உதவி
எனக்குமுன் சென்ற வண்டிகள் தேங்கத்தொடங்கின, 'போச்சுடா, மறுபடி டிராஃபிக் ஜாமா?' என்று ஒரு பேரலுப்பு. இதே சாலையில் இது ஐந்தாவது ஜாம். சாலை முழுதாய் ஒரு கிலோமீட்டர்கூட கிடையாது. இந்த மெட்ரோ ரயில் திட்டப்பணி வேறு சாலையில் பாதியை அபகரித்துக்கொண்டு தொல்லைபடுத்தியது! நம்ம ஊர் வாகனஓட்டிகள் முக்கால்வாசிப்பேருக்குச் சாலைவிதி என்று ஒரு வஸ்து இருக்கிறது என்பதும் தெரியாது, கிடைத்த சந்தில் எல்லாம் எப்படியோ புகுந்து புகுந்து போய்விட எண்ணி நுழைந்து மாட்டிக்கொண்டு டிராஃபிக்கை ஜாமாக்கி விடுவார்கள். ச்ச!

வண்டிகள் மெல்ல நகரத் தொடங்கின. பத்தடி முன்னால் நகர்ந்ததும் வண்டிகள் தேங்கியதன் காரணம் புரிந்தது. சாலையில் லேசான ரத்தக்கறை. கொஞ்சம் தள்ளி வயதானவர் ஒருவர் காலில் அடிபட்டு இரத்தம்கசிய வலியில் அரற்றிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அவரைவிட வயசான அவரது சைக்கிள் 'இனி பிழைக்க மாட்டேன்' என்று நசுங்கிக்கிடந்தது. இரண்டொருவர் அவரருகில் நின்று நடந்ததை அவரிடமே விசாரித்துக் கொண்டிருந்தனர். அவரின் அவஸ்தையைவிட அவர்களுக்கு நடந்த 'சம்பவம்' முக்கியமாய்ப்பட்டது போலும், ச்ச!

எவனோ ஒரு கார்க்காரனோ அல்லது பைக்காரனோ அவரை…

'பீம்ம் பீம்ம்', பின்னால் இருக்கும் வண்டிக்காரன், "யோவ், போய்யா... நடுரோட்டுல நின்னு பராக்கு பார்த்துட்டு இருக்க..." 'பீம்ம் பீம்ம்'.

அந்தப் பெரியவரின் அரற்றலைக் கேட்டும் அவரை அந்த கதை கேட்பான்களிடம் விட்டுச்செல்ல மனம் ஒப்பவில்லை எனக்கு. என் வண்டியை ஓரங்கட்டி, அவரருகில் சென்றேன்.

"என்னங்க ஆச்சு?"

"ஒரு பைக்காரன் இச்சுட்டு போய்ட்டான் சார்!" முந்திக்கொண்டு பதிலளித்தான் ஒரு கதைகேட்பான். நான் அவனை முறைத்துப் பார்த்தேன்.

"ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போலாம்ல? இப்படியே போட்டு வெச்சுட்டு இருக்கீங்க?" என்று நான் முடிப்பதற்குள் கதைக்கேட்பான்கள் நழுவத் தொடங்கினர். பெரியவரைப் பார்த்தேன்.

"சார், ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறேன், வரீங்களா?" அவர் தலையை ஆட்டினார். வலியில் பேசத் தெம்பில்லை போல.

அங்கு வந்த ஒரு ஆட்டோக்காரர் அவரை என் பைக்கின் பின்சீட்டில் ஏற்ற உதவினார், அவரது மேல்துண்டால் காலில் ஒரு கட்டும் போட்டுவிட்டார், அதன் அழுக்கினால் அவருக்கு ஏதேனும் ஆகாமல் இருந்தால் சரிதான் என்று நினைத்துக்கொண்டே வண்டியைக் கிளப்பினேன், பெரியவர் மெல்ல என் தோளைத் தட்டினார்.

"தம்பி, என் சைக்கிள்?" - தன் குஞ்சும் பொன்குஞ்சாயிற்றே!

என்ன செய்யலாம் என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும்பொழுதே இன்னொரு சைக்கிள்காரர் அதைத் தான் கொண்டு வருவதாகச் சொல்லி, எங்கே போகிறீர்கள் என்று கேட்டார், பக்கத்தில் இருந்த அந்த மருத்துவமனையின் பெயரைச் சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினேன்.

மருத்துவமனையில் பெரியவரைச் சக்கர நாற்காலியில் அமரவைத்து உள்ளே கொண்டுபோனார்கள், நான்தான் இடித்துத் தள்ளினேனா என்று வரவேற்பில் இருந்த பெண்மணி விசாரித்தார், நான் இல்லை என்றேன். நம்பினாரா என்று தெரியவில்லை, ஏதேச்சையாய் மணி பார்த்தபொழுதுதான் எனக்கு நான் புறப்பட்ட வேலை நினைவுக்கு வந்தது.

"நான் கிளம்புறேங்க, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு..." – 'கைகழுவிவிட்டுப் போகிறாயா' என்பதைப்போல் பார்த்தார் அந்தப் பெண்மணி.

"எவ்ளோ செலவாகும்?"

"மருந்து, கட்டு, எல்லாமா 300 ஆகலாம்" என்றார், நான் பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

"நான் அப்புறமா வந்து பார்க்குறேன்" என்று அவசராமாய்க் கிளம்பினேன். அந்த அவசரத்திலும் என் கைபேசி எண்ணை வாங்கிக் கொண்டுதான் விட்டார் அந்தப் பெண்மணி. விட்டால்போதும் என்று நானும் கொடுத்துவிட்டு வந்தேன். வெளியே வந்தபொழுது பெரியவரின் சைக்கிளை மருத்துவமனை வாசலுக்கு அருகே நிறுத்திக் கொண்டிருந்தார் அந்தச் சைக்கிள்காரர், என்னைப் பார்த்ததும் ஒரு சிநேகப் புன்னைகை வீசினார், "எப்படி சார் இருக்காரு அவரு?" என்றார்.

"கட்டுப் போட்டுட்டு இருக்காங்க, தேங்க்ஸ் சார்!" என்றேன், அவரும் எனக்கு நன்றி சொன்னார்!

*****


பைக்கில் ஏறி அமர்ந்து அதை முடுக்கியபொழுது மருத்துவமனையில் விட்டுவந்த அந்தப் பெரியவரின் நினைவு வந்தது. அனிச்சையாக என் கைபேசியை எடுத்துப் பார்த்தேன், தவறிய அழைப்பு ஏதும் இல்லை, அவர்களே சமாளித்துக் கொண்டார்களோ? நாம் போவதா வேண்டாவா? போய்ப் பார்த்துவிடுவோமே என்று முடிவுசெய்து வண்டியைக் கிளப்பினேன்.

ஒன்றரை மணி நேரத்திற்கு முன் இருந்த அதே மருத்துவமனையில் என் வண்டி நின்றது. உள்ளே சென்றேன், 'பரவால்ல திரும்பி வந்துட்டியே' என்று என்னைப் பாரட்டுவதைப்போல் பார்த்தார் அந்த வரவேற்புப் பெண்மணி, நான் கேட்கும் முன்னதாக "அங்க" என்று கைகாட்டினார், காலில் பளிச்சென்ற புதிய வெள்ளைக் கட்டுடன் இருந்த அந்தப் பெரியவரை நோக்கி.

"தேங்க்ஸ்ங்க" என்றேன்.

"நாங்க உங்களுக்குச் சொன்னா பொருந்தும்" என்று சிரித்தார், இப்பொழுது என்னை நம்புகிறார் போலும்.

"கூட்டிட்டுப் போலாமா?"

"ம்ம்... இந்தாங்க" நூறு ரூபாயை நீட்டினார், கூடவே ஒரு பில்லும், "சர்வீஸ் சார்ஜ் போடல, மருந்துக்கும் பேண்டேஜுக்கும் மட்டும் 200 ரூபாய் ஆச்சு."

"ரொம்ப தேங்க்ஸ்" என்றேன், சிரித்தார். என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவரிடம் சென்றேன், அவர் கண்களின் வேதனை தெரிவதாய்த் தோன்றியது, பாவமாகத்தான் இருந்தது.

"வலி எப்படி இருக்கு சார்?" என்றேன்,

"இருக்கு தம்பி..." என்று இழுத்தவர், கொஞ்சம் தயங்கிப் பின், "என்னக் கொண்டுபோய் வூட்ல வுட்டுர்றியா?" என்றார்.

"எங்க வீடு?"

அவர் சொன்னார், ஒரு தயக்கம் ஏற்பட்டது எனக்கு, அங்கே போய் பத்துப் பதினைந்து பேர்களாய் என்னைச் சூழ்ந்துகொண்டு இடித்தவன் நான்தான் என்று வம்பு செய்வார்களோ என்று ஒரு சந்தேகம்.

"எனக்கு வேலை இருக்குங்க ஐயா! வேணும்னா ஒரு ஆட்டோல ஏத்திவிடுறேனே?" அவர் அசுவாரஸ்யமாய்த் தலையை ஆட்டினார்.

வெளியில் வந்து ஒரு ஆட்டோ பிடித்து, அவரை அழைத்துப்போய் அதில் ஏற்றினேன், உள்ளே ஏறி அமர்ந்த்தும் தன் சைக்கிளின்மேல் அவரது பார்வை சென்றது, என்னைப் பார்த்தார்.

"உங்க ஆளுங்க யாரையாச்சும் அனுப்பி எடுத்துட்டுவரச் சொல்லுங்க! அது இங்க பத்திரமாத்தான் இருக்கும்" என்றேன், தலையை ஆட்டினார், ஆட்டோக்காரரிடம் பேசிய தொகையை எடுத்துக்கொடுத்தேன்.

"பார்த்து இறக்கி விட்ருங்கண்ணா."

"சரி சார்" என்றார் ஆட்டோக்காரர்.

நான் என் வண்டியை நோக்கித் திரும்புகையில் "தம்பீ..." என்று அழைத்தார் அந்தப் பெரியவர், நன்றி சொல்லப் போகிறாரோ? என்வரையில் சின்ன உதவியான இதற்குப் பெரிதாய் நன்றி எல்லாம் சொல்லி என்னைக் கூச வைக்கப் போகிறாரே என்று சற்றே சங்கோஜத்துடன் திரும்பி அவரைப் பார்த்தேன்.

அவர் வேதனை குறையாத பரிதாபப் பார்வையுடன் என்னை நோக்கிச் சொன்னார், "ஒரு பத்து ரூவா இருந்தா குடேன்... டீ குடிக்க..."

கா. விசயநரசிம்மன்,
சென்னை

© TamilOnline.com