வசந்தி என்கிற செல்லம்மா
எப்போதும் போல்தான் விடிந்தது. எந்த வித்தியாசமும் இல்லை. அதை அவன் எதிர்பார்க்கவும் இல்லை. ஏமாறத் தயாராகவும் இல்லை. எல்லாம் முடித்துவிட்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். வசந்தி வந்து காப்பியை வைத்தாள். மனைவிக்கு கணவனிடம் காலையில் இருக்கவேண்டிய காதல் அந்த காப்பியில் இல்லை. இவன் காப்பியை மட்டுமே கவனித்தான். பேப்பரில் ஒரு சாதிக் கலவரத்தைப் பற்றிய செய்தி. அலுத்துக்கொண்டே ஒரு கவிதை சொன்னான். "வானம் எல்லோருக்கும் மேல்தான். எனக்கும் வயிறு நெஞ்சுக்குக் கீழ்தான்". கவிதை பிறந்த சந்தோஷத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தான். அந்த நிமிர்தல் ஒரு கவிஞன் மட்டுமே அனுபவிக்கும் உணர்வு. அவன் அனுபவித்தான்.

அவளும் கல்யாணமான புதிதில் ரசித்தாள். போகப்போக கொஞ்சம் வசதிவேண்டும் என்கிற யோசனையும் ஒரு பெண் குழந்தையின் தாய் என்கிற நினைப்பும் அவளது கவிதை ரசனையை விழுங்கிவிட்டது. அனு வளர வளர அவள் பயமும் கவிதையிடமிருந்து தூரமும் வளர்ந்து கொண்டே வந்தது. அதனால் வாசுவும் தூரப் போகிறான் என்பதை அறிந்திருந்தாள். அவனை எப்படியும் அருகழைத்து விடலாம் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தாள். வேலைமுடிந்து இரவு வீட்டில் எழுதிக் கொண்டிருந்தான். வசந்தி அடுக்களையில் சமையல் செய்தபடியே பேச்சைத் தொடங்கினாள்.

"இந்த மாசம் சொக்கலிங்கம் சித்தப்பா வீட்டு கல்யாணம் இருக்கு. ஞாபகமிருக்குல்ல. நீங்க மாப்ளங்கற முறைல ஏதாவது நல்லா செய்யணும். ஆனா இந்த சம்பளத்துல எங்கங்க? எட்டணாவக்கூட எண்ணிச் செலவு பண்ண வேண்டியிருக்கு. நீங்க வேற வேலைய தேடுங்கன்னாலும் கேக்க மாட்டங்கிறீங்க."

இவன் நிமிர்ந்தான். சொக்கலிங்கமாமா வீட்டுக் கல்யாணம் இல்லன்னாகூட இவ இந்த பாயிண்ட்டுக்கு வருவான்னு இவனுக்குத் தெரியும். வாசுவுக்கு அந்த வேலைய விடப்பிடிக்கல. இப்பதான் இவனுக்கு கவிதை எழுத நேரம் கிடைக்குது. வேலை மாறுனா கிடைக்காதுங்குறது அவன் எண்ணம். "எமக்குத் தொழில் கவிதை" என்பதுபோல் வசந்தியை கவனித்தவன் வசந்தியின் வசவுகளைப் புறந்தள்ளி எழுதிக் கொண்டிருந்தான். நாளைக்கு அனு பெரியவளா ஆகப்போறா. அவளுக்கு நாம சேத்துவைக்க வேண்டாமா? இந்த வேலைல இருந்தா எப்படிங்க செய்ய முடியும்? வாசு அனுவைப் பார்த்தான். அவள் எல்.கே.ஜி. புத்தகத்தில் யானைக்கு கலர் அடித்துக் கொண்டிருந்தாள்.

சனிக்கிழமை வந்தால் வாசு கவிதைகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் போவான். எல்லா பதிப்பகத்திலும் வேறு வேறு வார்த்தைகளில் ஒரே பதிலைச் சொல்வார்கள். அப்போதெல்லாம் தமிழிலுள்ள ஒரு பொருள்தரும் பலவிதமான சொற்களை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொள்வான்.

அப்படியொரு நாள் பெருமைபட்ட பிறகு ஒரு பூங்காவிற்கு சென்றான் வாசு. அந்தச்சூழல் அவனுக்கு இதமாய் இருந்தது. ஏதோ தோன்றியவனாக பேப்பர் எடுத்து எழுத ஆரப்பித்தான். அவன் எழுதிக் கொண்டிருக்கும்போது அருகில் ஒரு நரைவிழுந்த தம்பதியர் அமர்ந்தனர்.

"தம்பி,என்னய்யா எழுதுற? நாங்க வாசிக்கலாமா?"

முதன்முதலாக தானாக முன்வந்து தன் கவிதைகளைக் கேட்டது வாசுவுக்கு வித்தியாசமாக இருந்தது. கொடுத்தான். இருவரும் வாசித்தனர்.

என் மனம்
தந்தியடிக்கும் கடிதங்களுக்கு
எப்போது முகவரி கிடைக்கும்?

என் மனம்
எடுக்கும் நிழற்படங்களில்
எப்போது நிஜமிருக்கும்?"


"நீங்க கவிஞராய்யா?" என்றார் பெரியவர். நீ கவிதை எழுதுவியான்னு கேட்காம நீ கவிஞரான்னு கேட்டது வாசுவுக்கு மகிழ்ச்சி தந்தது. அவன் "ஆமா. ஆனா அது இந்தப் பிரபஞ்சத்தில் எனக்குமட்டுமே தெரியும்" என்று சிரித்தான். இப்போ எங்களுக்கும் தெரிஞ்சிருச்சே என்று சொல்லி அவர்களும் சிரித்தனர்.

எப்போதுமே புலம்புகிற மனைவியை நினைக்கும்போது அவர்களிடம் பேசுவது பிடித்திருந்தது. பரஸ்பர அறிமுகம் செய்துகொண்டனர்.

"நான் மிலிட்டரில இருந்தப்போ கண்ணதாசன்தாம்ப்பா எனக்குப் பேச்சுத்துணை" பெரியவர் சொன்னார். தமிழ்பற்றியும் கவிதைபற்றியும் பேசுவதற்கு ஒரு ஆள் கிடைத்துவிட்டது என்று வாசு மனதுக்குள் மகிழ்ந்துகொண்டான். நிறையப் பேசிவிட்டு கிளம்பும்போது அடுத்தவாரம் பார்ப்பதாக அவர்களிடம் சொன்னான். "முடிஞ்சா அடுத்த வாரம் பேத்தியயும் கூட்டிட்டுவா" என்று அவன் அம்மாவயதுடைய அந்தம்மா சொன்னார்கள்.

அனு ஹாலில் தூங்கிக்கொண்டிருந்தாள். அதை ரசித்துவிட்டு மெல்லிய குரலில் அவர்களைப் பற்றியும் அவர்கள் பழகியவிதம் பற்றியும் வாசு வசந்தியிடம் சொன்னான். அவள் அமைதியாய்க் கேட்டுவிட்டு கடைசியில், "யாரோ சொல்றத கேக்குறீங்க நான் சொல்றத கேக்கவே மாட்டீங்களா? உங்க கவித கிவிதெல்லாம் தூக்கி எறிங்க. அத எழுதறதுக்கு வசதியானவங்க இருக்காங்க. உங்களுக்கு வேணாம். முதல்ல சம்பாதிக்கலாம் அப்புறமா சாதிச்சுக்கலாம்" என்று சொல்லி எழுந்து அடுக்களைக்குப் போய்விட்டாள். அனு புரண்டு படுத்தாள்.

காசாக மாறாத எந்தத் திறமைக்கும் மதிப்பில்லை என்பதை எண்ணிக்கொண்டே வாசு குளிக்க பாத்ரூம் போனான். நல்லியைத் திறந்துவிட்டு அழ அரம்பித்துவிட்டான்.

அடுத்தவாரம் மத்தியானம் பார்க் போகும்போது அவர்களின் பேத்தியையும் கூட்டிச்சென்றான். "நாம உனக்கு ஒரு ஆச்சி தாத்தாவ பாக்கப்போறோம். சரியா? அவங்ககிட்ட நல்லா பேசணும்" என்று அனுவிடம் சொல்லிக் கூட்டிப்போனான். பார்க்கில் தாத்தா மட்டும் வெறுமையாக அமர்ந்திருந்தார். தூரத்திலிருந்தே இவன் பார்த்துப் புரிந்துகொண்டான்.

அவரருகில் போனதும் "வாய்யா. இதா பொண்ணா?" என்று அவன் காலைப்பிடித்திருந்த அனுவைப் பார்த்துக் கேட்டார். "அவதான் பாக்கணும்னு ஆசப்பட்டா. ஆனா போய்ச் சேந்துட்டா. வாசு சொல்லி அழுதறுதுக்கு கூட ஆளில்லாம இருக்கன்யா. எல்லாவனும் வந்து அவள பாத்துட்டு போயிட்டான். ஆனா இவளுமே என்ட்ட சொல்லாம என்னக் கூப்பிடாம போயிட்டாளே" என்று கண் கலங்கினார். வாசுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"என்ன அவசரம்?இன்னும் இவ சடங்கு கல்யாணம்லாம் பாக்க வேண்டாமா? மெதுவா போலாம்."

அனு மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தாள். இருவரும் சிரித்தனர்.

"மரணம் அப்படிதாம்ப்பா. சொல்லாமதான் வரும் எல்லாருக்கும். உங்களுக்கு தெரியாததா? நீங்க ஆர்மில எவ்ளோ பாத்திருப்பீங்க.

"எந்த சுயசரிதையும்
சொந்தக்காரனால் முடிவதில்லை
கோட்சே சுட்டதை
காந்தி சொல்லவில்லை."

என்று முடித்தான்.

வாசு அவரை வீட்டிற்கு கூட்டிப்போனான். அனு கத்திக்கொண்டே வசந்தியிடம் ஓடிப்போய் "அம்ம்மா, நம்ம வீட்டுக்கு ஒரு தாத்தா வர்றாங்க" என்றாள். வசந்தியிடம் அவரை அறிமுகப்படுத்தினான். தனியாய்ப் போய் அவளிடம் அந்த அம்மா இறந்த விஷயத்தைச் சொன்னான். "அவர்ட்ட ஆறுதலா பேசிட்டு இரு. நான் சாப்பாட்டுக்கு சாமான் வாங்கிட்டு வரேன்" என்று சொல்லிக் கிளம்பினான். அவர் அனுவிடம் எப்படி கலரடிக்க வேண்டும் என்று மும்முரமாக பாடம் கற்றுக்கொண்டிருந்தார். வசந்தி காப்பியை அவரிடம் நீட்டினாள்.

"வாசு..." என்று இழுத்தார். வெளியே போயிருக்கிறான் என்று தெரிந்துகொண்டார். "பொம்பளபுள்ள பிறக்குறது நீ புண்ணியம் பண்ணிருக்கணும்மா" என்று காப்பியை வாங்கிக்கொண்டார். "உங்களப் பாக்கும்போது எனக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கு. வாசுவும் அவன் கவிதைகளும் எனக்கு ஒரு அமைதி தருது. அது சரி நான் உன்ட்ட போய் சொல்றம் பாரு. நீ எல்லாத்தயும் படிச்சிருப்பியே" என்றார். வசந்தி நெளிந்தாள்.

"உனக்கு எதுமா பிடிக்கும்?"

எனக்கு டக்குனு ஞாபகத்துக்கு வரலைங்க. வசந்தி உதட்டில் மட்டும் சிரித்தாள். அவர் பல வரிகளைச் சொல்லி சிலாகித்துக் கொண்டிருந்தார். அவளுக்கு என்னவோபோல் இருந்தது. கடைசியாக அவளிடம் ஒரு கவிதை நீட்டினார். அதில்

"நீ தொலைகிறாய்
நான் தொலைக்கிறேன்

எந்த நொடியின் நுனியில்
இது ஆரம்பித்தது?
எந்த நெரிசலின் ஓரத்தில்
உன் விரல் என் விரலை விட்டது?"

என ஆரம்பித்திருந்தது. "இத அவ உன்ன நினைச்சி எழுதிருக்கக் கூடாதுன்னு நான் ஆசப்படுறேன்மா. ரெண்டுபேரும் இருக்கும்போதே தனியா இருக்கப் பழகக்கூடாதும்மா. கவிஞன் காசு சம்பாதிக்க ஆசப்பட்டா அந்தக் கவிதை அவன விட்டுப் போயிறும். ஆனா காசு அவனத் தேடிவரும். அது வாசுவத் தேடிவரும். கண்டிப்பா வரும். நீ கொஞ்சம் பொறுத்துப் போம்மா. எல்லா கவிஞர்களும் பாரதி கிடையாது. ஆனா அவங்க மனைவியெல்லாம் செல்லம்மாதான். அதான் நல்லது எல்லாருக்கும் தமிழுக்கும். பாத்துக்கம்மா அவனத் தவிக்க விட்டுறாத" என்று சொன்னபடி போய்விட்டார்.

வசந்தி அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். இரவு தூக்கம் வரவில்லை அவளுக்கு. எழுந்து அவர் கொடுத்த கவிதையை மறுபடி மறுபடி வாசித்தாள். அந்த பேப்பரை கண்களில் பொத்திக்கொண்டாள். சத்தமில்லாமல் அழுவதற்கு அவளுக்கு கஷ்டமாயிருந்தது. அதை மடித்துவைக்கும் போது சில எழுத்துக்கள் ஈரமாயிருந்தன.

காலை வழக்கம்போல் அவன் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். அவள் வழக்கம்போல் காப்பியைக் கொண்டுவந்தாள். ஆனால் அது வெறும் வழக்கமான காப்பியல்ல.

முத்துவேல் ராமன்,
திருநெல்வேலி, தமிழ்நாடு

© TamilOnline.com