மகாசூரியன்
நகோமி, மெதுவாக எட்டுவைத்து நடந்தாள் துணிப்பொதியை இரண்டு கரங்களாலும் அணைத்தபடி. செலுத்தப்பட்டது போல் அவள் கால்கள் தானாய் நடந்தன. பொத்தலிட்ட அவள் இருதயத்தில் இருந்துதான் குருதி பெருகிக் கண்ணீரானதோ என்னும் வண்ணம் கன்னங்களில் நீர். மெல்ல அரற்றியது அவள் உள்ளம்...

"பொழைக்க வழி தெரியாம வந்தடைஞ்சேன் இந்தூருக்கு
கட்டுன மகராசன், பெத்த மக்க ரெண்டு ரத்தினத்தோட
நாட்டுக்காரி, கூட்டுக்காரி, நான் வளர்ந்த என் சோட்டுக்காரி
அத்தனைப் பேரிடமும் சொல்லிவந்தேன், நல்ல காலம் எனக்குன்னு
புரியாத மொழி பேசும், தெரியாத சாமி கொண்ட நாட்டுல... அச்சோ!
எனக்குச் சொல்லாத கஷ்டம் வந்து என் குடும்பத்தைக் கூட்டிப் போச்சே"

என்று இழந்த புருஷனையும், இரண்டு வாலிப மகன்களையும் நினைத்து மருகினாள். இனிமேல் எனக்கு இந்த மோவாபிய நாட்டில் என்ன வேலை! விட்டுவந்த தேசத்தில், சொந்தங்களின் பக்கத்தில் என் கடைசிக்காலத்தைக் கழிப்பதுதான் இனி உசிதமென யூதா தேசத்திற்குத் திரும்பிப்போகத் தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டாள்.

ஊர் எல்லையில் பிரியும், அந்த கூட்டு மணற்சாலை வழியை வந்து சேர்ந்தபோது, அவளுடன் பின்தொடர்ந்த அவள் மருமகள்கள் ஓர்பாளையும், ரூத்தையும் நெஞ்சாரக் கட்டித் தழுவினாள். மோவாபியப் பெண்களாகிடினும் என் பிள்ளைகளுடன் பத்து வருடம் எத்தனை அருமையாய்க் குடித்தனம் செய்தனர். எத்தனை அன்பு, எத்தனை பணிவு. குழந்தைப் பேறுதான் இல்லாமற் போயிற்று.

இனியாவது என்னை, என் பிள்ளைகளை மறந்து புதுவாழ்வு பெறட்டும். ஆமாம், அதுதான் நியாயம். ஒரு வீட்டில் மூன்று விதவைகள் மாத்திரம் என்பது சொல்லொண்ணாத் துயரம். வேண்டாம்! இவர்களுக்காவது விடியட்டும் புது வாழ்வு! நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: "என் பிரிய மக்களே, நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போன என் பிள்ளைகளுக்கும் எனக்கும் நீங்கள் தயை செய்ததுபோல, எல்லாம்வல்ல இறைவன் உங்களுக்கும் தயைசெய்வாராக! கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக!" என மனதார ஆசிர்வதித்து அவர்களை முத்தமிட்டாள். அவர்களோ பிரிவுத்துயரம் தாளாது சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து, "அம்மா, உங்களுடைய நாட்டுக்கு உங்களண்டையில் வாழ நாங்களும் உங்களுடன் கூட வருவோம்" என வாதம் செய்தார்கள்.

அதற்கு நகோமி நொந்தவளாக "திரும்பிப் போங்கள். என்னோடே ஏன் வருகிறீர்கள்? நான் வயதுசென்றவள்; இந்தக் கிழவியுடன் வந்து என்ன காண்பீர்கள்? உடைந்த வீடும், ஒன்றும் விளையா பூமியும்தான் எனக்குண்டு. என் பாவமோ,..இல்லை என் மூதாதையார் வினையோ... கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், நீங்கள் திரும்பிப்போங்கள்" என்றாள்.

ஓர்பாள் நகோமியின் கூற்றை ஒருவாறு ஏற்று அழுதபடியே மாமியை முத்தமிட்டுவிட்டுச் சென்றாள். ரூத் மட்டும் ஒன்றும் சொல்லாது ஒருவித வைராக்கியத்துடன் நகோமியைப் பின்தொடரலானாள். நகோமி ஒருவிசை நின்று "மகளே! ‘திருப்தி’ எனப் பொருள்விளங்க ‘ரூத்’ என உனக்கு வைத்த பெயர் உன் வாழ்வில் நிலைக்க வேண்டுமானால், நீ உன் தாய்வீடு திரும்பிச் செல்லத்தான் வேண்டும். பார்! உன் சகோதரி தன் சொந்த ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய்விட்டாள். நீயும் உன் சகோதரியின் பின்னே திரும்பிப்போ!" என்றாள்.

ரூத் மிகத் திடமாக "அம்மா, நான் உங்களைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து என்னோடு இனி பேசவேண்டாம்; நீங்கள் போகுமிடத்திற்கு நானும் வருவேன்; நீங்கள் தங்குமிடத்திலே நானும் தங்குவேன்; உங்களுடைய சொந்தம் என்னுடைய சொந்தம்; உங்களுடைய தேவன் என்னுடைய தேவன். மரணமேயல்லாமல் வேறொன்றும் உங்களைவிட்டு என்னைப் பிரிக்க இயலாது. நீங்கள் நிதம் வணங்கும் தேவன் நான் கேட்பதற்கும், வேண்டுவதற்கும் அதிகமாகச் செய்யக்கடவர்" என்றாள்.

இவ்வாறு ரூத் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, நகோமி அப்புறம் அதைக்குறித்து அவளோடு ஒன்றும் பேசவில்லை. அப்படியே இருவரும் பெத்லெகேம் நகரம்மட்டும் நடந்துபோனார்கள்.

அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்கள் வருகைகுறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமிதானோ என்று பேசிக்கொண்டார்கள். மோவாபிய தேசத்து மருமகள் ரூத் அவர்களுக்கு அன்றைய பொழுதின் புறணியாற்று. ஏன் வந்தாள், எதற்கு வந்தாள் என்பதைவிட ரூத்தை ஏன் நகோமி தன்னுடன் இட்டுவந்தாள் என்பதைத்தான் ஒவ்வொரும் தங்கள்பாட்டுக்கு இட்டுக்கட்டி கதை சொன்னார்கள்.

இப்படியாக நகோமி, மோவாபியப் பெண்ணான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து கோதுமை அறுப்பின் துவக்கத்தில் பெத்லெகேமுக்கு வந்தாள்.

நகோமியின் பருவவயதுத் தோழி எலிசா அவர்களைக் கண்ட ஆனந்தமிகுதியில், "நகோமி" என அவளைத் தாவி அணைத்தாள். நகோமியோ அவளிடம் "நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; வெறுமையாய்த் திரும்பினேன். சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தி இருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன். என் வாழ்வு மாரா ஸ்தலத்து தண்ணீரைப்போல கசந்துகிடக்கிறது. மாராள் என்று சொல்லுங்கள்!" என்று விசனப்பட்டாள்.

நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள ஆஸ்திமிகுந்த தனவந்தன் ஒருவன் இருந்தான். அவன் உத்தமனாவும், உதவும் நற்குணத்தவனாகவும் விளங்கினான்.

அன்றைய இஸ்ரவேலின் நடைமுறையின்படி, திக்கற்ற பெண்களும், விதவையரும் அறுப்பு சமயங்களில் வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பின்னே சென்று, விடப்பட்ட தானியங்களைப் பொறுக்கியெடுத்து வெளியே விற்றோ, இல்லை வீட்டில் பொங்கியோ பசியாறுவார்கள். ஆனாலும் இவ்வழக்கத்தை எல்லா நிலச்சுவான்தார்களும் அனுமதிப்பது இல்லை.

ரூத், நகோமியிடம் "நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமோ, அவர் நிலத்தில் கதிர்களைப் பொறுக்கிக் கொண்டுவருகிறேன்" என்றாள்

அப்படி அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள்; தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல்நிலம் நகோமியின் கணவன் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாஸுடையதாயிருந்தது. அப்பொழுது தான் போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்திருந்தான், அறுவடையைக் கண்காணிக்க வந்தவனின் கண்களில் அன்னிய நாட்டவளான ரூத் பட்டாள். போவாஸ் தன் கண்காணி வேலைக்காரனிடம் "கர்த்தர் உங்களோடே இருப்பாராக; இந்தப் பெண்பிள்ளை யாருடையவள்" என்று வினவினான்.

அந்த வேலைக்காரன் அதற்கு "கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக: இவள் மோவாப் தேசத்திலிருந்து உங்கள் சொந்தமான நகோமியோடே கூட வந்த மோவாபியப் பெண். அவளுடைய மருமகள் ரூத்" என பதிலளித்தான். மேலும் அவன் ""அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக் கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் பணிவாய்க் கேட்டுக்கொண்டாள்; அந்தியில் துவங்கி இதுவரைக்கும் இங்கேதான் இருக்கிறாள்" என்றான்.

அப்பொழுது போவாஸ் இரக்கமுற்றவனாய் ரூத்தைப்பார்த்து" பெண்ணே, கேள்; நீ வேறு வயலில் போகாமல் இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடு கூடவே இரு. அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பின்னே போ; ஒருவரும் உன்னைத் தொந்தரவுச் செய்யாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், என் வேலைக்காரர்கள் மொண்டுகொண்டு வரும் தண்ணீர்க் குடத்திலயே நீ குடிக்கலாம்" என்றான்.

ரூத் அவனுடைய கனிவான பேச்சில் மகிழ்ந்தவளாய் அவன்முன் முகங்குப்புற விழுந்து வணங்கி "ஐயனே! நான் அன்னிய தேசத்தாளாயிருக்க, திக்கற்றவளான என்னை, நீர் விசாரிக்கும்படி எனக்கு உம்முடைய கண்களில் தயை கிடைத்ததே" என மனமுருகினாள்.

அதற்குப் போவாஸ் "உன் கணவன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் பிறந்த தேசத்தையும் விட்டு உன் வயதுசென்ற மாமியாருக்கு உதவும் நிமித்தம் இங்கு முன்பின் அறியாத ஜனங்களிடத்தில் வந்தது எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரியும். உன் சுயநலமற்ற செய்கைக்குத் தக்கபலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக! இது என்னாலான சிறிய உதவிதான்" என்றான்.

பின் போவாஸ் சாப்பாட்டு வேளையில் ரூத்தைப் பார்த்து: "நீ இங்கே வந்து, எங்களுடன் இந்த அப்பத்தை புசித்துக்கொள்" என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள், போவாஸ் அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் வயிறாரச் சாப்பிட்டு, மீந்ததை நகோமிக்கென்று எடுத்து வைத்துக்கொண்டாள்.

அவள் கதிர்பொறுக்கிக் கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவள் பொறுக்கிக் கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள்" என்று அன்போடு கட்டளையிட்டான்.

அப்படியே அவள் சாயங்காலமட்டும் பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது.

அவள் அதை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் வந்தாள்; அவள் கொண்டுவந்த அத்தனை கோதுமையைப் பார்த்த நகோமி ஆச்சரியமுற்றாள்; ரூத் தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து நகோமிக்குக் கொடுத்தாள்.

அப்பொழுது நகோமி "மகளே! இன்று எங்கே கதிர்பொறுக்கினாய்? எவ்விடத்தில் வேலைசெய்தாய்? என்றாள்; அதற்கு ரூத் "நான் இன்று வேலைசெய்த வயல்காரன் பேர் போவாஸ்" என்றாள்.

அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து "அப்படியா... அந்த ஆசீர்வதிக்கப்பட்டவன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற உரிமை கொண்டவர்களில் ஒருவனும் ஆவான்" என்றாள்.

பின்பு சற்றே யோசனையோடு ரூத்திடம் "என் மகளே, நான் சொல்வதைக் கேள். அவன் நம்முடைய உறவின் முறையான். இன்று அவன் இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான். நீ குளித்து, எண்ணெய் பூசி, நல்லாடைகளை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப் போ; அங்கு நான் சொல்வது போல் செய்" என்று விளக்கினாள். மோவாபியப் பெண்ணான ரூத்திற்கு இஸ்ரவேல் வழக்கதில் உள்ள ஒரு காரியத்தை அவள் மாமி எடுத்துரைத்தாள். ஆச்சரியத்துடனும், ஆர்வத்துடனும் தன் மாமியார் சொல்வதை ரூத் கருத்துடன் கேட்டுக், களத்திற்குப்போய் அங்ஙனமே செய்தாள்.

போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெள்ளப் போய், அவன் கால்களின் மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி அவன் காலடியில் படுத்துக்கொண்டாள். அவன் அந்த பாதி ராத்திரியிலே, அரண்டு, திரும்பி "யாரிந்த பெண் களத்தில் நடு இரவில் இப்படி என் காலில் வீழ்ந்து கிடப்பது!" எனப் பதறி எழுந்தான்.

‘இரவு வேளைகளில் கதிர் தூற்றும் களத்திற்கு பெண்கள் வருவது மரபல்லவே" என பலவாறு எண்ணியபடி, அவன் அந்த அரையிருட்டில் அப்பெண்ணை அடையாளம் காணாது "பெண்ணே! நீ யார்?" என்று கேட்டான்; அதற்கு அவள் "நான்தான் இன்று காலை நீங்கள் தயைபாராட்டிய ரூத்" என்றாள்; தொடர்ந்து "ஐயனே! நீர் எங்களுடய சுதந்தரவாளி, நீர் எங்களை ஆதரிக்கிற உரிமையும் கொண்டவர்களில் ஒருவன். ஆதலால் தயைகூரும்" என்று நடுங்கியபடி மெதுவாய்ச் சொன்னாள்.

அன்றைய நாட்களில் இஸ்ரவேலில் ஒரு வழக்கம் இருந்தது. ஒரு குடும்பம் சீர்கெட்டுப் போகுமானால் அதன் சொத்துகளையோ உடைமைகளையோ, கால்நடைகளையோ, ஏன் பெண்டிர்களையும் கூட அக்குடும்பத்தின் நெருங்கிய உறவினன் நல்ல தனவான் சுதந்தரித்துக் கொள்ளலாம். அதாவது ஊர் மூத்தோர்முன் தங்கள் குடும்பத்தாராக, உடைமைகளாக ஏற்று அவர்களுக்கு ஆதரவு அளிக்கலாம்.

அதைத்தான் ரூத் போவாஸிடம் அந்த அர்த்தசாம வேளையில் வேண்டிக் கொண்டிருந்தாள். அதற்கு போவாஸ் "பெண்ணே! நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஊராரெல்லாரும் அறிவார்கள். நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் நெருங்கிய சொந்தக்காரன் சுதந்தரவாளியாய் உங்களுக்கு ஒருவன் இருக்கிறான்" என்றான்.

மேலும் அவன் "நாளை காலை பெரியோர்முன் இதைக் குறித்து ஆலோசிக்கிறேன், அவன் உன்னை விவாகம் பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவனே உன்னை விவாகம் பண்ணட்டும்; அப்படி அவன் உன்னை விவாகம் பண்ண மனதில்லாதிருந்தால், நான் உன்னை எல்லோர் முன்னிலையிலும் மணம் முடிப்பேன்" என்றான்

மன சமாதானமடைந்த ரூத் தன் மாமியினிடத்தில் வந்து நடந்ததையெல்லாம் விவரமாக விவரித்தாள். மேலும் அவள் "அம்மா, அவர், நீ உன் மாமியாரிடம் வெறுமையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறு படி வாற்கோதுமையையும் எனக்குக் கொடுத்தார்" என்றாள்.

அதைக் கேட்ட நகோமி அகமகிழ்ந்து "என் மகளே, நீ பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்காமல் இளைப்பாறமாட்டான்" என்றாள்.

அதேபோல் போவாஸ் பட்டணவாசலில் போய் உட்கார்ந்து கொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி "ஓய்!" என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, "இங்கே வந்து சற்று உட்காரும்" என்றான்; அவனும் வந்து உட்கார்ந்தான்.

அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள். அப்பொழுது அவன் அந்தச் சுதந்தரவாளியை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள்.

ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், நம் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப் பண்ணவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதை மீட்டுக்கொள்ள மனதிருந்தால் மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், உமக்குப் பின்பு என்னைத் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை" என்றான்; அதற்கு அவன் உடனே ஆமோதித்து: "அப்படியா, நானே அதை மீட்டுக்கொள்ளுகிறேன்!" என்றான்.

அப்பொழுது போவாஸ்: "நீர் நகோமியின் அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே, மரித்தவன் மனைவியாகிய மோவாபியப் பெண்ணான ரூத்தையும் விவாகம் செய்துகொள்ள வேண்டும்" என்றான்.

அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி மோவாபியப் பெண்ணை மணக்க மனதில்லாததால் "எனக்கு அதில் உடன்பாடில்லை, எனவே நீர் மீட்டுக்கொள்ளும்; நான் மீட்டுக்கொள்ள விரும்பவில்லை" என்றான்.

இஸ்ரவேலிலே மீட்கிறதிலும், மாற்றுகிறதிலும், சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும் பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இதுதான் இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு.

அப்படியே அந்தச் சுதந்தரவாளி போவாசை நோக்கி: "நீரே அதை வாங்கிக்கொள்ளும்" என்று சொல்லி, தன் பாதரட்சையைக் கழற்றிப் போட்டான்.

அப்பொழுது போவாஸ், பட்டணத்தின் பத்து மூப்பர்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கும் மற்றும் அவர் மகன்கள் கிலியோனுக்கும், மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியிடமிருந்து வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றைய தினம் நீங்கள் சாட்சி! இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப் போகாமல், அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றைய தினம் நீங்கள்தாம் சாட்சி!" என்றான். அதற்கு அங்கு கூடியிருந்த சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: "ஆமாம்! நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக!" என வாழ்த்தினார்கள்.

அப்படியே போவாஸ் ரூத்தை விவாகம் பண்ணினான்; அவள் கர்ப்பந் தரித்து, ஓர் ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அனுக்கிரகம் பண்ணினார். நகோமி ஊரார்முன் தன் பேரப்பிள்ளையை மடியிலே கிடத்தி ‘ஓபேத்’ (கடவுளை துதிப்பவன்) எனப் பெயரிட்டு மனமுவந்தாள். கேலிசெய்த அயல் வீட்டுக்காரிகள் எல்லாம் அவளை வியந்து வாழ்த்தினார்கள்.

நகோமி "ஆண்டவரே! நீர்தான் எத்தனை நல்லவர். அன்று மாராவின் தண்ணீரை மதுரமாக்கி ஜனங்களுக்கு இளைப்பாறுதல் தந்ததுபோல இன்று என் வாழ்வையும் ஆசிர்வதித்தீரே. முடிந்துபோன என் சந்ததியை உயிர்ப்பித்தீரே" என அவள் பேரக்குழந்தையை விண்ணை நோக்கி உயர்த்திப் பிடித்து எல்லாம்வல்ல இறைவனுக்கு உளமார நன்றி சொன்னாள். அன்று நகோமிக்கு தெரியாது அவள் தூக்கிக் கொஞ்சுவது ஒரு பேரரசனின் தகப்பன்வழிப் பாட்டனை என்று, ஒரு மகாசூரியன் உதிக்கும் கோத்திரத்தை என்று.

ஆம், ஓபேத்தின் பேரன்தான் தாவிது மகராசன்! தாவிதின் மகன்தான் ஞாலம் போற்றும் ஞானவான் சாலமன் மகாபிரபு! அவ்வளவு ஏன், மாமியாருக்கும் அவள் தேவனுக்கும் கீழ்ப்படிந்த அந்த திக்கற்ற விதவை ரூத்துக்கு இறைவனின் கருணை அதுமட்டுமன்று, இன்னும் உண்டு. உலகத்தை வெல்லக்கூடிய மிக வல்லமையான ஆயுதம் அன்பு மாத்திரம்தான் எனப் போதித்து, அதற்காகவே சிலுவையில் மரித்து, பின் உயிர்த்தெழுந்த, மன்னிப்பின் நற்செய்தி தந்த மகாசூரியன் கிறிஸ்து ஏசுபிரானின் மூதாதை ஒருவர் இப்படித்தான் அவள் வயிற்றில் ஜனித்தது.

அருள்மொழி

© TamilOnline.com