தைப்பூசப் பாதயாத்திரை
புதுவருடம் பிறந்தால் விரிகுடாப்பகுதி மக்களுக்கு கான்கார்டு முருகன் கோவிலுக்குப் பாதயாத்திரை செல்வது வழக்கமாகி விட்டது. 6வது ஆண்டாக இந்நிகழ்ச்சி இவ்வாண்டும் விமரிசையாக நடந்தேறியது.

ஜனவரி 23ம் தேதி காலை 6.30 மணிமுதலே சிறு குழுக்கள் யாத்திரையைத் துவங்கினாலும், கிட்டத்தட்ட 800க்கும் அதிகமானோர் 7.45 முதல் 8.30 மணிக்கே நடக்கத் துவங்கினர். 21ம் தேதி சிலர் எவர்க்ரீன், சான் ஹோசேவில் இருந்தும், சிலர் 22ம் தேதி ஃப்ரீமான்ட்டில் இருந்தும் யாத்திரையைத் தொடங்கினர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காலை உணவருந்திவிட்டு சான் ரமோனிலிருந்து மீண்டும் நடக்க ஆரம்பிக்கையில் பெருந்தூறல்!

பக்தர்கள் வால்டன் பூங்கா வந்தடைகையில் மதிய உணவு காத்துகொண்டிருந்தது. 2000 பேர் அங்கே உணவருந்தினர். கடைசிச் சிற்றுண்டி/உதவி மையமான மொண்டானஸ் சாலையைக் கடந்த பக்தர்கள் எண்ணிக்கை 2600. கோவிலை முதல் பக்தர்குழு மதியம் 3 மணியளவில் சென்றடைந்தது. ஆலயத்திற்குள் நுழைந்தால் சிறப்புப் பாலபிஷேகம் நடைபெறுவதைக் காணமுடிந்தது. அலங்காரமும் பூஜையும் பார்க்கப் பார்க்க ஆனந்தம்.

தமிழ் பேசுபவர், இந்திய வம்சாவழியினர், இந்துக்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரும் பாதயாத்திரையில் பங்கேற்றது மத நல்லிணக்கதிற்கு உதாரணமாக இருந்தது. இந்த ஏற்பாடுகளைச் சிறப்புறச் செய்த திரு. சோலை மற்றும் தன்னார்வத் தொண்டர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கோவிலைப் புதுப்பிக்கும் திருப்பணிக்கு நிதிசேர்ப்பு நடந்துவருகிறது. இயன்ற பொருளுதவியைச் செய்ய: www.shivamurugantemple.org

கணேஷ் பாபு,
சான் ரமோன்

© TamilOnline.com