ராஜா கிருஷ்ணமூர்த்தி
ராஜா கிருஷ்ணமூர்த்தி (41) சிவானந்தன் லேப்ஸ், எபிசோலார் ஆகியவற்றின் தலைவர்; InSPIRE என்ற லாபநோக்கற்ற அமைப்பின் இணைநிறுவனர்; இல்லினாய்ஸ் புத்தாக்கக் கழகத்தின் துணைத்தலைவர். இரண்டாம் தலைமுறை அமெரிக்கத் தமிழரான ராஜா ப்ரின்ஸ்டனில் மெகானிகல் எஞ்சினியரிங்கும், ஹார்வார்டில் சட்டமும் பயின்றார். பின்னர் பராக் ஒபாமா தேர்தல் பிரசாரக்குழுவின் கொள்கை இயக்குனராகப் பணியாற்றினார். இல்லினாய்ஸ் அரசுத் தலைமை வழக்குரைஞர் லிஸா மேடிசனின் லஞ்ச ஒழிப்பு அணியில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். குடிவரவில் பரிவான அணுகுமுறை, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்புடைய செயல்பாடு, மகளிருக்குச் சம ஊதியம், நடுத்தர வகுப்பினருக்குச் சமவாய்ப்பு, துப்பாக்கிச் சட்டத்தில் சரியான அணுகுமுறை போன்றவற்றுக்காக அவர் குரல்கொடுத்து வந்துள்ளார். சோஷியல் செக்யூரிடி, மெடிகேர் பலன்கள் முதலியவற்றை ரிபப்ளிகன் காங்கிரஸ் குறைத்துவிடாமல் இருக்கப் போராடி வந்துள்ளார். மனைவி பிரியா, மகன்கள் விஜய், விக்ரம் ஆகியோருடன் அவர் ஷாம்பர்கில் வசித்து வருகிறார். தென்றலுக்காக ரிஷி குமார் அவரோடு உரையாடியதிலிருந்து.....

*****




ரிஷி: நீங்கள் காங்கிரஸுக்குப் போட்டியிடப் போகும் செய்தி எங்களுக்குச் சந்தோஷமாக இருக்கிறது. போட்டியிட உங்களைத் தூண்டியது எது?
ராஜா: இல்லினாய்ஸின் 8வது காங்கிரஷனல் மாவட்டத்தில் நான் போட்டியிடுகிறேன். என் பெற்றோர் இருவரும் இங்கு வந்து குடியேறிய எஞ்சினியர்கள், ஆனால் 1971ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் அவர்களுக்கு வேலை போய்விட்டது. அவர்களை அரசுத் திட்டங்கள்தாம் காப்பாற்றின. அது எங்கள் வாழ்க்கையை நிர்ணயித்த ஒன்றாயிற்று. "நீ என்ன செய்தாலும், அரசும் சமூகமும் ஏழைகளுக்கு உதவும்படியாகப் பார்த்துக்கொள்" என்று என் பெற்றோர் சொல்வார்கள். நான் எதைச் செய்தாலும், எந்தப் பதவி வகித்தாலும் இதுவே எனக்கு உந்துசக்தியாக இருக்கிறது. இப்போது காங்கிரஸுக்குப் போட்டியிடுவதும் அதனால்தான். வசதியற்றவர்களும் வாழ வழிசெய்வது எப்போதும் என் குறிக்கோளாக இருக்கும். ஒன்றுமில்லாதவர்களை ஏதேனும் உள்ளவர்களாக்கி, அவர்களுக்குக் கடவுள் தந்த திறனைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பளிப்பது இந்த நாடு. இது உலகின் மிகச்சிறந்த நாடுகளில் ஒன்றாகும். நாம் சமுதாய, பொருளாதார ரீதிகளில் மேலேறும்போது மற்றவருக்கும் கைகொடுத்துத் தூக்கவேண்டும்; ஏணியை அகற்றிவிடக் கூடாது என்பதை நினைவில் நிறுத்தவேண்டும். மாறிவரும் உலகில், மக்களின் ஆற்றலை முழுமையாக மலரவைப்பதும், அதிக அமெரிக்கர்கள் நல்ல பணிகளைப் பெற உதவுவதும் எனது லட்சியங்கள்.

கே: உயர் தொழில்நுட்பப் புத்தாக்கம், அரசியல், சமூகசேவை என்ற வியப்பானதொரு கலவை நீங்கள். இந்தப் புதிய முயற்சியில் அது எப்படி உங்களுக்கு உதவும்?
ப: சுருக்கமாகச் சொன்னால், தொடர்புகளை ஏற்படுத்த வல்லோரும், கவனித்துக் கேட்கும் திறன் கொண்டோரும் நம் அணியில் இருக்கவேண்டும். பொதுவான அம்சங்களைக் கண்டறிந்து அதன்மீது கட்டடத்தை எழுப்பவேண்டும். வணிகவுலகில் இதைத்தான் நாம் அன்றாடம் செய்கிறோம். ஏதோவொரு காரணத்தால் நாம் இதைக் காங்கிரஸில் செய்வதில்லை. ஒரு டெமாக்ரட் என்ற முறையில் ரிபப்ளிகன் ஒருவரின் கருத்தோடு நான் ஒத்துப்போகாமல் இருக்கலாம். ஆனால், பல விஷயங்களில் இருவருக்கும் ஒற்றுமை இருக்கும். கேள்வி என்னவென்றால், பொதுவான கருத்துக்களைக் கண்டறிந்து அவற்றை வலுப்படுத்துவது எப்படி என்பதே. வர்த்தகத்தில் நான் அதைச் செய்திருக்கிறேன்; வாஷிங்டன் டி.சி.யிலும் அதைச் செய்யமுடியும் என்று நம்புகிறேன். எல்லோருடனும் இணைந்து இந்த நாட்டுக்கு நன்மை செய்ய ஆசைப்படுகிறேன்.



கே: இந்த அணுகுமுறையால் நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன?
ப: பலவற்றைச் செய்ய நினைக்கிறேன். ஆரோக்கியமான கல்வி, பெண்களின் பொருளாதார சக்தி இவை இரண்டையும் சார்ந்தே ஒரு சமுதாயத்தின் ஆரோக்கியம் இருக்கிறது. ஓரிரண்டு விஷங்களைச் சொல்கிறேன். ஒரு முக்கியமான சவால் எதுவென்றால், மாறிவரும் பொருளாதாரச் சூழலின் தேவைக்கேற்ப நடுத்தர வகுப்பினரின் திறன்களை உயர்த்துவது எப்படி என்பதாகும். உயர்கல்வி, வாழ்நாள் நெடுகிலும் கற்றல் என்பவை இதற்கான விடை. நடுத்தர வகுப்புக்கு எட்டாத வானுயரத்துக்குப் போய்விட்டது கல்லூரிக் கட்டணம்! அதைச் சரிசெய்தாக வேண்டும். இதைக் கல்லூரிகள் எப்படிச் செய்யலாம் என்பதற்கு என்னிடம் 5 அம்சத் திட்டம் உள்ளது.

மகளிர் உரிமை அடுத்த சவால். இப்போதிருப்பதைவிட அதிகப் பொருளாதார அதிகாரத்தைப் பெண்கள் பெறவேண்டும். சமமான சம்பளம், ஊதியத்தோடு கூடிய மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு, உயர்தரச் சேய்நலம் போன்றவை இதில் அடங்கும். முடிவாக நான் சொல்ல விரும்புவது புத்தாக்கம். நமது ஆற்றல் தேவைகளுக்கான விடை புதுப்பிக்கவல்ல (renewable) ஆற்றலில் இருக்கிறது. இந்தத் துறையில் நம் நாடு எப்படி முன்னோக்கிச் செல்லப்போகிறது? புத்தாக்கத்தின் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்கப் போகிறது? 2050ம் ஆண்டு வாக்கில் உலகின் ஆற்றல் தேவையில் 20 சதவிகிதத்தைச் சூரிய ஆற்றல் கொடுக்கும். இப்போது அது 1 சதவிகிதம்தான். அடுத்த பல பத்தாண்டுகளுக்கு அந்தத் துறையில் வளம் பெறவும் லாபம் குவிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கே: தொழில்நுட்ப உலகின் தலைமை நிர்வாகப் பதவியிலிருந்து அரசியல் உலகத்திற்குள் குதிக்கும்போது சற்றே பதற்றம் ஏற்படுவதுண்டா? அரசியல் உலகம் தொழில்நுட்ப உலகைவிட மிகமெதுவாக நகர்வது உங்களுக்குக் கவலை தருகிறதா?
ப: நான் அரசாங்கத்தில் நெடுநாள் செலவிட்டிருக்கிறேன். அதில் ஏற்படும் பிரச்சனைகளும் அவற்றைச் சமாளிக்கும் வழிமுறைகளும் மிக விரைவாக இருக்கும், எவரையும் ஈடுபாட்டோடு செயல்பட வைக்கும். எதையும் செய்வதைச் சாத்தியமாக்கும் அரசியல் கலாசாரம் ஏற்படப் போகிறதா என்பதுதான் உண்மையான கேள்வி. வணிகத்துறையின் அந்தச் சாமர்த்தியத்தை நாம் இங்கு கொண்டுவர வேண்டும். உடனடியாகச் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் எதிரில் நின்றுகொண்டிருக்கும் போது, ஒரு சிறிய வணிகநிறுவனம் அதைப்பற்றி விவாதித்துக்கொண்டே காலம் கழிக்கமுடியாது. உலகத் தட்பவெப்பமோ, மாறும் பொருளாதாரச் சூழலில் விரைந்து தொழிற்படுதலோ அல்லது தவிர்க்க இயலாத பொதுஜனக் கொள்கைச் சவால்களோ, எதுவானாலும் எனது பின்புலம் மேற்கொண்டு காய் நகர்த்த உதவியாக இருக்கும்.

கே: இல்லினாய்ஸில் ஒபாமா தேர்தல் பிரசார அணியில் வேலைசெய்த அனுபவம் எப்படி இருந்தது? அது இன்று உங்களுக்கு உதவியாக இருக்கிறதா?
ப: நான் ஒபாமாவுக்கு மூன்று தேர்தல்களில் பணி செய்திருக்கிறேன். 1999ல் யு.எஸ். காங்கிரஸ் கொள்கை ஆய்வாளராக, பாபி ரஷ்ஷுக்கு எதிராகப் பணியாற்றிய போது, ஒரு பதவிக்குப் போட்டியிடச் சரியான காலத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம் என்பதைக் கற்றேன். 2002ல் அமெரிக்க செனட் பிரச்சாரத்தின்போது பாலிசி டிரெக்டராக இருந்தேன். நீ பெற்றிருக்கும் தகுதிகள் முக்கியமல்ல, மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவது முக்கியம் என்பது புரிந்தது. அதிபர் ஒபாமா அதைத் திறம்படச் செய்து செனட் போட்டியில் வெற்றி பெற்றார். இல்லினாய்ஸ் மக்கள் பெயரையோ தோலின் நிறத்தையோ பார்க்காத கண்ணியமான மக்கள். நீ எத்தகையவன், உன் செய்தி என்ன, மக்களுக்கு நீ எப்படி உதவப்போகிறாய், நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிகாட்ட உன் பார்வை என்ன என்று இவற்றைத்தான் பார்ப்பார்கள். அதனால்தான் எனக்குப் போட்டியிட உற்சாகம் ஏற்பட்டது.



கே: இல்லினாய்ஸ் இந்தியச் சமூகம் உள்ளூர் மக்களுக்கும் பள்ளிகளுக்குமான செயல்பாடுகளில் எவ்வளவு ஈடுபாடு காட்டுகிறது?
ப: இந்திய அமெரிக்கச் சமூகம் மேலும் மேலும் களத்தில் இறங்குவதை நான் காண்கிறேன். தொழில்சார்ந்த இளைஞர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆகியோரும் இதிலிருப்பது எனக்குத் தெம்புதருகிறது. பலர் பொதுச்சேவையில் ஈடுபட்டிருகிறார்கள். என் பிரசார அணியில் பல்வேறு துறைகளில் தன்னார்வத் தொண்டர்கள் செயல்படுகிறார்கள். நமது சமுதாயத்தின் எண்ணிக்கைக்குச் சரிவிகிதத்தில் வாக்குகளைப் பெற உழைக்கிறார்கள். அவர்களையும் பொதுப் பதவிகளுக்குப் போட்டியிட வைக்கவேண்டும்; இன்னும் அதிகமாக அரசியலில் பங்கேற்க வேண்டும். நம் நாட்டின் அரசியல் வாழ்க்கையில் அவர்களின் குரல் முழுமையாக ஒலிக்க வேண்டும். We need a seat on the table. If you don't have a seat on the table you are on the menu. இந்நாட்டின் வாழ்விலும் அதன் சமுதாயங்களிலும் அரசியல்ரீதியாகப் பங்கேற்கும் காலம் நமக்கு வந்துவிட்டது.

திரு. ரிஷி குமார் சாரடோகா நகர்மன்றக் கவுன்சில் உறுப்பினர், சமூகசேவகர். உயர் தொழில்நுட்ப மேலதிகாரியான ரிஷி, விரிகுடாப்பகுதி அமெரிக்க ஜனநாயகக் கிளப்பின் (www.baiadc.org) தலைவரும் ஆவார். அவரது வலைமனை: www.RishiKumar.com

உரையாடல்: ரிஷி குமார்

*****


தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்களா?
'நான் ஏன் போட்டியிட விரும்புகிறேன்? பதவி கிடைத்தால் உபயோகமாக எதையாவது என்னால் செய்ய முடியுமா?' என்று ஆழமாகச் சிந்திப்பது மிக அவசியம். ஏன் போட்டியிடுகிறீர்கள் என்பதற்கு நல்ல காரணமொன்று இருக்கவேண்டும், அந்த ஆர்வத்தைப் பிரதிபலிக்கும் செய்தி உங்களிடம் இருக்கவேண்டும்; இவற்றிலிருந்துதான் நீங்கள் கட்டடம் எழுப்பமுடியும். பிரசாரத்துக்கு ஆதரவு பெறுதல், நிதி திரட்டுதல், இறுதியாக வாக்குகளைப் பெறுதல் என்று எதுவாக இருந்தாலும், நீங்கள் எதை, ஏன் செய்கிறீர்கள் என்பதற்குக் காரணம் இருக்கவேண்டும். அது மிகவும் அழுத்தமானதாக இருக்கவேண்டும். நீங்கள் அதற்காக நிறைய நேரம் செலவிடும்போது உங்கள் குடும்பமும் அன்புக்குரியவர்களும் சிரமங்களுக்கு உள்ளாவார்கள். மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருந்து, அதன் காரணமாக நீங்கள் முழு முயற்சி எடுத்திருந்தால், உங்களுக்கு மிகுந்த மனநிறைவு கிடைக்கும்.

- ராஜா கிருஷ்ணமூர்த்தி

© TamilOnline.com