அக்டோபர் 2005 : வாசகர் கடிதம்
செப்டம்பர், 2005 தென்றல் இதழில் டாக்டர் செளந்தரம் அவர்கள் பற்றி முனைவர் அலர்மேலு ரிஷி எழுதிய கட்டுரையைப் படித்து மனம் நெகிழ்ந்தேன். ஓய்வில்லாது, விளம்பரம் விரும்பாது, தாய்க்குலத்துக்கு அவர் செய்த தொண்டு அனைத்தையும் விவரித்திருக்கிறார் கட்டுரையாளர். செளந்தரம் அம்மையை அறிந்த ஒவ்வொருவரும், தாம் அறிந்த சிறந்த கர்மயோகி அவர் எனக் கண்ணில் நீர்மல்கிக் கூறுவர்.

அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்கே கூட ''அடடா! அம்மாவின் இந்தப் பணி பற்றி எனக்குத் தெரியாதே?" என்று அவர்கள் வியக்கும் அளவுக்கு சமுதாயத்துக்கும், தம் விரிந்த உலகில் அவர் கண்ட தனிமனிதர்களுக்கும் அவர் காட்டிய அன்பும் செய்த தொண்டும் கூற இயலாதது. பண்பும், பரந்த மனமும் கொண்ட அவரது பெற்றோரின் துணை கொண்டே அவர் பெரும் சாதனைகள் புரிய முடிந்தது. அவரது இரண்டாவது மணத்தை அவர்கள் ஒப்பவில்லை என்றாலும், காந்தி கிராமத்திற்கு நிலம் வழங்கி, நிதி அளித்து, அவருக்குதவி வந்தனர். ஆதி நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெறும் அவரது பணிகளுக்கெல்லாம் நிதியும் ஆதரவும் அளித்து வருகின்றனர் அப்பெரியோரின் சந்ததியார்.

சௌந்தரம் அவர்களைப் பாராட்ட முழுவருடத் திருவிழா ஒன்று சரோஜினி வரதப்பன் அவர்கள் பொறுப்பில், சென்னையில், முன்னாள் ஜனாதிபதி வெங்கடராமன் அவர்கள் தலைமையில் நிகழ்ந்தது. அப்போது நான் இந்தியாவுக்குச் சென்றிருந்த சமயம். அதிலே சௌந்தரம் அவர்களின் தொண்டைப் புகழ்ந்து பாட நான் பெற்ற வாய்ப்பை நான் பெரும் பேறாகக் கருதுகிறேன்.

ராஜி கிருஷ்ணன்
ப்ராவிடன்ஸ், ரோட் ஐலண்டு.

© TamilOnline.com