அரங்கேற்றம்: மலாய்க்கா ரவீந்திரன்
நவம்பர் 7, 2015 அன்று நியூ யார்க் ஃப்ளஷிங் இந்துக்கோவில் அரங்கத்தில் செல்வி. மலாய்க்கா ரவீந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் சிவஜோதி நாட்டிய அகாடமியின் குரு தேஜஸ்வினி ராஜ் அவர்களின் மாணவியாவார்.

சொக்கநாதர் கவுத்துவத்துக்குப் பின் அலாரிப்பில் மலாய்க்கா கடவுள், குரு மற்றும் அவையோரை வணங்கினார். ஜதீஸ்வரம், சப்தம், ஓம்கார வர்ணம் ஆகியவற்றுக்குப் பின் 'தேவி நீயே துணை' என்ற கீர்த்தனத்துக்கு மீனாட்சி அம்மனைக் கண்முன் கொண்டுவந்தார். 'வீர ஹனுமதே' மற்றும் புரந்தரதாசர் கிருதிகளுக்கு அவர் ஆடியதில் வீரமும் பக்திச் சுவையும் சொட்டியது என்றால் தவறில்லை. தில்லானாவுக்குப் பின் மங்களப் பாடலுக்கு ஆடி அரங்கேற்றத்தை நிறைவு செய்தார்.

ஐந்து வயதில் தேஜஸ்வினி அவர்களிடம் நாட்டியம் பயிலத் தொடங்கிய மலாய்க்கா, ஐந்தாண்டுகளாக அக்கலையில் தேர்ந்து வருகிறார். NJ Chorus குழு உறுப்பினரான மலாய்க்கா, லிங்கன் சென்டர், கார்னெகி ஹால், மெட்லைஃப் ஸ்டேடியம் (சூப்பர் பௌல்) எனப் பல இடங்களில் பாடியுள்ளார். அழகப்பா பல்கலைக்கழகத்திலிருந்து பரதநாட்டியத்தில் சான்றிதழ் படிப்பும் தேறியுள்ளார்.

பரதநாட்டியத்தை 30 ஆண்டுகளாகப் பயிற்றுவித்து வரும் குரு தேஜஸ்வினி ராஜ், காட்டுமன்னார்கோவில் முத்துக்குமரன் பாணி நடனத்தில் வல்லவர். இவரிடம் பயிற்சி பெற்றோர் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல நடனப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் ஸ்ரீதர் (வாய்ப்பாட்டு), ஏ.ஆர். பாலஸ்கந்தன் (மிருதங்கம்), கபிலன் ஜெகநாதன் (கஞ்சிரா), ஜே காந்தி (புல்லாங்குழல்), அனுஸ்ரீ ராஜகோபால் (வயலின்) ஆகியோர் மிகச்சிறப்பாக நடனத்துக்கு வலுவூட்டினர். ராதாமணி வரதாசாரி சுவைபட நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.

எல். ரமேஷ்,
பாஸ்கிங் ரிட்ஜ், நியூ ஜெர்சி

© TamilOnline.com