தமிழக வெள்ளம்!
வடகிழக்குப் பருவமழை நீ 
வந்தாய் ஆனால் இப்போது
கடலூர் தன்னைக் கடலாக்கி
காஞ்சிபுரத்தை முழுகடித்து

சென்னை நகரைச் சீரழித்து
செய்த நாசம் பலவாகும்
என்ன பாவம் செய்தார் நம்
ஏழை, எளிய மக்கள்தாம்!

மழையே நீதான் இல்லாமல்
மக்கள் வாழ்தல் இயலாது
பிழைபட மிகுத்துப் பொழிவதுமேன்
பெருகிக் கடலாய், புயலானாய்?


வீடு, வாசல் இடிந்தனவே 
வீதியில் நிற்கவும் வழியில்லை
காடு மேடு பார்க்காமல்
கண்ணை மூடிப் பொழிகின்றாய்

பச்சைக் குழந்தை பருகிடவே
பாலிலை குடிக்க நீரில்லை
மிச்சம் மீதி இருந்ததெலாம்
மிதக்கும் நீரால் பாழாச்சே!

உண்ண உறைய வழியில்லை
உறங்கிடவும் ஓர் இடமில்லை
மண்ணில் இதற்கு வழிகாணும்
மாண்புடையீரே நீர் எங்கே?


பாவலர் தஞ்சை தர்மராஜன்,
மிசௌரி

© TamilOnline.com