ஆஸ்டின்: தீபாவளி கொண்டாட்டம்
நவம்பர் 7, 2015 அன்று ஆஸ்டின் தமிழ்ச் சங்கம், வெஸ்ட் லேக் பெர்ஃபாமிங் ஆர்ட்ஸ் சென்டரில் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடியது. ஆஸ்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. சிறுமியரின் பரதநாட்டியம், குழந்தைகள் நடனம், பாட்டு, மஹாதேவ கெளத்வம், காவடிச்சிந்து, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் 'புலிகேசி', 'நேற்று இன்று நாளை' நாடகம் உட்பட்ட கலைநிகழ்ச்சிகள் பார்ப்பவர்களை மகிழ்வித்தன. 'ட்ரம்கேப்பெல்லா' என்ற இசைக்கச்சேரி அக்னி நடனப் பள்ளியின், யுவ, யுவதிகளின் நடனம், மயூர் நடன அமைப்பின் யுவதிகளின் நடனம் மற்றும் லேசர் ஷோ வெகுவாகக் கவர்ந்தன. நிகழ்ச்சியின் இடையிடையே பார்வையாளர்களின் அனுமதிச் சீட்டு எண்ணைக் கொண்டு குலுக்கல் முறையில் பரிசுகள் கொடுக்கப்பட்டன.

சிறப்பு விருந்தினர் திரு. பால் கிம் (இயக்குனர், Greater Austin Asian Chamber of commerce) சிறப்புரையாற்றினார். இறுதியில் வழங்கப்பட்ட வாழையிலைச் சாப்பாடு மறக்க முடியாதது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்களான தலைவர் அன்பு கிருஷ்ணசுவாமி, துணைத்தலைவர் சங்கர் சிதம்பரம், பொருளாளர் பாலா பெத்தண்ணன், செயலாளர் சுகந்தி கோவிந்த் மற்றும் இணைக்குழு உறுப்பினர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

அன்பு கிருஷ்ணசாமி,
ஆஸ்டின், டெக்சஸ்

© TamilOnline.com