'நிலாக்காலம்' நாவலிலிருந்து ஒரு பகுதி...
-1-


அன்று பிள்ளையார் அப்பச்சிக்குப் பிரமாதமான அதிர்ஷ்டம் அடித்துவிட்டது!

நேற்றுவரை அவருடைய கரிய திருமேனியைக் கவனித்தவர் யார்? அவர் உடுத்திக்கொள்ள ஒருமுழத் துண்டுகூட இல்லாமல் பரதைக் கோலமாக இருந்ததைப் பார்த்துப் பரிதாபப்பட்டவர் யார்? அவருடைய தொப்பைவயிறு பல நாட்களாகக் காய்ந்து கிடப்பதைக் கண்டு கலங்கியவர் யார்?

தினசரி ஆயிரக்கணக்கான பேர் அவர் சந்நிதி வழியே போய் வந்து கொண்டிருந்தார்கள். யாராவது அவரைத் திரும்பிப் பார்த்திருப்பார்களா! அவர்களுக்கு எவ்வளவோ அவசர வேலைகள்; தீராத கவலைகள். இந்தத் தொல்லைகளுக்கு மத்தியில் பிள்ளையாரைத் திரும்பிப் பார்ப்பதற்கு அவர்களுக்கு ஏது நேரம்? அவர்களில் சிலர் போனால் போகிறதென்று போகிற வேகத்தில் கும்பிட்டுவிட்டுப் போனார்கள். எந்தக் கடவுளைக் கண்டாலும் பக்தி இல்லாமலேயே கன்னத்தில் போட்டுக் கொள்கிற பழக்கதோஷக்காரர்கள் அவர்கள்.

எப்படியோ கடவுள்களில் ஏழையாகிப் போய்விட்ட கணபதி ராயனுக்கு இன்று சரியான சுக்கிரதசை. அடேயப்பா! அவருக்கு எண்ணெய் அபிஷேகம் என்ன? தொந்தியை மறைத்த துண்டு என்ன? தொந்தியை அலங்கரித்த சந்தனப்பொட்டு என்ன? கழுத்துக் கொள்ளாமல் மாலைகள் என்ன? உரித்த வாழைப்பழங்கள் என்ன? அவருக்கு வியர்த்து மயக்கம் போட்டு விடுகிற மாதிரி சந்நிதியை மறைத்துக் கொண்டிருந்த கூட்டம் என்ன?

இன்று என்ன வந்தது? தமிழர்களுக்கெல்லாம் பக்தி வெள்ளம் திடீரென்று கரைபுரண்டு விட்டதா? நிச்சயம் கரைபுரண்டுதான் விட்டது. இன்று பரீட்சை முடிவுகள் வந்திருக்கின்றனவே!

பரீட்சையில் வெற்றியைத் தேடிக்கொடுத்த வேழமுகத்து விநாயகனுக்கு தங்கள் காணிக்கையை, நேர்த்திக் கடனைச் செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள் அங்கே கூடி இருந்தவர்கள்.

கூட்டம் என்றால் பிரமாதமான கூட்டம்! எள் விழுந்தால் எண்ணெய் வழியும்! ஆள் விழுந்தால் எலும்பு முறியும்!

பிள்ளையார் ஏகாதசிப் பிள்ளையாராக இருந்ததால் அவருக்கென்று நியமமாகப் பூசை வைப்பவர் யாரும் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட கூட்டம் மொய்க்கும் காலத்தில் திடீரென்று அர்ச்சகர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். முந்திக்கொண்டவர் பாடு யோகம்தான். அர்ச்சனைக் காசு என்றும், தேங்காய் மூடி என்றும் நிறைய வருமானம் அவருக்குக் கிடைக்கும்.

அன்று அப்படி முந்தி இடம் பிடித்துக்கொண்ட அர்ச்சகருக்கு வயது இருபத்திரண்டு இருக்கும். குடுமி இல்லை. ஸ்டெப் கட்டிங் கிராப். அவர் பஞ்சகச்சம் வைத்து வேட்டி கட்டிக் கொண்டிருக்கவில்லை. பாண்ட் அணிந்து கொண்டிருந்தார். அர்ச்சனைக்குக் கொடுக்கப்பட்ட தேங்காய்களை உடைக்கத் தெரியாமல் கண்டபடி உடைத்து சில்லுச் சில்லாக ஆக்கினார்.

அர்ச்சகர் தொழிலுக்குப் புதியவர் என்பதைப் பக்தர்கள் கண்டு கொண்டார்கள். ஆனால் அதட்டிக் கேட்க யாருக்கும் துணிவில்லை.

இந்த திடீர் பக்தர்களைப் போலவே அவரும் திடீர் அர்ச்சகர். பக்தர்களுக்குத் தகுந்த பூசாரி! சரிதானே!

கூட்டத்தில் திடீரென்று சலசலப்பு எழுந்தது.

"சினிமா அதிபர் சிகாமணி வருகிறார்! இருபத்தெட்டு வாரம் வெற்றிகரமாக ஓடிய 'இரவு காதலர்'களை எடுத்தவர்!"

"காஞ்சனா தேவியை வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தியவர்"

"ஒரே சமயத்தில் ஒன்பது படங்களை எடுத்துக் கொண்டிருப்பவர்" - இப்படிப்பட்ட பேச்சுக்கள் கூட்டத்தில் எழுந்தன.

கன்னத்தில் போட்டுக் கொண்டிருந்தவர்கள், தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் - எல்லாருடைய பார்வைகளும் படாதிபதி சிகாமணியின் மேல் ஒரு மாயக் கவர்ச்சியோடு மொய்த்துக் கொண்டன.

சிலர், அவருக்காக விலகி வழி விட்டனர். சிலர் அவரைப் பார்த்து சிநேகிதம் பிடிக்கும் பார்வையில் சிரித்தனர். சிலர் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தனர். சிலர் அவருடைய பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு வணக்கம் தெரிவிப்பவர்களைப் போலக் கையெடுத்தும் கும்பிட்டனர்.

சிகாமணி அவர்களைப் பார்ப்பதும், அவர்களுடைய வணக்கத்தை அங்கீகரிப்பதும் தன் அந்தஸ்துக்கு உகந்தவை அல்ல என்று நினைத்து எங்கேயோ பார்வையைச் செலுத்திக் கொண்டு சந்நிதியை நோக்கி நடந்தார்.

அவருக்குப் பின்னால் ரோஜா மாலை, தேங்காய், பழம் நிறைந்த வெள்ளிக் கூடையுடன் ஒரு முரடன் நடந்து வந்தான்.

சிகாமணி போட்டுக் கொண்டிருந்த செண்டின் மணம் அங்கிருந்தவர்களின் மூக்கைத் துளைத்தது. 'பிறந்தால் சிகாமணியைப் போலப் பிறக்க வேண்டும். இல்லாவிட்டால் பிறக்கவே கூடாது' என்று தங்களின் அவலப்பிறப்பை நொந்து கொண்டார்கள் பலர்.

பிள்ளையாரை நெருங்கிவிட்ட சிகாமணி, கிராப்புத் தலையுடனும், பாண்டுடனும் நின்று கொண்டிருந்த அர்ச்சகரைப் பார்த்து முகத்தைச் சுழித்தார். அர்ச்சகரும் தொழிலுக்கே உரிய பவ்யத்துடன் குழைந்து சிரிக்காமல் அவரைப் பார்த்து வெறுப்புடன் உச்சுக் கொட்டிக்கொண்டார்.

அதைப் பார்த்த படாதிபதிக்கு நெஞ்சில் யாரோ முள்ளை எடுத்துக் குத்தியதைப் போல் இருந்தது. அவரைப் பார்ப்பதையே பெரிய பாக்கியமாகக் கருதுபவர்களுக்கு மத்தியில், முகத்தைச் சுழிக்கவும் ஒரு முகரைக் கட்டையா?

அர்ச்சகரை முறைத்துப் பார்த்தார் அவர். "உன்னைப் பார்த்தால் அர்ச்சகனைப் போலத் தோன்றவில்லையே! நீ பரம்பரை அர்ச்சகனா? பஞ்சத்துக்கு அர்ச்சகனா?" என்று கேட்டார்.

"உங்களைப் பார்த்தால் பரம்பரைப் பணக்காரராகத் தோன்றவில்லையே! தாங்கள் திடீர்ப் பணக்காரரோ?" என்று அர்ச்சகர் நீட்டிக்கொண்டே கேட்டார்.

சிகாமணியின் கண்கள் சிவந்தன. வெள்ளிக்கூடையுடன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த முரடனைத் திரும்பிப் பார்த்தார். அதன் அர்த்தம் என்ன என்பது அவனுக்குத் தெரியும்!

"என்ன முதலாளியிடம் வாலாட்டுகிறாய்? தலை சிதறிவிடும். ஜாக்கிரதை!" என்று உறுமினான் அவன்.

அவன் சும்மா பயமுறுத்துகிற பேர்வழியாகத் தெரியவில்லை. நிச்சயம் தலையை எகிற வைத்து விடுகிற அசல் யம அவதாரம்தான்! ராட்சசன் மாதிரித் தோற்றம் அளித்த அவன், எந்த நேரத்திலும் அர்ச்சகர்மேல் பாயத் தயாராக இருந்தான்.

அந்த வாலிப அர்ச்சகர் அதற்காகப் பயப்பட்டவராகத் தோன்றவில்லை.

"உன் முதலாளிக்கு நீ வாலாக இருக்கலாம். அதற்காக இங்கே வாலாட்டாதே! இது இறைவனுடைய சந்நிதானம்" என்றார் அர்ச்சகர்.

முரடன் வெள்ளிக்கூடையை பக்கத்தில் வைத்துவிட்டு, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு முன்னால் பாய்ந்து வந்தான். "என்னடா சொன்னாய்?" என்று கையை உயர்த்தினான்.

படாதிபதி சிகாமணிக்கு 'பகீர்' என்றது. அவனைவிட்டு அர்ச்சகரை எச்சரிக்கத்தான் நினைத்தார் அவர். அவன் இப்படி எகிறிப் பாய்ந்து ஒரு சண்டைக் கோழியாக நிற்பான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவன் வெறும் சதையை மட்டும் வளர்த்து வைத்துக் கொண்டிருப்பவன் என்று தெரிந்தும்கூட, அர்ச்சகர்மேல் அவனை ஏவிவிட்டது தவறு என்பது அவருக்கு இப்போது புரிந்தது.

"டேய்! இது கோயில். இங்கே சண்டை கிண்டை போடக்கூடாது. போடா அப்பாலே!" என்று கூறிப் பல்லைக் கடித்தார் சிகாமணி.

அவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அர்ச்சகரின் சட்டையைப் பிடித்துக்கொண்டு, அறைவதற்காகக் கையை ஓங்கினான்.

அர்ச்சகர் அவன் கையை மின்வெட்டும் நேரத்தில் தடுத்ததுடன், அவன் கன்னத்தில் 'பட்பட்'டென்று அறையவும் ஆரம்பித்தார்.

'அந்த அர்ச்சகர், தன் கையால் அறைபட்டு மயங்கி விழப்போகிறார்' என்று அலட்சியமாக நினைத்துவிட்டிருந்த அந்த முரடன், அதற்கு மாறாக தானே அறை வாங்கிக்கொண்டதை எண்ணி அவமானத்துடன் பின்னடைந்தான். அடுத்த நிமிடமே வெறிகொண்ட மிருகம் போல அர்ச்சகர் மேல் பாய்ந்தான்.

அந்த அர்ச்சகர் அவனைக் கீரைத் தண்டைப் போல் சுலபமாக வளைத்துக் கீழே போட்டார். பொத்தென்று விழுந்து மண்ணைக் கவ்விய அவன், மறுபடியும் பாய்ந்தான். இருவரும் கட்டிப் புரண்டார்கள். கைக்கு வந்ததை எடுத்து வீசினார்கள். நீண்ட நேரம் நடந்த போராட்டத்தில் முரடன் தோற்று விழுந்தான். அவன் சட்டை கிழிந்து தொங்கியது. அதே போல அவன் கன்னச் சதையும் கிழிந்து தொங்கியது. அதிலிருந்து பெருகிய இரத்தம் அவனுடைய மெல்லிய வெண் சட்டையில் வழிந்து கொண்டிருந்தது.

சினிமாவில் சண்டைக் காட்சி நடந்த இடத்தில் பொருள்கள் சேதமாகிக் கிடக்கும் அலங்கோலம் இங்கே இறைவன் சந்நிதானத்தில் காணப்பட்டது. பிள்ளையாரின் கழுத்திலிருந்த மாலைகளை முரடன் அறுத்து எங்கேயோ வீசி விட்டிருந்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அருமையாக இருந்த பிள்ளையார், இப்பொழுது பரிதாபமாகக் காட்சியளித்தார். கூடி இருந்த பக்தர்கள் கூட்டம் இவ்வளவு நேரமும் சினிமாவில் ஒரு சண்டைக் காட்சியைப் பார்க்கும் ஆர்வத்தில் இருந்தார்கள். சண்டை முடிந்த பிறகுதான் அவர்களுக்குச் சுய உணர்வு வந்தது.

"சே! இந்தச் சினிமாக்காரர்கள் சண்டைக் காட்சிகளை சினிமாவோடு நிறுத்திக் கொள்ளக் கூடாதா?" என்றார் ஒருவர்.

"இவர்கள் எல்லாம் இங்கே எதற்காக வருகிறார்கள்? பாவம் அர்ச்சகர்!" என்றார் இன்னொருவர்.

"அர்ச்சகர் பாவம் இல்லை! இதோ அடிபட்டு விழுந்து கிடக்கிறானே முரடன் அவன்தான் பாவம்! அந்த அர்ச்சகரிடம் அவன் எவ்வளவு உதைகள் வாங்கினான்? எவ்வளவு குத்துக்கள் வாங்கினான்? மூன்று நாளானாலும் அவன் எழுந்திருப்பானோ என்னவோ?" என்று கவலையோடு கூறினார் மற்றொருவர்.

இவ்வளவையும் கேட்டுக்கொண்டே கலைந்த தலையை ஒதுக்கி விட்டுக்கொண்ட அர்ச்சகர், முரடனை இழுத்து ஓர் ஓரமாகத் தள்ளிவிட்டுப் புன்னகையுடன் சிகாமணியை நோக்கி வந்தார்.

"பாவம், உங்கள் ஆள் அடிபட்டு விழுந்து விட்டானே என்று உங்களுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும்! என்ன செய்வது? இனிமேல் நீங்கள் கோயிலுக்குப் போனால் ஒரு முரடனை மட்டும் கூட்டிக்கொண்டு போகாதீர்கள். நாலைந்து பேராகக் கூட்டிக்கொண்டு போனால்தான் அர்ச்சகர்களை அடித்துப்போட்டு வெற்றி மாலை சூடமுடியும். என்ன, அப்படியே செய்கிறீர்களா?" என்று குத்தலாகக் கேட்டார்.

படாதிபதிக்குச் 'சுரீர்' என்றது. கோபமும் கூடவே குடை பிடித்தது. ஆனால் அதை வெளியே காட்டிக்கொண்டால் தனக்கு ஏற்படும் பரிதாப நிலையை நினைத்துப் பார்த்தார். அத்தோடு அங்கிருந்த பக்திச் சூழ்நிலையை மேற்கண்ட நிகழ்ச்சி அடியோடு மாற்றி விட்டிருப்பதையும், அதனால் பக்தர்கள் கூட்டம் ஆத்திரம் அடைந்திருப்பதையும் உணர்ந்து கொண்டார். தாங்க முடியாத ஆத்திரத்தை அடக்கி ஒரு புன்சிரிப்பாக வெளிப்படுத்தி, "அவன் ஒரு முட்டாள்" என்றார்.

"ஆமாம். என்னிடம் அடிபட்டு விழுந்து விட்டானே" என்று நையாண்டியாகச் சிரித்தார் அந்த அர்ச்சகர்.

வாசவன்

© TamilOnline.com