சென்னையில் காளிக்கு ஒரு கோயில்
சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுடன் போட்டியிட்ட தில்லைக் காளியைப் பற்றி அனைவரும் அறிவர். காளி என்றாலே கடைவாயில் கோரைப் பற்களுடனும், பிதுங்கி நிற்கும் விழிகளுடனும், ஆயுதங்கள் ஏந்திய கைகளுடனும் காணப்படுபவள் என்பதுதான் பொதுவாக எல்லோரும் நினைக்கும் உருவம். ஆனால் சாந்தமே வடிவான காளி அழகிய தோற்றத்தில் அமர்ந்திருக்கும் கோயில் ஒன்றுண்டு. அதுதான் காளிகாம்பாள் கோயில்.

மராத்திய மன்னர் சிவாஜி சென்னைக்கு வந்து முகாமிட்டு, தம்புச் செட்டி தெருவில் உள்ள இந்தக் காளிகாம்பாளைத் தரிசித்துச் சென்ன்ற பிறகுதான் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியாக முடிசூட்டிக்கொண்டார் என்று நம்பப்படுகிறது. மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிராட்வேயில் சுதேசமித்திரன் நாளேட்டில் ஆசிரியராயிருந்தபோது தினமும் அருகிலிருந்த இந்தக் காளி காம்பாள் கோயிலுக்கு வந்து

யாதுமாகி நின்றாய் - காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் - நின்றன்
செயல்க ளன்றி யில்லை
என்று பாடித் துதித்திருக்கிறார்.

சென்னை நகருக்குப் பெயர் தந்த சென்னம்மன்

முதலில் சென்னையில் கடற்கரைக்கருகில் இக்கோயில் கட்டப்பட்டிருந்தது என்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இப்போதுள்ள தம்புச்செட்டி தெருவுக்கு இடம் பெயர்ந்தது என்றும் கூறப்படுகிறது. காளியின் பெயரால் கல்கத்தா என்றும், மும்பாதேவியின் பெயரால் மும்பை என்றும் அழைக்கப்பட்டது போல, செந்தூரம் பூசி வழிபட்ட காளியின் பெயர் முதலில் சென்னம்மன், பின்னர் சென்னையம்மனென்று மருவி அதுவும் மாறி பிற்காலத்தில் சென்னை ஆயிற்று என்பது வித்வான் பண்டித வி. நடேசனார் அவர்களின் ஆய்வுக் குறிப்பிலிருந்து அறியப் படுகிறது. "சென்ன" என்ற சொல்லுக்கு முருகு, அழகு, இளமை, வலிமை, கம்பீரம் எனப் பல பொருளுண்டு. சென்னையம்மனை "சென்னம்மன்" என்றும் சென்னை நகரை "சென்னபுரி" என்றும் தெலுங்கரும், கன்னடரும் தம் மொழிகளில் அழைக்கின்றனர்.

கோயில் அமைப்பு

கோயில் நுழைவாயிலில் கொடிக் கம்பத்தின் கிழக்கே காளிகாம்பாள் மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் கருவறை உள்ளது. நான்கு கரங்களில் முறையே பாசம், அங்குசம், நீலோத்பலமலர் இவற்றுடன் அருள்பாலிக்கும் விதமாக அபய ஹஸ்தத்துடன் காட்சி தருகின்றாள். வலது பாதத்தைத் தொங்கவிட்டு இடது பாதத்தை மடித்து அர்த்த பத்மாசனத்தில் அமைதி யான அழகே வடிவெடுத்தாற்போல் வீற்றிருக்கின்றாள். சூரியன், சந்திரன் அக்னி என்று முக்கண் கொண்ட சாந்தமே உருவாய்த் தோற்றமளிக்கிறாள். அவளின் காலடியில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு பீடம் உள்ளது. ஆதிசங்கரர் காஞ்சி, குற்றாலம், ஆவுடையார் கோயில் போன்று சக்தி வீற்றிருக்கும் தலங்களில் அமைத்துள்ள ஸ்ரீசக்கரம் போன்று இங்கும் அமைத்திருப்பது இக்கோயிலின் பெருமைக்கு எடுத்துக்காட்டு. காளியின் திருவடியில் பிருங்கிமுனிவரின் கொள்ளுப் பேரனான ஸ்ரீவிராட் விஸ்வபரப் பிரம்மத்தின் மூன்று தலைகள் (திரிசிரம்) செதுக்கப்பட்டுள்ளன. காளிகாம்பாள் சந்நிதி யின் முன்னால் 12 கால் மண்டபம் உள்ளது.

உட்பிரகாரத்தில் மேற்கே உற்சவர் மண்டபத்தில் பெரியநாயகி என்ற பெயரில் உற்சவர் காளிகாம்பாள் லக்ஷ்மியும் சரஸ்வதியும் வலப்பக்கமும் இடப்பக்கமும் நிற்க செல்வமும் கல்வியும் ஒருங்கே அளிப்பவள் என்பதற்கு விளக்கமாகப் பொலிவுடன் காட்சி தருகிறாள். பெரிய நாயகியாக இந்த உற்சவர் வீதி உலா வருவது வழக்கம். பாலநாயகியாய் (சிறிய நாயகி) லக்ஷ்மி சரஸ்வதியுடன் மற்றொரு சிலை கோயில் உள்சுற்றுக்குள்ளேயே உலா வருவதும் இங்கு ஒரு சிறப்பு.

மூலஸ்தானம்

இங்கு வீற்றிருக்கும் இறைவனுக்கு கமடேச்வரர் என்று பெயர். இப்பெயர் வந்த வரலாறு ஒரு புராணச் செய்தியை உள்ளடக்கியது.

கைலையில் உமா, மஹேச்வரன் இருவரில் அழகில் சிறந்தவர் யார் என்று சிவ பெருமான் தெரிந்துகொள்ள விரும்பினார். இக்கேள்விக்கு எந்த விடையை அளித்தாலும் அது இருவரில் ஒருவரை வருத்தப் படுத்தும் என்பதால் கேள்விக்கு விடையளிக்க ஒருவரும் முன்வரவில்லை. சிருஷ்டி, பஞ்சபூதங்களின் படைப்பு, பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், இந்திரன், சூரியன் ஆகிய அனைத்துப் படைப்புக்களுக்கும் காரணமாகி ஸ்வயம்பிரகாசமாய் விளங்கும் ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்பிரம்மத்திடம் தம் கேள்விக்கு விடை கேட்டார் சிவ பெருமான்.

அதற்கு அவர் தான் ஏற்படுத்தியுள்ள ஒரு தாமரைத் தடாகத்திற்குச் சென்று அதன் எழிலைக் கண்டு வருமாறும் பின்னர் விடையளிப்பதாகவும் கூறினார். பெருமானும் இறைவியுடன் சென்று பார்த்தபோது அந்தச் சூழல் தவம் மேற்கொள்ளத் தகுந்த இடமாகத் தோன்றவே சிவபெருமான் அங்கமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். இறைவி எழில் மிக்க அந்தச் சூழலால் கவரப்பட்டு அங்குள்ள மலர்களாலும் மற்றும் பட்டுத் துகிலாலும் தன்னை மேலும் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டாள்.

இருவரும் புறப்பட்டு வரும் வழியில் பரப்ரம்மத்தால் சிருஷ்டிக்கப்பட்ட பெரிய தொரு நிலைக்கண்ணாடியில் அவர்கள் தங்கள் உருவத்தைப் பார்க்க நேரிட்டது. அதில் பாம்பணி, சுடலைப் பொடி, வெள்ளெருக்கு மாலை, புலித்தோல் என்றிந்த விதமான தன் தோற்றத்தைக் கண்டவுடன் பரப்ரும்மம் எவ்வளவு அழகாகத் தம்மை தர்மசங்கடத்திலிருந்து விடுவித்துக் கொண்டார் என்பது புரிந்தது. பரப்ரம்மம் நிலையில்லாத அழகின்மேல் ஆசை கொண்ட மனம் அருவுருவமாக 'லிங்க' வடிவில் அமைவதாக என்று கூறினார். கமம் என்றால் நிறைவு (தொல்காப்பியம் கூறும் பொருள்). ஆன்மாக்களுடன் அருவுருவாய் லிங்க வடிவில் கலந்திருக்கும் நிலை என்ற பொருளில் கமடேச்வரர் எனப் பெற்றார். எனவேதான் உமையம்மையின் அழகை வியந்து ஆதிசங்கரரும் அம்பிகையின் அழகு வெள்ளம் என்ற பொருளில் 'சௌந்தர்ய லஹரி' பாடியுள்ளார்.

இக்கோயிலின் தல விருட்சம் மாமரம். தீர்த்தம் கடல் நீர்.

விழாக்கள்

வைகாசியில் பிரம்மோத்சவம் தொடங்கி வைகாசி விசாகத்தன்று 10-வது நாள் வீதி உலாவுடன் முடியும். முதல் நாள் காளி காம்பாள் வீதி உலாவும் அடுத்து காமதேனு, பூதகி, சிம்மம், யானை, தேரோட்டம், குதிரை, கிண்ணித்தேர் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாஹனத்தில் காளி காம்பாள் வீதியுலா நடைபெறும். ஆண்டு முழுவதும் விழாக் கோலம் இருந்து கொண்டேயிருக்கும்.

சிறப்பான சில செய்திகள்

காளிகாம்பாள் சந்நிதியின் எதிரேயுள்ள பன்னிருகால் மண்டபத்தின் மேற்கூரையில் கடற்கரைக் காட்சியாகச் சூரிய சந்திரரைப் பாம்பு பற்றுவது போல - கிரஹணக் காட்சி - ஒவியம் தீட்டப்பட்டு கடற்கரைப் பட்டினம் என்பதை அறிவுறுத்துகிறது. வீதிவுலா வரும் அம்மனுக்குப் புறப்படுமுன் கண்ணாடி சேவை என்று ஒன்றுண்டு. அங்குள்ள தெற்குப் புறச் சுவற்றில் சிவாஜி மன்னரும் பாரதி மற்றும் ஆதிசங்கரர் ஆகியோர் காளிகாம்பாளை வழிபடுவது போன்ற காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.

இங்குள்ள கல்வெட்டு ஒன்றினால் அறியப்படும் செய்தி ஒன்று சுவையானது. வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் முருகப்பெருமான் சந்நிதியில் 'அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி' என்பவர் பாடிய (1952) பாடிய 'உள்ளம் உருகுதைய்யா' என்ற பாடல் திரைப்படப் பாடகர் டி.எம். சௌந்திர ராஜன் அவர்களால் பிரபலமானது.

இக்கோயிலின் பஞ்சலோக விக்ரஹங்கள் மிகவும் பிரசித்தமானவை. தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் பதிவு செய்யப்பட்ட 31 விக்ரஹங்களில் பிருங்கி முனிவரின் சிலை இந்தியாவிலேயே வேறு எங்கும் காணக் கிடைத்தற்கரிய அபூர்வமான சிலை என்கின்றனர்.

அதிசய கிண்ணித்தேர்

மரத்தால் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்த் திருவிழாவைத்தான் எல்லோரும் பார்த்திருப்பார்கள். வெண்கலக் கிண்ணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரிலே இங்கு வீதிஉலா வருகிறாள் காளிகாம்பாள். சென்னையில் ஒரு காலத்தில் கவர்னரா யிருந்த சாண்டர்ஸ் (Sanders) என்பவரும் இக்கோயிலுக்கு விஜயம் செய்து 1790-ல் அன்பர்களோடு அன்பராய்ச் சேர்ந்து கிண்ணித்தேரின் வடத்தைப் பிடித்து இழுத்திருக்கிறார்!

ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கும் மேலாக விச்வகருமர்கள் தங்கள் வழிபடு தெய்வமான காளிகாம்பாள் கோயிலை நிர்வாகம் செய்து பூசித்து வழிபட்டு வருகின்றனர். கடற்கரையில் வாழ் பட்டினவர் எனப்படும் கடலை நம்பிப் பிழைப்பவர்க்குத் தேவை யான படகுகள் வலைகள் போன்றவற்றைத் தயாரிக்கும் தொழில் செய்பவர்களே இந்த விசுவகருமர்கள் எனப்படுவோர். இவர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நல்லதும் அல்லாததுமான எல்லாக் காரியங்களின் போதும் காளிகாம்பாள் சம்பாவனை என்று காணிக்கையினை இக்கோயிலுக்கு வழங்கும் வழக்கம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பது அவர்களது பக்தியின் ஆழத்திற்கு அடையாளம் எனலாம்.

முனைவர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com