உள்ளே புதைந்திருக்கும் பாசம்...
அன்புள்ள சிநேகிதியே

மிகவும் மனம்நொந்து எழுதுகிறேன். எனக்கு நான்கு குழந்தைகள். வீட்டோடு வளர்த்து எங்களுடனேயே ஒட்டிக்கொண்ட சின்னப்பையனையும் சேர்த்தால் ஐந்து. எல்லோருக்கும் படிப்பு, திருமணம் என்று செலவு செய்து, பணவிஷயத்தில் கண்டிப்பாக இருந்து எல்லாக் கடமைகளையும் முடித்தார் என் வீட்டுக்காரர். இப்போது என் பேரன் பேத்திகள் காலேஜ், திருமணம், நல்ல வேலை என்று மிகவும் வசதியாக இருக்கிறார்கள். எனக்கு இரண்டு பெண்கள்; இரண்டு பிள்ளைகள். ஒருபெண் உள்ளூரில். மூன்று பேர் அமெரிக்காவில். என் கணவர் 17 வருடங்களுக்கு முன்பு திடீரென்று என்னைவிட்டுப் பிரிந்தபோது எனக்கு 52 வயது. அவருக்கு இன்னும் மூன்று வருடம் சர்வீஸ் இருந்தது. ஆனால் குடும்பப்பொறுப்பை எல்லாம் முடித்து விட்டிருந்தார். எனக்கும் உடம்பில் அப்போது தெம்பு இருந்தது. யாரும் பக்கத்தில் இல்லை. பறவைகள் ஒவ்வொரு திசையிலும் பறந்துவிட்டிருந்தன. நான் அக்கம்பக்கத்துக் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்து சிறு குழந்தைகள் காப்பகம்போல நான்கைந்து குழந்தைகளை வைத்துக்கொண்டு மிரட்டிப் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தேன். யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. மைத்துனர் பையன் வயதில் சிறியவன். என்னுடன் சில வருடங்கள் தங்கி சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் வெளிதேசத்துக்குப் பறந்து போய்விட்டான். என் கணவர் வாழ்க்கையை அழகாகத் திட்டமிட்டு, தன் கடமைகளை முடித்து எனக்கும் சிறிது சேர்த்து வைத்துவிட்டுத்தான் போனார். ஆனால், எத்தனை வருஷம் தாங்கும்? குழந்தைகளை எதற்குமே கேட்டுப் பழக்கமில்லை. அவர்களும் தங்கள் குடும்பம், குழந்தைகள், பணம் சேர்ப்பது என்பதில் குறியாக இருந்துவிட்டனர்.

எட்டு வருடங்களுக்கு முன்னால் இரண்டு பையன்களும் சேர்ந்து, ஒரு டிக்கெட் வாங்கி அமெரிக்காவிற்கு அழைத்து வந்தார்கள். எல்லாம் சுற்றிக் காட்டினார்கள். அதற்குப் பிறகு இப்போது பேத்தி கல்யாணத்தை ஒட்டி அழைத்தார்கள். வந்திருக்கிறேன். எல்லாம் நல்லபடியாக முடிந்து இந்தியாவிற்குத் திரும்பும் சமயத்தில் தவறிவிழுந்து, கால் எலும்பு முறிந்து பெரிய கலாட்டா ஆகிவிட்டது. இரண்டு மாதமாகப் படுக்கையில் இருக்கிறேன். இவர்களுக்கு ஏகப்பட்ட செலவு. கூடத் துணையில்லாமல் இந்தியாவுக்குத் திரும்பமுடியாது. அப்படிப் போனாலும் நானே என்னைப் பார்த்துக்கொள்வது சிரமம். நான் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பிவந்து படுக்கையில் இருந்தபோது, என்னைப்பற்றி இவர்கள் பேசியதை எல்லாம் ஒரு மாதிரியாகக் குறித்து வைத்திருக்கிறேன். பெரிய பையனுடன் தங்கியிருக்கிறேன். ஏற்கனவே பெண் திருமணச் செலவு, என் கால் முறிந்த செலவு.. அவனால் இதற்குமேல் எந்தச் செலவும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண் இருக்குமிடம் இங்கிருந்து ஏழு மணிநேர டிரைவ். ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போனாள். ஆனால் அவளால் என்னுடன் இந்தியாவிற்கு துணைக்கு வரமுடியாது. அவளுக்கு லீவ் இல்லை. பையன் காலேஜ் போகப்போகிறான். பெண்ணுக்கு ஸ்கூல். அவளால் முடியாது. இன்னொரு பையன் பிசினஸ். எக்கச்சக்க டென்ஷன். "பணம் வேண்டுமானாலும் கொஞ்சம் அனுப்புகிறேன்; ஆனால் நேரமில்லை" அவனுக்கு. இந்தியாவில் இருக்கும் பெண், "பண உதவி செய்யமுடியாது; ஏதோ கொஞ்சநாள் வந்து இருக்கிறேன்." துபாயில் மைத்துனர் பையன். அவனுடைய காண்ட்ராக்ட் வேலை முடிந்துவிட்டது. கனடாவிற்குப் போக முயற்சி செய்து கொண்டிருக்கிறான். மனைவிக்கு உடம்பு சரியில்லை. அவனே என்ன செய்வது என்று தத்தளித்துக் கொண்டிருக்கிறான். ஒவ்வொருவரும் என்னைக் கவனிக்க முடியவில்லை என்பதற்குக் காரணங்களைச் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டு என் உடல்நிலையை அவ்வப்போது விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தாய்க்கு ஐந்து குழந்தைகள் பாரமாகத் தெரியவில்லை. ஆனால் அந்த ஐந்து குழந்தைகளுக்கு ஒரு தாய் பாரமாகத் தெரிகிறாள். எனக்கு இந்த நிலையில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதுவரை யாரையும் அண்டி இருந்ததில்லை. என் கணவர், "நமக்கு என்ன வசதி இருக்கிறதோ அதற்குள் அடக்கமாக வாழவேண்டும். யாரிடமும், எதையும் வேண்டக்கூடாது" என்ற கொள்கையில் இருந்தவர். என் குழந்தைகள் என்னை வைத்து ஒருவருக்கொருவர் பேரம் பேசுவது அப்படியே என் மனதை ரணகளம் ஆக்கிவிட்டது. நொந்து எழுதுகிறேன். வழி தெரியவில்லை.

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே

யாரையும் அண்டாமல் இருப்பதை வைத்துக்கொண்டு நெறியோடும் பொறுப்போடும் வாழ்ந்தவர் உங்களுக்குக் கணவராக அமைந்தது உங்கள் பாக்கியம். அதை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள்.

அந்தப் பாதையில் நீங்களும் 17 வருடம் சென்றிருக்கிறீர்கள். அதை நினைத்துப் பெருமைப்படுங்கள். உங்கள் குழந்தைகள் அனைவரும் படித்து நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தோஷப்படுங்கள்.

வயதான காலத்தில் பிறரை அண்டி வாழாமல் ஆண்டவன் நொடியில் நம்மை அழைத்துக் கொள்ளவேண்டும் என்றுதான் எல்லாருமே ஆசைப்படுகிறோம். என்னதான் அழகாகத் திட்டம் போட்டாலும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் - the unknown, the unforeseen, the unexpected - ஆச்சரியமோ, அதிர்ச்சியோ ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கும். உங்கள் குழந்தைகள் உங்களை பாரமாக நினைத்தால் நினைத்துக் கொள்ளட்டுமே! நீங்கள் உங்கள் பொறுப்பை கடமையாக நிறைவேற்றியிருக்கிறீர்கள். அவர்கள், தங்கள் பொறுப்பை பாரமாக நினைத்தாலும் எப்படியாவது நிறைவேற்றி விடுவார்கள். அவர்களுக்குள் வாக்குவாதம், அபிப்பிராய பேதம் எல்லாம் வரத்தான் செய்யும். அதற்காக முதிர்ச்சியுள்ள உங்கள் மனம் குன்றலாமா? இன்னும் சிறிதுநாளில் வாக்கர் வைத்து நடப்பீர்கள். அப்புறம் தானாகவே நடக்க முயற்சி செய்வீர்கள். அப்படியும் முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது எல்லாருக்கும் சீனியர் சிட்டிசன்ஸ் ஹோம்.

நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் நெறி தெரிகிறது. விவேகம் தெரிகிறது. மன உறுதி தெரிகிறது. அவையெல்லாம் தொடரட்டும். எல்லோரும் எதையோ நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்தப் பரபரப்பு வாழ்க்கையில் பாசம் உள்ளே புதைந்துகொண்டு, கடமையை பாரமாக வெளியே தள்ளுகிறது. அவ்வளவுதான். அறவே பாசமில்லாமல் போய்விடாது. கவலைப்படாதீர்கள்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com