சி.எம். முத்து
"அறுபது ஆண்டுக்கால இலக்கிய வரலாற்றில் திராவிடப் பாரம்பரியத்தில் எழுதவந்த அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி உட்படவும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் கலையைப் பிரச்சாரப்படுத்தி விட்டனர். அதனால்தான் உலகத்தரத்தை எட்டமுடியாமல் போய்விட்டது. இது தமிழ்மொழிக்கு நேர்ந்த ஆபத்து. தமிழ்நாட்டு சி.எம். முத்துவால் மட்டுமே அந்த வெற்றிப்பாதையை அடைய முடிந்தது. சாதிபற்றிய விஷயங்களை கலாபூர்வமாகச் சொல்லமுடியும் என்று சாதித்துக்காட்டிய அவரை தமிழகம் கவனிக்காதது அவருக்கு நேர்ந்த துரதிஷ்டமல்ல; தமிழின் துரதிஷ்டம்" என்று விமர்சன பிதாமகர் வெங்கட் சாமிநாதனால் மதிப்பிடப்பட்டவர் சி.எம். முத்து. இவர், பிப்ரவரி 10, 1950 அன்று தஞ்சாவூரின் இடையிருப்பு கிராமத்தில், சந்திரஹாசன், கமலாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவருக்குப் பள்ளியில் படிக்கும்போதே எழுத்தார்வம் வந்துவிடவே பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு விவசாயத்தை மேற்கொண்டார். எஞ்சிய நேரத்தில் சிறுகதைகளை எழுதத் துவங்கினார்.

முதல் சிறுகதை எம்.எஸ். மணியன் நடத்திவந்த 'கற்பூரம்' இதழில் வெளியானது. தொடர்ந்து தீபம், தென்றல், கண்ணதாசன் போன்ற இதழ்களில் எழுதினார். தஞ்சை பிரகாஷின் நட்பினால் இவரது பார்வை விசாலமானது. சமூகத்தைக் குறித்தும், அதன் பிரச்சனைகள் குறித்தும் தீவிரமாக எழுத ஆரம்பித்தார். பத்திரிகையின் விற்பனைப் பிரதிநிதி, தலைமை அஞ்சல் அலுவலர் போன்ற பணிகளில் அவ்வப்போது ஈடுபட்டாலும் முழுநேர எழுத்தாளராகவே இருப்பதை விரும்பிய முத்து, அந்த வேலைகளில் நீடிக்கவில்லை. விவசாயத்திலும் எழுத்திலுமே முழுக்கவனத்தைச் செலுத்தினார். இலக்கியச் சிற்றிதழ்களிலும் கல்கி, விகடன் போன்ற இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகி வாசகர்களைக் கவர்ந்தன.

எழுபதுகளில் எழுத ஆரம்பித்த முத்து, கடந்த நாற்பது ஆண்டுகளில். பதினைந்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். 'நெஞ்சின் நடுவே', 'கறிச்சோறு', 'வேரடி மண்', 'இவர்களும் ஜட்கா வண்டியும்', 'ஐந்து பெண்மக்களும் அக்ரஹாரத்து வீடும்' போன்ற இவரது படைப்புகள் முக்கியமானவை. 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவை தொகுக்கப்பட்டு 'சி.எம். முத்து சிறுகதைகள்' என்ற பெயரில் நூலாக வெளியாகின. 'மரத்துண்டும் சில மனிதர்களும்', 'ஏழு முனிக்கும் இளைய முனி' போன்ற இவரது சிறுகதைகள் இலக்கியச்சிந்தனை பரிசு பெற்றவை. தனது படைப்புகளுக்காக 'கதா' விருதும் பெற்றிருக்கிறார் முத்து.

"தஞ்சாவூர் மாவட்டத்தை நான் எழுதியதைக் காட்டிலும் சி.எம். முத்து நிறையவே எழுதிவிட்டார்" என்று தி.ஜானகிராமனால் புகழப்பட்ட முத்து, தஞ்சை மண்ணின் மைந்தர்களான எம்.வி.வி., கரிச்சான்குஞ்சு, ந. பிச்சமூர்த்தி, தஞ்சை பிரகாஷ் போன்றோரின் நண்பரும்கூட. ஒருகாலத்தில் ஈரமும் வளமும் மிக்கதாக இருந்த தஞ்சை மண்ணின் இன்றைய அவலநிலையை, விவசாயிகளின் அவல வாழ்வைத் தனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். மனிதர்களையும் சம்பவங்களையும் மட்டும் கதையாக்காமல், வண்டி மாடுகள், கண்மாய்க் கரைகள், காய்ந்த வயல்கள், மழை பொய்த்ததால் வாழ்க்கை பொய்த்துக் கடனாளியான விவசாயக் குடும்பங்கள், ஊர் ஊராகச் சென்று கிடை போடும் கீதாரிக் குடும்பங்கள், பச்சைப் பசேலென்று உழைப்பின் விளைவை பசுமையாய்க் சாட்சிப்படுத்தும் வயல்கள், ஜில்ஜில் என்று ஒலிக்க ஓடும் வில்வண்டிகள், இரவில் இடைவிடாமல் ஒலிக்கும் சில்வண்டுகளின் இரைச்சல், குயில்களின் கூவல், பசிக்குக் கரையும் காகங்கள் என்று எல்லாவற்றையும் கலந்து எழுதிப் படைப்புக்கு உயிர் கொடுக்கிறார். பாசாங்கற்ற, தஞ்சை வட்டாரத்துக்கென்றே உள்ள வழக்கு நடையில், எளிய மொழியில் எழுதுவது முத்துவின் பலம். படிப்பவரைத் தன்வயப்படுத்திக்கொள்ளும் எழுத்தாற்றல் மிக்கவர், நாட்டுப்புறப் பாடல்களின்மீது ஆர்வம் கொண்டவர். தஞ்சை சுற்று வட்டாரத்தில் நடக்கும் பல நிகழ்வுகளில் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளை மேடையேற்றியிருக்கிறார். கூத்துக்கலை வாத்தியார் பற்றியும், அவர்களது வாழ்க்கை அவலங்கள் பற்றியும் இவர் எழுதியிருக்கும் 'நாடக வாத்தியார் தங்கசாமி' என்ற சிறுகதை குறிப்பிடத்தக்கது.

'இவர் அதிகம் சாதியைப் பற்றி எழுதுகிறார்' என்ற சச்சரவு ஏற்பட்டபோது, "சாதி எங்கே ஒழிந்திருக்கிறது, நாளுக்கு நாள் அது வளர்ந்துகொண்டுதானே இருக்கிறது? என் எழுத்து சாதியைப் பற்றியதல்ல, சாதிக்குள் இருக்கும் சாதியைப் பற்றியது" என்று இவர் சொன்னது சிந்திக்கத்தக்கது. முத்து தற்போது 'மிராசு' என்ற நாவலை எழுதி வருகிறார். அந்நாவல் பற்றி "என் வாழ்க்கையின் மொத்தச் செய்தியும் அதில் இருக்கும்" என்கிறார். தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல், தன்முனைப்பை வெளிக்காட்டாமல், எழுத்தையே தவமாய், சுவாசமாய்க் கொண்டு, நாற்பது வருடங்களாக எழுதிக்கொண்டு வருகிறார் எளிய கிராமத்து விவசாயியான சி.எம். முத்து.

அரவிந்த்

© TamilOnline.com