பிப்ரவரி 2016: வாசகர் கடிதம்
இந்தியன் ஸ்டோரில் சாமான் வாங்கிவிட்டுப் பணம் கொடுக்கும்போது கௌண்டரில் "தென்றல்" என்ற தமிழ்ப் பத்திரிகை வைத்திருப்பதை பார்த்த எனக்கு வெகுநாள் கழித்துத் தமிழ் இதழைப் படிக்க ஆசை வாட்டி எடுக்க, 'விலை என்ன?' என்று கேட்டேன். "எடுத்துக் கொள்ளுங்கள், இலவசம்தான்” என்றார். அசட்டுச் சிரிப்புடன் அதை வாங்கிக்கொண்டேன். நம்ம ஊர் பத்திரிகை அனுபவத்தில் ஒரு அரை மணிநேரமாவது மசாலா சமாசாரத்தில் பொழுதுபோகும் என்று அலட்சியமாகப் பிரித்துப் படித்தேன். அசந்துவிட்டேன்.

சேகர் சந்திரசேகரின் 'சாக்கடைப் பணம்', பானுமதி பார்த்தசாரதியின் 'விசிறி வாழை' - சக்திவாய்த்த உரையாடல்களில் படிப்போர் நெஞ்சில் பதிந்துவிடும் அருமையான சமூக சீர்திருத்தப் படைப்புகள்! அரைமணி நேரம் பொழுதுபோகும் என்று ஆரம்பித்த நான் ஒரு வாரத்தில் முக்கால்வாசிதான் படித்திருப்பேன். இன்னும் பல அறிவுபூர்வக் கட்டுரைகள், தொடர்கதைகள் பாக்கி என்றால் இதன் தரம் எப்படி!

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் சினிமா, அரசியல், கேலிக்கூத்து அம்சங்களைப் போட்டி போட்டுக்கொண்டு எழுதிக் குவித்தாலும் நெஞ்சில் புயல் கடந்து சென்ற வெற்றிடமாகவே தோன்றியது. இங்கோ "தென்றல்' என் நெஞ்சில் ஓர் எண்ணப் புயலை ஏற்படுத்தியது.

தென்றல் குழுவிற்கு என் நன்றி.

ராதா ராமன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com