விக்கிரமன்
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான விக்கிரமன் (88) சென்னையில் காலமானார். இவரது இயற்பெயர் வேம்பு. இவர், 1928ல் திருச்சியில் பிறந்தார். இளவயதுமுதலே எழுத்தார்வம் கொண்டிருந்தார். பள்ளியில் படிக்கும்போதே நண்பருடன் 'தமிழ்ச்சுடர்' என்ற கையெழுத்து இதழை நடத்தினார். இதழைக்கண்ட ஏ.கே. செட்டியார் இவர்களை ஊக்குவித்தார். அவர்மூலம் பத்திரிகை உலகில் பணியாற்றும் ஆர்வம் வந்தது. 1949ல் 'அமுதசுரபி' இதழில் சேர்ந்தார். 1951ல் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்ற விக்கிரமன், அதன் ஆசிரியராக ஐம்பது ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்தார்., இரவு பகல் பாராமல் இதழின் வளர்ச்சிக்கு உழைத்தார். பல்வேறு போராட்டங்களுக்கிடையே அதனைத் தமிழகத்தின் முன்னணி இலக்கிய இதழ்களுள் ஒன்றாக வளர்த்தெடுத்தார். சுத்தானந்த பாரதியார், பாரதிதாசன், ரா.பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் அ. சீனிவாச ராகவன், சோமலெ, பெ.நா. அப்புசாமி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, மு. வரதராசன், கி.ஆ.பெ. விசுவநாதம், மீ.ப. சோமு எனப் பல ஜாம்பவான்களை அமுதசுரபிக்கு எழுதவைத்தார்.

தானும் வரலாற்று நாவல்கள், சமூக நாவல்கள், இலக்கியக் கட்டுரைகள் என எழுதிக்குவித்தார். அவற்றில் வரலாற்று நாவல்கள் மிக அதிகம். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலின் தொடர்ச்சியாக இவர் எழுதிய 'நந்திபுரத்து நாயகி' நாவல் பல பதிப்புகள் கண்டது. பல இளம் எழுத்தாளர்களை எழுத ஊக்குவித்தார். சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி முதலியன நடத்தி எழுத்தார்வம் உள்ள பலரை அடையாளம் காட்டினார். அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்த விக்கிரமன், கலைமாமணி விருது, தினத்தந்தி வழங்கிய சி.பா. ஆதித்தனார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். 'இலக்கிய பீடம்' என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தார். சென்னையில் பெருமழை, வெள்ளம் சூழ்ந்த டிசம்பர் 1 இரவில் இவர் காலமானார். வெள்ளப்பாதிப்பால் இவரது உடலை நான்கு நாட்களுக்குப் பின்னரே எரியூட்ட முடிந்தது. விக்கிரமனின் மனைவியார் திருமதி. ராஜலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். முதுபெரும் எழுத்தாளருக்குத் தென்றலின் அஞ்சலி! (விக்கிரமன் பற்றி மேலும் வாசிக்க: தென்றல், பிப்ரவரி, 2013)© TamilOnline.com