சான் ஹோஸே: "ராக் அண்ட் ரோல்"
செப்டம்பர் 27, 2015 அன்று, சான் ஹோஸேயில் ராக் அண்ட் ரோல் அரை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் சுமார் 16000 பேர் பங்கேற்றனர். பொதுமக்கள் பலரும் பங்கேற்பாளரை ஊக்குவிக்க பாண்டு

வாத்தியங்களை இசைத்தும், கரவொலி எழுப்பியும், உற்சாகக் கூக்குரல் எழுப்பினர். அவ்வப்போது ஒலித்த ஆங்கில, ஹிந்திப் பாடல்கள் பார்வையாளர்களை ஆடவைத்தன.

போட்டியாளர்களை அனுபவம், வேகம், தொலைவு, மாற்றுத்திறனாளி என்ற அடிப்படைகளில் சிறு சிறு குழுக்களாகப் பிரித்து ஓடவிட்டனர். மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் தங்கள் கைபலத்தைக் காட்டி

முடித்தனர். சில போட்டியாளர்கள் தங்கள் பெற்றோர்களையோ, தாத்தா - பாட்டியையோ சக்கர நாற்காலியில் உட்கார வைத்தும் மற்றும் சிலர் குழந்தைகளை ஸ்ட்ரோலரில் வைத்தும், அவர்களை தமது

கண்காணிப்பில் வைத்தபடி இந்தக் கோலாகலத்தைப் பார்க்கும் மகிழ்ச்சியையும் அளித்து விட்டோம், நமது எண்ணப்படி ஓட்டப்பந்தயத்திலும் கலந்து கொண்டு விட்டோம் என்ற ஆனந்தம் வெளிப்படப் பந்தய எல்லையை

எட்டினார்கள். சிலர் நாயுடன் ஓடி வந்தனர். ஒருவர் ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி இருக்க, மற்றவர் தள்ளியபடி ஓடிவந்தார்.

சான் டியகோ நகரில் முதலில் நடத்தப்பட்ட இந்தப் போட்டி, தற்போது அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ நாடுகளில் 30 இடங்களிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் நடத்தப்படுகிறது. இவற்றின்மூலம் தொண்டு

நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்க 310 மில்லியன் டாலர் நிதிவசூல் செய்யப்பட்டிருக்கிறது. வரும் ஆண்டுகளில் பங்கேற்போர் எண்ணிக்கையும், நிதியும் அதிகரிக்கும் என்பது உறுதி.

கிருஷ்ணன் ரங்கசாமி,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com