சார்வாகன்
"மருத்துவர்கள் மகத்தான எழுத்தாளர்களாக விளங்குவதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆண்டன் செகாவ், ஏ.ஜே. கிரானின், சாமர்செட் மாம் எனத் தொடங்கி சார்வாகன்வரை கூறலாம்" என்று அசோகமித்திரனால் பாராட்டப்பெற்றவர் சார்வாகன். இவரது இயற்பெயர் ஸ்ரீநிவாசன். இவர் வேலூரில் செப்டம்பர் 7, 1929ல் ஹரிஹரன் - ஜானகி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். துவக்கப்பள்ளியை வேலூரில் பயின்றவர், உயர்நிலைக் கல்வியை ஆரணியில் படித்தார். ஸ்ரீநிவாசனின் தந்தை ஆரணியில் மருத்துவர். சுற்றுப்புறக் கிராமங்கள் அனைத்திற்கும் ஒரே மருத்துவர் அவர்தான். காங்கிரஸ் அபிமானியான அவர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவரும்கூட. அந்த எளிமையும் நேர்மையும் தந்தைவழியே தனயன் ஸ்ரீநிவாசனுக்கும் வந்து சேர்ந்தது. சிறுவயதிலிருந்தே இலக்கிய ஆர்வமும் மிகுந்திருந்தது. காரணம் தாத்தா கிருஷ்ணய்யர். காவல்துறையில் தமிழ் சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றிய அவர் நல்ல தமிழறிஞர். சைவ சித்தாந்தத்தில் தேர்ந்தவரும்கூட. வீட்டில் ஒரு பெரிய நூலகத்தை அவர் வைத்திருந்தார். ஸ்ரீநிவாசனின் ஓய்வுநேரம் அங்கேயே கழிந்தது. தமிழ் மட்டுமல்லாது ஆங்கில நூல்களையும் வாசித்து அறிவையும், இலக்கிய ஆர்வத்தையும் வளர்த்துக்கொண்டார். பனாரஸ் ஹிந்துப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவரும், சைவ சித்தாந்த அறிஞரும், சைவ சித்தாந்தம்பற்றி ஆங்கிலத்தில் பல நூல்கள் எழுதியவருமான இவரது மாமா டாக்டர் கே. சிவராமன், ஸ்ரீநிவாசனின் இலக்கிய ஆர்வமும், பன்முகப் பார்வையும் அதிகரிக்கக் காரணமானார்.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தபின் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். படிப்பை முடித்ததும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் சிலகாலம் உடலியல் துறையில் ட்யூட்டராகப் பணியாற்றினார். மகாபாரதத்தில் 'சார்வாகன்' பாத்திரம் இவரை மிகவும் ஈர்த்தது. அதையே புனைபெயராக வைத்துக்கொண்டு கதை, கவிதைகளை எழுதத் துவங்கினார். இவர் எழுதிய கவிதைகள் 'எழுத்து', 'புதுக்குரல்' போன்ற இதழ்களில் பிரசுரமாகின. "கதைகளைவிட, கவிதைகளை நீங்கள் அதிகம் எழுதுங்கள்" என்று சொல்லி சி.சு. செல்லப்பா ஊக்குவித்தார்.

மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்குப் பயணப்பட்ட சார்வாகன், FRCS மருத்துவ உயர்படிப்பை எடின்பரோவிலும், இங்கிலாந்திலும் நிறைவுசெய்தார். பர்மிங்காம் மற்றும் லண்டனில் உள்ள மருத்துவமனைகளில் தலைமை மருத்துவர், பதிவாளர் எனப் பல பொறுப்புகளில் பணியாற்றினார். உடன் பணியாற்றிய டாக்டர் என். பத்மாவுடன் திருமணம் நிகழ்ந்தது. பின்னர் இந்தியா திரும்பினார். மங்களூர் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் சிலகாலம் பணியாற்றிய பின் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முடநீக்கியல் பிரிவு மருத்துவராகத் தனது சேவையைத் தொடங்கினார். தொழுநோயின் பாதிப்பால் வாழ்விழந்தவர்களை மீட்பதையே தனது லட்சியமாய்க் கொண்டு உழைத்தார். பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். மடங்கிப்போன, செயல்படாத கைவிரல்களை மீண்டும் செயல்படுத்த முடியும் என்பதை நிரூபித்தார். இவரது சிகிச்சை முறை "சீனிவாசன் மாடல்" என்று அழைக்கப்படுகிறது. இவருடைய ஆய்வுமுறைக்கு தமிழ்நாடு மருத்துவக்கல்லூரியில் ஸ்ரீநிவாசன் கருத்தியல் (Srinivasan Concept) என்ற அங்கீகாரமும் கிடைத்தது. பல வெளிநாடுகளில் இவர் கண்டறிந்த சிகிச்சைமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. உள்நாடு, வெளிநாடு என பல மருத்துவக் கருத்தரங்குகளில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றியிருக்கிறார். சில பல்கலைக்கழகங்களில் வருகைப் பேராசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

ஓய்வுநேரத்தை கதை, கவிதை, கட்டுரை என இலக்கியத்திற்காகச் செலவிட்டார். 'தாமரை', 'வானம்பாடி' போன்ற இதழ்களிலும் இவருடைய கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. 'தீபம்', 'ஞானரதம்','கணையாழி' போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஒரு சில நீண்ட குறுநாவல்களையும் எழுதியிருக்கிறார். வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை' குறுநாவல் தொகுப்பில் இவருடைய 'அமரபண்டிதர்' கதை இடம்பெற்றது. 'வளை', 'வெறிநாய் புகுந்த பள்ளிக்கூடம்', 'தர்ப்பணம்', 'சின்னூரில் கொடி ஏற்றம்', 'கனவுக்கதை', 'உத்தரீயம்', 'யானையின் சாவு' போன்ற கதைகள் குறிப்பிடத் தகுந்தன. 'கனவுக்கதை' சுந்தரராமசாமியால் 'இலக்கியச் சிந்தனை' பரிசுக்காகத் தேர்தெடுக்கப்பட்டது. 'உத்தியோக ரேகை' சிறுகதை மனித உணர்வுகளையும், இயல்பையும், இயலாமையையும் படம் பிடித்துக் காட்டுகிறது. 'கனவுக்கதை' மக்கள் இலவசமாக ஒன்று கிடைத்தால் அதற்காக என்னவெல்லாம் செய்யத் தயாராகிறார்கள், எப்படி முட்டி மோதி, தங்கள் வேற்றுமைகளைக்கூட மறந்து, வெறும் கட்டிடத்தையும் நமஸ்கரிக்கத் தயாராகிறார்கள் என்பதைக் கிண்டல் தொனிக்காத நடையில் சொல்கிறது. 'எதுக்குச் சொல்றேன்னா…' ஒரு அதிர்ச்சி முடிவைக் கொண்ட கதை. எழுத்தாளரும், கவிஞருமான நகுலன் தொகுத்த 'குருக்ஷேத்திரம்' நூலில் சார்வாகனின் படைப்புகள் சில இடம் பெற்றுள்ளன. வெங்கட்சாமிநாதன் இவரது சிறுகதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஹிந்தியிலும் சில கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. 1993ல் க்ரியா பதிப்பகம், இவரது சிறுகதைகளைத் தொகுத்து 'நான் என்ன சொல்றேன்னா..' என்ற தலைப்பில் வெளியிட்டது. 2013ல் இவரது அனைத்து சிறுகதைகளும், நாவல்களும் தொகுக்கப்பட்டு முழுத்தொகுப்பாக நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

முடநீக்கியல் பிரிவில் இவர் ஆங்கிலத்தில் பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். "Prevention of Disabilities in Patients with Leprosy - A Practical Guide" என்ற நூல் அவற்றில் முக்கியமானது. நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை உலக அளவிலான ஆங்கில இதழ்களில் எழுதியிருக்கிறார். Indian Journal of Leprosy இதழில் ஆசிரியராக பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். உலக சுகாதாரக் கழகத்தின் (WHO) உறுப்பினராக இருந்திருக்கிறார்.

கல்லூரிக் காலத்திலிருந்தே பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருக்கும் இவருக்கு, இந்திய அரசின் விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருதும் தேடி வந்தது. சர்வதேச காந்தி விருது, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் வழங்கிய கெளரவ டாக்டர் விருதும் பெற்றவர். தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல், தனது மருத்துவச் சாதனைகளைப் பிரகடனப்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக வாழ்ந்த சார்வாகன், டிசம்பர் 21, 2015 அன்று 86ம் வயதில் காலமானார். இவருக்கு லதா, பாரதி என்று இரு மகள்கள். இருவரும் மருத்துவர்களே.

சத்தமே இல்லாமல் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டுச் சென்ற ஐராவதம், காச்யபன் போன்ற தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் சார்வாகனுக்கும் மிகமுக்கிய இடமுண்டு.

அரவிந்த்

© TamilOnline.com