பெருவெள்ள காலத்தில் நோய்த்தடுப்பு
சென்னை வெள்ளப்பெருக்கில் நம் குடும்பத்தினரும், நண்பர்களும் அவதிப்பட்டதை கண்கூடாய்க் கண்டோம். வாழ்க்கையின் தத்துவத்தை இந்த வெள்ளம் உணர்த்தியிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், வெள்ளத்தினால் வரும் நோய்கள் பற்றியும், அதன் தடுப்பு முறைகளையும் அரசும், தொண்டு நிறுவனங்களும் பரவலாக அறியச் செய்ததும் தாமே கடைப்பிடித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் நோய்கள் பெரிதும் பரவாமல் தடுக்கப்பட்டது. இப்போது குடிநீர் தூய்மையின் அவசியம் பற்றியும், சுகாதாரம் பற்றியும் அறியலாம். சென்னை என்றில்லாமல், உலகில் எல்லா மூலையிலும் எப்போதும் தேவையான அறிவுரைகள் இவை. முக்கியமாக பயணம் மேற்கொள்வோர் அறியவேண்டிய சில தகவல்கள்:

பொதுவான தடுப்புமுறைகள்
கைகளை நன்றாக சோப்புப் போட்டு, குறைந்தது 20 வினாடிகளுக்குத் தேய்த்து, சுத்தமான தண்ணீரில் கழுவுங்கள். "Happy birthday to you..." என்ற பிறந்தநாள் பாடலை இரண்டுமுறை பாடினால் 20 விநாடி ஆகிவிடும்.

எப்போதெல்லாம் கைககளைக் கழுவவேண்டும்? உணவு தயாரிப்பதற்கு முன்னரும், பின்னரும்; உணவு உண்பதற்கு முன்னர்; கழிப்பறை உபயோகித்த பின்னர்; குழந்தைகள், நோயாளிகள் மற்றும் முதியோருக்கு கழிப்பறை உபயோகிக்க உதவிய பின்னர்; மூக்குச்சிந்திய பின்னர், இருமல் அல்லது தும்மல் வந்து சளி இருப்பின் அதற்குப் பின்னர்; வீட்டு விலங்குகளைப் பராமரித்த பின்னர்; குப்பையைத் தொட்டதற்குப் பின்னர்; வெளியில் சென்றுவந்த பின்னர்; ஏதேனும் வெட்டு அல்லது காயம் ஏற்பட்டால் அதைப் பராமரித்த பின்னர்

தண்ணீரைச் சுத்தப்படுத்துவது எப்படி?
தண்ணீரை கொதிக்க வைப்பதே சிறந்த வழி. குறைந்தது ஒரு நிமிடமாவது கொதிக்க வேண்டும். இதன்மூலம் Cryptosporidium, Giardia, Campylobacter, Salmonella, Shigella, E. Coli, Enterococcus, Rota virus, Hepatitis A போன்ற எல்லாக் கிருமிகளையும் கொன்றுவிடலாம். இந்தக் கிருமிகள்தான் வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் கிருமிகளில் தலையானவை.

தண்ணீரை கொதிக்கவைக்க முடியாதபோது வடிகட்டும் கருவிகள் மூலமும், கிருமிநாசினிகள் மூலமும் சுத்தப்படுத்தலாம். இந்த முறைகள் இரண்டையும் சேர்த்து செய்யும் போது பல கிருமிகள் கொல்லப்படுகின்றன. வடிகட்டுவதால் மட்டுமோ, கிருமிநாசினி மட்டும் உபயோகித்தோ எல்லாக் கிருமிகளும் கொல்லமுடியாது. இரண்டையும் செய்யவேண்டும். வடிகட்டுவதில் பல வழிகள் உள்ளன. இதற்கு சர்வதேச அளவில் சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி NSF 53 அல்லது NSF 58 விகித அளவில் சுத்தப்படுத்தும் கருவிகள் சிறந்தன. சில கிருமிகளுக்கு 1 மைக்ரோனுக்கும் குறைவான வடிகட்டியும், சிலவற்றிற்கு 0.3 மைக்ரோன் அளவுக்குக் குறைவான வடிகட்டியும் தேவைப்படும்.

கிருமிநாசினி மாத்திரைகள் கிடைக்கின்றன. இவை அயோடின், குளோரின் அல்லது குளோரின் டை ஆக்சைடு மூலம் செய்யப்படும். ஒரு மாத்திரை 25 லிட்டர் தண்ணீரை 30 நிமிடங்களில் சுத்தப்படுத்தும். இதைத்தவிர வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பிளீச்சீங் பவுடர் போட்டு சுத்தப்படுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்குப் பார்க்க:
www.cdc.gov
Backcountry Water Treatment

வெள்ளத்தில் பரவக் கூடிய முக்கிய நோய்கள்

லெப்டோஸ்பைரோஸிஸ் (Leptospirosis)
எலிகளின் சிறுநீரால் அதிகமாக ஏற்படும் நுண்ணுயிர்த் தொற்று இது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரைத் தாக்கவல்ல கொடியநோய். சேறு, மூழ்கிய தாவரங்கள், வெட்டுக்காயம், பருகும் நீரில் கழிவுநீர் கலத்தல் ஆகியவற்றால் இது தொற்றலாம். இதன் அறிகுறிகள் காய்ச்சல், குளிர், உடல்வலி, வாந்தி, மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்றவையாகும்.

தடுப்புமுறைகள்
தேங்கிய தண்ணீரில் நடக்க நேர்ந்தால் அதற்கான தடுப்புக் காலணி, உடைகளை அணியவும். வெள்ளநீர் பாதிப்பு முடிந்த பின்னர் சோப்புப் போட்டு குளிக்கவும். வெள்ளநீர் கலந்த தண்ணீரை அருந்த வேண்டாம். கால்களுக்கு விளக்கெண்ணெய் அல்லது வேப்பெண்ணெய் தடவலாம் .

பொதுநலம்
தேங்கிய தண்ணீரில் 1 கிலோ பிளீச்சிங் பொடி, 10 கிலோ சுண்ணாம்பு, 10 கிலோ உப்பு கலக்கலாம். இதை நகர நிர்வாகத்தின் அனுமதியுடன் செய்யவும். இதையே சிறிய அளவில் வீட்டைச் சுற்றியிருக்கும் தண்ணீர் தேங்கிய இடங்களில் தூவலாம்.

நுண்ணுயிர்க் கொல்லிகள் (antibiotics)
நோய் தடுப்புக்காக எல்லோருக்கும் ஆன்டிபயாடிக்ஸ் கொடுக்க அறிவியல் ஆதாரம் இல்லை. ஆனால் வெள்ளநீர் தொடர்பான நோய் கொண்ட அறிகுறிகள் இருப்பவருக்குக் கொடுக்கலாம். Doxycycline என்ற ஆன்டிபயாடிக் இதற்குக் கொடுக்கப்படும்.

மலேரியா
மலேரியா தடுப்பு மருந்துகளை எல்லோருக்கும் கொடுப்பது அவசியமில்லை. கொசுவிடம் கடிபடாமல் தடுக்க கொசுவலை, ஓடோமொஸ் போன்ற களிம்புகளை உபயோகிக்கலாம். கொசு விரட்டும் சுருள்களை உபயோகிக்கலாம். வெளிநாட்டிலிருந்து வருவோர் மலேரியா தாக்காமல் இருக்க மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். அந்தந்த ஊரின் கொசுக்கள் பற்றி ஆராய்ந்து CDC மருந்துகளின் பெயரை மாற்றி இருக்கிறார்கள். இந்தியக் கொசுக்களுக்கு Mefloquine, Atovoquone அல்லது Doxycycline வழங்கப்படும். மருத்துவரின் பரிந்துரையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பயணம் முடிந்த பின்னரும் தேவைப்படும்.

டெடனஸ், ஹெபடைடிஸ் A, B, டைஃபாய்டு, காலரா ஆகியவற்றுக்கான தடுப்பூசிகளை வெள்ளகாலத்தில் கொடுப்பது சாத்தியமில்லை. அவை உடனடியாக எதிர்ப்புசக்தியை உண்டு பண்ணாது. பொதுநல நிறுவனங்கள் இதை அறிவுறுத்துவதில்லை. ஆனாலும் முடிந்தவர்கள், வசதி உள்ளவர்கள், எளிதில் பாதிப்படைபவர்கள், தன்னார்வத்தொண்டர்கள் இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது நல்லது.

வயிற்றுப்போக்கு - தடுப்புமுறைகள்
கைகளை நன்றாக சோப்புப் போட்டு, குறைந்தது 20 வினாடி தேய்த்து, தூயநீரில் கழுவுங்கள். உணவு தயாரிக்கும் முன்னரும், பின்னரும் கைகளைக் கழுவுங்கள். தேங்கியநீரில் கால் வைக்க வேண்டாம். குழந்தைகள் தேங்கியநீரில் விளையாடாமல் பார்த்துக்கொள்ளவும். குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள். நுண்ணுயிர்க்கொல்லிகளை தேவையின்றி உட்கொள்ள வேண்டாம். இவை நுண்ணுயிர்க் கிருமிகளை சாமார்த்தியமாக்கிவிடும். அதன்பின்னர் ஆன்டிபயாடிக்ஸ் வேலை செய்யாது. வயிற்றுப்போக்கு இருந்தால் அரிசிக்கஞ்சி, உப்பு கலந்த நீர், இளநீர் போன்றவை அருந்துதல் உடலின் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க உதவும். உணவைத் தயாரிக்கவும், பரிமாறவும், சேமித்து வைக்கவும் சுத்தமான பாத்திரங்களையே பயன்படுத்தவும். கூடுமானவரை முகாமில் தட்டு, பாத்திரம், டம்ளர் இவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

உடலைத் துடைக்கும் துண்டு, பல் துலக்கும் பிரஷ் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

வயிற்றுப்போக்கு - தீர்க்கும் முறைகள்
- நோயாளிகளை தனிமைப் படுத்தவும்
- கழிப்பறை உபயோகித்த பின்னர் ஒவ்வொரு முறையும் கை கழுவவும்
- நோயாளிகளுக்கென்று தனிக்கழிப்பறை ஒதுக்கவும்.
- வாந்தி ஏற்பட்டால் பிளாஸ்டிக் பையில் எடுத்து அதைக் குப்பையில் எறியவும்
- வாந்தி அல்லது பேதி ஏற்பட்டால் உடனடியாக அதைச் சுத்தப்படுத்தவும். நுண்ணுயிர்க் கிருமி நாசினியால் உடனடியாகச் சுத்தப்படுத்தவும்.
- சுத்தப்படுத்தக் கையுறைகள் உபயோகிக்கவும்
- சுத்தப்படுத்த உபயோகிக்கப்படும் காகிதத் துண்டுகளை உடனடியாகக் குப்பையில் எறியவும்
- பிளீச்சிங் பவுடர் தூவி, பத்து நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரால் கழுவவும். குளோரின் உபயோகிக்கலாம்.

மன உளைச்சல், தற்கொலை எண்ணம்
பெரிய இயற்கைச் சீற்றத்திற்குப் பின்னர் சோக உணர்வு ஏற்படலாம். கஷ்டப்பட்டு சேர்த்த பல பொருட்களை இழந்திருக்கலாம். அதனால் தற்கொலை எண்ணம் வரலாம். இதற்குத் தீர்வுகாண மனநல நிபுணர்களை நாடுவது அவசியம். உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவது நல்லது. மற்றவர்களுக்கு தம்மால் முடிந்த தொண்டு செய்தால், சோக உணர்வு விலகி, நம்பிக்கையும் உற்சாகமும் வளரும்.

மீண்டும் சென்னை மலர்வதைக் கண்டு மனம் மகிழ்கிறது. நோயற்ற உடலோடு புத்தாண்டில் கால் வைப்போம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com