ஆசைகள்
இவனுக்கு எப்போதும் தான் போட்டிருக்கிற வார்வைத்த பழுப்பு கலர் கால்சராயும் மேலே சந்தனக் கலரில் இருக்கிற சட்டை ஒன்றுமட்டுமே போதுமென்றும் இனி வேறு ஒன்றும் தனக்குத் தேவையில்லை என்கிற மாதிரியும்தான் நினைத்திருந்தான் அப்போது.

தனது வயசையொத்த கூட்டாளிகளிடம் அடிக்கடி இப்படிச் சொல்லி ஆனந்தப்பட்டுக் கொள்வான், "எலே பரமசெவம், நா இப்ப இருக்குறமாறியே இருந்துட்டா போரும்டா வேற எனக்கு ஒண்ணுமே வாணாம்" - இவன் சதா நேரமும் இப்படிச் சொல்லிக் கொள்வது தன் வயசையும் சேர்த்துத்தான்.

இவனது அப்பா தீபாவளி சமயத்தில் நீலக்கலரில் கட்டமும் கட்டத்திற்குள் வெள்ளைப் புள்ளியுமாய்ப் போட்ட ஒரு அழகான சட்டையும் கறுப்பும் பழுப்பும் கலந்த மாதிரியான ஒரு வார் இல்லாத கால் சராயும் தைத்துக்கொண்டு வந்து இவனிடம் போட்டுக்கொள்ளச் சொல்லிக் கொடுத்தபோது, இவன் அதை வாங்கி விநோதமாகப் பார்த்தான். இதைப் போட்டுக் கொண்டால் தான் முன்னைக் காட்டிலும் கொஞ்சம் நன்றாயிருப்போமோ என்கிற மாதிரிப் பார்த்தான். அப்போதும்கூட இவன் அந்தப் புதுச்சட்டைகளைப் போட்டுக் கொள்ளவில்லை. தெருப்பயல்களிடம் அதுபற்றிய தகவலைச் சொல்லியதோடு, அப்பா வாங்கிவந்த அந்த "புதுச்சட்டைகள் பிடிச்சிருக்கா?" என்று அவர்களைக் கேட்டபோது, "டேய், ஜோரான சட்டைடா... போட்டா ஒனக்கு எப்புடி இருக்கும் தெரியும்ல. போட்டுக்கடா..." என்று பயல்கள் குஷிப்படுத்திச் சொன்னதைச் சாக்காய் வைத்தும், தானாய் ஒன்றும் அந்தச் சட்டையைப் போட்டுக் கொள்ளவில்லை என்கிற மாதிரியும் நினைத்துப் போட்டுக்கொண்டான்.

சட்டைகளைப் போட்டுக் கொண்டதும் இவன் சும்மாயிருக்கவில்லை. "இது நல்லாருக்காம்மா?" என்று முதலில் அம்மாவைக் கேட்டான். பிறகு அப்பா, அக்காள், தங்கை, அண்ணன் தம்பிகள் என்றெல்லாம் மாறிமாறிக் கேட்டுவிட்டு, தெருப்பயல்களிடமும் கேட்டான், "நீ இப்ப ரொம்ப ஜோர்டா" என்றபோது, இவன் அந்த வார்த்தையில் மயங்கிப்போனான். 'அது உண்மைதானோ'வென்று ருசுப்படுத்திக் கொள்வதற்காகத் தன்னை ஒரு சின்னக் கண்ணாடி கொண்டு பார்த்தான். அந்தக் கண்ணாடி அப்போது சட்டைகளோடு தன் முழு உருவத்தையும் பார்க்கத் தோதானதாக இருக்கவில்லை. அதை மேலுங்கீழுமாய் அசைத்துப் பார்த்தான். அப்போதும்கூட முழு உருவம் கிடைக்கவில்லை. ஒரே சமயத்தில் எவ்விதக் கஷ்டமுமில்லாமல் பார்க்கத் தோதானதாய் ஒரு கண்ணாடியிருந்தால் எப்படியிருக்குமென்று சிலாகித்து, அந்த ஆசையை அப்பாவிடம் வெளிப்படுத்தினபோது அவரும் மறுக்காமல் ஆள் உயரக் கண்ணாடி ஒன்று வாங்கிக் கொடுத்துவிட்டார்.

அப்பா அந்தக் கண்ணாடியை வாங்கிவந்து வீட்டில் வைத்த நிமிஷத்திலிருந்தே அதை விநோதமாகப் பார்ப்பதற்கென்று ஒரு கூட்டமே கூடிவிட்டது. விநோதமாகப் பார்த்தது போலவே விநோதமாகவும் விமர்சித்தார்கள். அதில் தங்கள் தங்கள் அழகுகளைப் பார்த்துத் திருப்திப்பட்டவர்கள் தானும் அதுமாதிரி ஒன்று வாங்கிவிட வேண்டுமென்று முடிவு செய்துகொண்டும் போனார்கள்.

முன்பு அப்பா தைத்துக் கொடுத்த வார்வைத்த அந்த பழுப்புக்கலர் கால்சராயும் சந்தனக்கலர் சட்டையும் இப்போதெல்லாம் சுத்தமாய் அவனுக்குப் பிடிக்கவில்லை. அது வெளுத்தும் நைந்தும் கிழிசலாகும் பக்குவத்திலிருக்கிறது என்கிற மாதிரியும், தான் இப்போது கொஞ்சம் வளர்ந்த நிலையில் அந்தச் சட்டைகள் தன் உடம்புக்குத் தோதுப்படவில்லை என்றும் ஒதுக்க ஆரம்பித்தான்.

இப்போது அவன் கொஞ்சம் வளர்ந்த நிலையில் சிந்திக்க ஆரம்பித்திருக்கிற விஷயம் இதுதான். மற்றவர்கள் மாதிரி தான் கல்யாணம் கில்யாணம் பண்ணிக் கொண்டுவிடக் கூடாது - ஒரு பெண்ணுடன் சேர்ந்து போவதைக் காட்டிலும் அருவருப்பு உலகத்தில் வேறில்லை. தனக்கு மனைவி இருக்கக் கூடாது - குழந்தைகள் இருக்கக்கூடாது - 'அப்பா'... ஐயோ இதென்ன 'அப்பா'! ஒரு ஆண் பிள்ளையை அப்பாவென்று அசிங்கப்படுத்திக் கூப்பிடும் முறை.. ச்சே... அப்பாவும் வேண்டாம். அப்பாவாகி... தாத்தாவாகி... கிழவனாகி... மற்றவர்கள் மாதிரி நாமும் செத்துப் போய்விடுவோம் - உலகத்தில் பிறந்தது சாவதற்குத் தானா? நான் சாகமாட்டேன். நான் அப்பாவாக வேண்டாம் - தாத்தாவாக வேண்டாம். கிழவனென்று யாரும் என்னைச் சொல்லவே கூடாது. அப்பாவானாலும் பரவாயில்லை சாமி... தாத்தாவாகிவிடக் கூடாது. கூடவே கூடாது. தாத்தா.,. இதென்ன அசிங்கம். தாத்தா - அப்புறம் கிழவன்... ஐயய்யோ... இதெல்லாம் வேண்டாம் வேண்டாம். நான் இப்படியே - இப்போதிருக்கிறபடியே - இந்தப் பருவத்துடனேயே - பயல்களுடன் விளையாடிக் கொண்டிருந்தால் எத்தனை சந்தோஷம்...

மனசுக்குள் இப்போதிருக்கிற திருப்தியும் சந்தோஷமும் இருந்துவிட்டால் போதுமென்று நினைத்தவன், பொருள்களாயினும் உலகத்தில் ஜனித்திருக்கிற எந்த வஸ்துக்களாயினும் தேவையே இல்லை என்பதாய் நினைத்துக்கொண்டான். உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க வீடும் (வீடுகூட அவசியமா என்றுதான் ஒருமுறை நினைத்திருந்தான். உலகத்தில் ஜனித்திருக்கிறவைகளில் மனிதர்களைத் தவிர எதற்கு வீடு இருக்கிறது - ஓ... இருக்கிறது! அவைகளுக்குக் கூடும், பொந்தும், புதரும் ஒடுங்கிக்கொள்ள இன்னும் எத்தனையோ மறைவான வழிகளும் இருக்கின்றன என்று யோசித்துக் கொண்டபோதுதான் அவைகளைப்போல் தனக்கும் ஒரு வீடு அவசியம் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது) என்ற தத்துவவாதிகளின் கோட்பாட்டு எல்லையைத் தாண்டி, கொஞ்சம் மேலே தாவி விளையாடப் பயல்களும் மைதானமும் வயல்வெளிகளும் தோட்டமும் இருந்துவிட்டால் போதும் என்று மனசு முடிவாய்க் கொண்டுவிட்டது.

இந்த நினைப்பும் சிந்திப்பும் இவனது பதினைந்து வயசுவரைக்கும்தான் இவனால் தாக்குப்பிடிக்க முடிந்தது. இவனுக்கு வயசு பதினாறு ஆகியிருக்கிற இந்தப் பருவத்தில்தான் நெஞ்சில் இத்தனை நாளும் நினைக்காத எதெல்லாமோ தேவையாயிருக்கிற மாதிரிப்பட்டது. இன்னதென்று இனம்புரியாத தேவைகள் அது. தான் இத்தனை காலமும் அடியோடு வெறுத்திருந்தவைகளைப் பற்றியெல்லாம் கூட லேசாய் நினைக்கவும் சிந்திக்கவும் ஆரம்பித்திருந்தான்.

ரோட்டிலோ தெருவிலோ வேறு எங்கேனுமோ வயசுப்பெண்கள் போய்க் கொண்டிருந்தால் அவர்களையே வைத்தகண் வாங்காமல் பார்க்கும்படி ஆகிவிட்டது. மனசால் அவைகளை நொறுக்கிவிடப் பார்த்தும் முடியவில்லை. மீசை அரும்புகட்ட ஆரம்பித்ததிலிருந்துதான் இந்தச் சிக்கல். அடிக்கடி அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் மனசை நெருடுகிறது. வியர்க்கிறது - நெஞ்சு பதைக்கிறது. ஏதோ அவர்களிடத்திலிருக்கிற ஒரு கவர்ச்சியைக் கண்டு மனசு அலைபாய்கிறது. அவர்கள் தனக்கு வேண்டும்போல - அந்தக் கவர்ச்சியும் அவர்களிடத்திலிருக்கிற நுண்மையும், அழகும், வனப்பும் தனக்கு வேண்டும்போல மனசு துடியாய்த் துடிக்கிறது.

எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தனதாக்கிக்கொள்ள வேண்டுமென்ற துடிப்பும், தகிப்பும் நெஞ்சில் எழுந்தபோது, தான் ஒரு காலத்தில் பெண்களை வெறுத்தோமே எத்தனை முட்டாள்தனமென்று நொந்து கொள்ளும்படியாயிற்று. பெண் என்பவள் ஆணுக்கு எத்தனை அவசியத்தையும் ஆனந்தத்தையும் தந்து விடுகிறாளென்று இப்போது மனசு நினைத்துக்கொள்கிறது. அது இப்போது இவனது வயசு கூடிக்கூடி இருபது, இருபத்திரெண்டென்று ஆகிவிட்டிருக்கிற இந்தப் பருவத்தில் பெண்ணே தன் மனசெங்கணும் எத்தனை கெட்டியாய் வியாபித்துக் கொண்டிருக்கிறாளென்று ஆச்சரியப்பட்டுப் போனான்.

ஒரு பெண்ணை அடைய மற்றவர்கள் மாதிரி நாகரிகத்தையும் தன் தேவைகளையும் அதிகரித்துக் கொள்ளவும் வேண்டுமோவென்று சிந்தித்தான். அவளை அடைய மற்ற ஆண்கள் செய்யும் தந்திர யுக்திகளையெல்லாம் செய்ய முயற்சித்தான். மற்றவர்களைப் போல தானும் கொஞ்சம் வளர்ந்துவரும் நாகரிகத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். உடுத்துவதிலிருந்து கைக்குக் கடிகாரம், விரல்களுக்கு மோதிரமென்று வித்தியாசமானான். இவன் தேவைகளாய் நினைக்காததெதுவும் தேவைகளாய் ஆகிக் கொண்டிருந்தன.

ஒரு பெண் இவனுக்குச் சொந்தமாகக் கிடைத்தபோது ரொம்ப மகிழ்ச்சியாயிருந்தது. அவளைச் சுகிக்கும் போதிருந்த இன்பத்தைக் காட்டிலும் சுகிக்காதிருந்த நேரங்களில் எத்தனை எத்தனையோ இன்பங்களை அள்ளி அள்ளித் தந்து கொண்டிருக்கிறாள் என்று இவனுக்குப் பட்டது.

ஒரு பெண்ணுடன் இப்படியே இந்தப் பருவத்துடனேயே இருக்கிற இந்தத் தேவைகளுடனேயே வாழ்ந்தால் போதுமென்றும் உலகத்தில் வேறெதுவும் இனி தனக்குத் தேவையில்லை என்பதாகவும் நினைத்துக் கொண்டபோது சந்தோஷமாயிருக்கிற மாதிரி இருந்தது.

மனிதர்கள் வைத்துக் கொண்டிருக்கிற சைக்கிள், மோட்டார், கார், ரேடியோ, டி.வி மற்றும் பற்பலவான நூதனப்பொருள்கள் எதுவும் தனக்குத் தேவையே இல்லை என்பதை விடாப்பிடியாக நினைத்துக் கொண்டவன் அதெல்லாம் சுத்த ஹம்பக் என்பதையும் நினைத்துக் கொண்டான். இந்தப் பொருள்களுக்காகவெல்லாம் பணத்தை விரயம் பண்ணுவதென்பது சுத்த பைத்தியக்காரத்தரமானதும் முட்டாள்தனமானதென்றும் நினைத்துக் கொண்டான்.

இந்த மாதிரியான இவனின் நினைப்புகளையெல்லாம் தகர்த்தெறிந்துவிடும்படியான காலகட்டங்களும் சூழல்களும் இவனை விடாப்பிடியாய் தாக்கிக் கொண்டே இருந்தன. நெஞ்சில் உண்டாகியிருந்த வன்மமான நினைப்புகளெல்லாம் தவிடு பொடியாகின. இப்போது இவன் ஒரு குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை இவன் மனைவி கண்டுகொண்டிருக்கிறாள். அடுத்த வீட்டுக் குழந்தை, பக்கத்து வீட்டுக் குழந்தை, உறவுக்காரக் குழந்தையென்று இவன் ஓரொரு குழந்தையையும் தூக்கி மகிழும்போதுதான் தனக்கும் சொந்தமாக ஒரு குழந்தை இருந்தால் எத்தனை சந்தோஷமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். அந்த நினைப்பு வீண் போகவில்லை. அவளைச் சுகித்ததால் தரித்த குழந்தை பிறந்து வளர்ந்து மழலை மொழியில் இவனை 'ப்பா' என்று கூப்பிட்டபோது அந்தக் கொஞ்சு மொழியிலும் ரிதத்திலுமாய் மயங்கிப் போய் அப்படியே உச்சிமோந்து அக்குழந்தையை அணைத்துக் கொண்டு 'அப்பா' என்ற சொல்லில் ஆனந்தத்தைக் கண்டான். ஆனாலும் தாத்தாவாகிவிடக் கூடாதென்ற நினைப்பையும் கூட இப்போதும் நினைத்துக்கொண்டான்.

இவன் வளர வளர இவனது தேவைகளும் வளர்ந்துகொண்டுதான் இருந்தன. இவன் எத்தனைதான் கட்டுப்படுத்தியும் தேவையென்பது தன்னகத்தே அடக்க முடியாததொன்று மாதிரி பற்பல உருவங்கள்கொண்டு வளர்ந்துகொண்டே இருந்தது. இவனுடைய தேவைகள் என்றில்லாமல் மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மாவின் தேவைகளும் உறவினர்கள், நண்பர்கள் என்கிற பந்துக்களின் தேவைகளும்கூட தன்னுடைய தேவைகளெனவே ஆகிவிட்டன. இவன் அதற்காகவெல்லாம் சிந்தித்தான் - உழைத்தான். இவன் வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திருந்த எல்லாமும் இவனை வந்து சேர்ந்தன.

முதன்முதலாகத் தனக்கென்று ஒரு சைக்கிள் வாங்கியபோதுதான் அது அனவாசியமில்லை என்று இவனுக்குத் தோன்றியது. ஒருநாள் என்றில்லை; ஒரு மாதம் ஒரு வருடமென்று சைக்கிள்பற்றியே நினைத்திருந்தான். அதன் போஷாக்குக்காகவும் அதன் அழகுக்காகவும் நிறைய நேரங்களையும் பொருள்களையும் செலவுசெய்தான். தான் வேலையற்று சும்மாயிருக்கிற நேரங்களிலெல்லாம் சைக்கிளைச் சீண்டிக் கொண்டிருப்பதென்பது இவனுக்கு ரொம்ப பிடித்தமான சங்கதியாகி விட்டது. 'சைக்கிள் மாமா' என்று கூப்பிடுகிற அளவுக்கு இவன் அந்த சைக்கிளுடன் ஒன்றியும் பந்தப்பட்டும் போனான்.

இப்போதெல்லாம் இவனுக்கு உலகத்தில் தோன்றியிருக்கிறதெதுவும் அனாவசியமில்லை என்று தோன்றிவிட்டது. உலகினில் எத்தனை எத்தனை இன்பங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பதை உணர்ந்தபோது விளையாட்டுத்தனமாகக்கூட தனக்கு இனி அது வேண்டாம் இது வேண்டாமென்று சிந்திப்பதைத் தவிர்த்திருந்தான். ரேடியோவும், டெலிவிஷனும் இன்ன பிற நூதனமான சாதனங்களும் இவனுக்கு அவசியமாகிவிட்டன. இன்னும் எத்தனை எத்தனை சாதனங்கள் உருவாகப் போகிறதோ? அவைகளெல்லாம் இவனுக்குத் தேவையாகப்படப் போகிறதோ?

இப்போது அப்பா எப்போதோ வாங்கித் தந்திருந்த அந்த ஆள் உயரக் கண்ணாடியில் தன்னை நிதானமாகப் பார்த்தான். பளபளவென்றிருந்த திரேகம் ஒடுங்கிப்போய் சுருங்கிப் போயிருந்தது. தனக்கு வயசாகிவிட்டது - தான் தாத்தாவாகப் போகிறோம் - எவ்வளவு சீக்கிரத்தில் காலங்கள் உருண்டோடிப் போய்விட்டன. தான் எப்படி சிந்தித்திருந்தவைகளிலிருந்தெல்லாம் மாறினோம் என்பதெல்லாம் கற்பனையாய்ப் பட்டன. சின்ன வயசையும், அப்போதெல்லாம் நினைத்துக் கொண்டிருந்ததையும் நினைக்க நினைக்க வருத்தமாகவும் சந்தோஷமாகவும்கூட இருந்தது. இப்போது ஆகப்போகிற தாத்தாவை வெறுக்கச் சுத்தமாய் மனசு இல்லை. எப்போது தாத்தாவாகப் போகிறோமென்று மனசு அடித்துக் கொள்கிறது. அட மகனே! உன் பிள்ளை எப்போது என்னைத் தாத்தாவென்று கூப்பிடப் போகிறான்!

"அப்பா.." உச்சிமயிரைக் குலுக்குகின்ற மாதிரிக் குரல். நினைப்புகளை உதறிவிட்டு மகனைப் பார்க்கிறார்(ன்).

அவர் உயரத்துக்கு மகன்.

"அம்மா இந்த விதைகளை உங்ககிட்டே கொடுத்து கொல்லையிலே ஊன்றச் சொன்னாங்கப்பா.. ஒங்க கையால விதை போட்டா நன்றாக முளைக்குமாம்" இவரிடம் விதைகளைக் கொடுத்துவிட்டு மாயமாய் மறைந்து போனான்.

கையில் விதைகள் - அதுவே விருட்சங்கள் - அவைகள் விருட்சங்களான பின்னும் மண்ணுக்குள் மடியப்போகிற வித்தைகள்.

இந்த விதை முளைத்த பிற்பாடு அது செடியாக இருக்கிற பருவத்தில் அதற்குத் தேவைப்படப் போவது காற்றும் சிறிது நீரும். ஆனால் விருட்சங்களான பின் நிறைய நீர் - அண்டங் குலுங்குகின்ற மாதிரியான மழை - வெள்ளம். இன்னும் எத்தனை எத்தனை!

நிதானமாகக் கையிலிருந்த விதைகளை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் போனார்.

சி.எம். முத்து

© TamilOnline.com