டாக்டர் வாசவன்
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தொடங்கி அழ. வள்ளியப்பா, வாண்டுமாமா, டாக்டர் பூவண்ணன், ஆர். வாசுதேவன், ரேவதி என்று நீளும் மூத்த குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் குறிப்பிடத் தகுந்தவர் டாக்டர். வாசவன். "எழுத்துதான் எனக்கு ஜீவன்; ஜீவனம்" என்ற கொள்கைப் பிடிப்போடு எழுத்துலகில் நுழைந்த வாசவன், அக்காலச் சிறார் இதழ்களில் குறிப்பிடத்தக்கதாக விளங்கிய "பாலமித்ரா" இதழில் 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆசிரியராகப் பணியாற்றியவர். அதை அக்காலச் சிறார் இதழ்களில் முன்னணி இதழாக்கியவர். பாலமித்ரா, கதைகளோடு ஆன்மீகம், குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டிய சமூகக்கடமைகள், சிந்தனைகள், நீதிக்கருத்துக்கள் ஆகியவற்றைத் தாங்கிச் சிறந்த இதழாக வெளிவந்தது. அதில் வெளியான "நாராயணீயம்" தொடர் வாசவனுக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது.

வாசவன் சிறார் எழுத்தாளர் மட்டுமல்ல; பெரியவர்களுக்கும் நிறைய எழுதியிருக்கிறார். காதல்கதை, துப்பறியும்கதை, குடும்பக்கதை, இலக்கியக் கட்டுரை, சிந்தனைக் கட்டுரை, நாடகம், சிறுகதை, நாவல் எனப் பலகளங்களில் அவை விரிகின்றன. நடுத்தரவர்க்க மனிதர்களே இவரது கதைகளில் அதிகம் இடம்பெறுகிறார்கள். சமூகம், குடும்பம், வாழ்க்கை, முரண்கள், உறவுச் சிக்கல்கள் போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டவை இவை. எளிய, நீரோட்டம்போன்ற நடையைக் கொண்ட வாசவனின் கதைகளில் மிகையான வர்ணனைகளோ, வாசகனைக் குழப்பும் உத்திகளோ, தேவையற்ற அடுக்குமொழிகளோ இருப்பதில்லை. வாசவன், "நான் எழுத்துலகில் வந்து சிக்கிக்கொண்டவன். இந்த உலகத்தின் சௌக்கியங்கள் என் பிறப்பின் காரணமாக என் காலடியில் கொட்டிக் கிடந்தபோது அவற்றை எட்டி உதைத்துவிட்டு, தீக்குளிப்பதற்காகவே நஞ்சுநிறைந்த எழுத்தை அள்ளிப் போட்டுக்கொண்டு இலக்கிய உலகத்துக்கு வந்தவன். 'சிக்கிக்கொண்டேன்' என்று நான் குறிப்பிட்டதற்கு, இதைவிட்டு ஓடிவிட நினைக்கிறேன் என்று பொருளல்ல. நான் மீள்வதற்காகச் சிக்கிக் கொள்ளவில்லை. உயிரின் பந்தத்தால் சிக்கிக் கொண்டிருக்கிறேன். இந்த எழுத்தில் கிடைக்கும் ஊதியத்தைத் தவிர வேறு எந்த ஊதியத்தையும் நான் பிச்சையாகக் கருதுகிறேன். இந்த நேர்மையில் பாதிநாள் சோறு வேகும். மீதிநாள் நெஞ்சு வேகும்" என்கிறார்.

'கனவுகள் மெய்ப்பட வேண்டும்', 'அக்னி குஞ்சு', 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', 'கோபுர தீபம்', 'சங்கே முழங்கு', 'தாய்ப்புயல்', 'திரிசூலம்', 'நிலாக்காலம்', 'நெல்லுச்சோறு', 'பாராண்ட பாவலன்', 'மழையில் நனையாத கோலங்கள்', 'எனக்கென்றே நீ', 'நந்தவன மலர்கள்', 'இன்னும் ஒரு பெண்', 'சிவப்பு இதயங்கள்', 'கற்பூரக் காடுகள்', 'வெட்டிவேர் வாசம்' போன்றவை இவரது குறிப்பிடத் தகுந்த நாவல்கள். 'வாசவன் சிறுகதைக் களஞ்சியம்' (இரண்டு பாகங்கள்), 'முப்பால்' போன்றவை சிறுகதைத் தொகுப்புகளாகும். 'நமக்கு நாமே', 'சிகரம் தொடும் சிறப்பான வாழ்க்கை, 'தொட்டுவிடும் தூரம்தான்', 'வண்ணத்தமிழ் வாசல்கள்' போன்றவை கட்டுரைத் தொகுதிகள். வாசவன் திருக்குறளுக்கும் உரை எழுதியிருக்கிறார்.

சிறுகதைபற்றி வாசவன்
, "கதைக்குக் கால் முளைத்தால் மட்டும் போதாது. இறக்கைகளும் முளைக்கவேண்டும். அந்த இறக்கைகள் சுருங்கச் சொல்லலும், சுருக்கெனச் சொல்லலும். சிறுகதை வடிவத்தில் சிறிதானாலும் வானத்தையும், பூமியையும் அளந்துவிட்டு அளப்பதற்கு இன்னும் இடம் கேட்கின்ற வாமனனைப் போன்றது. இராம பாணத்தைப்போன்று குறி தவறாமல் இலக்கை எட்டக் கூடியது. அதனால்தான் வேறெந்தப் படைப்பிலக்கியத்தையும் விடச் சிறுகதை உலகளாவக் கோலோச்சுகிறது" என்று குறிப்பிடுகிறார்.

தற்போதைய தனது எழுத்துப் பணி பற்றி, "ஒரு காலத்தில் நான் நிறைய எழுதினேன். பத்திரிகைகளுக்குத் தீனி கொடுத்துக் கொடுத்து எனக்கு அலுத்துப் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் குறைவாகவே எழுதுகிறேன். ஆனால் நிறைய எழுதவேண்டும் என்ற தவிப்பில் ஒவ்வொரு சொல்லாக ஊற்றுக்கண்ணைத் திறந்து எடுக்கிறேன்" என்கிறார். குழந்தை இலக்கியம், பெரியவர்களுக்கான கதைகள் என இரண்டிலுமே சாதனைகள் படைத்தவர் என்று வாசவனைச் சொல்லலாம். 60 ஆண்டுகளுக்கும் மேலான இலக்கியப்பணி இவருடையது. 2600க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். நாடகங்கள் நானூறுக்கும் மேல். நாவல்களும் நிறைய எழுதியிருக்கிறார். இவர் எழுதிய அணிந்துரைகளைத் தொகுத்தால் அதுவே பல பாகங்கள் கொண்ட தொகுதியாக வரும், 750க்கும் மேல் அணிந்துரைகள் எழுதிக் குவித்திருக்கிறார். நாராயணீயத்தை ஆராய்ந்து இவர் எழுதியிருக்கும் ஆய்வுரை மிகச்சிறப்பானது. தனது ஆய்வுக்காக டாக்டர் பட்டம் பெற்றவர்.

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக விளங்கும் வாசவன், பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர். ஊக்கப்படுத்தியவர். பலரை எழுத்தாளராக்கியவர். தனது எழுத்துப் பணிக்காக தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக விருதும் தமிழன்னை பொற்கிழியும் பெற்றவர். சங்கராசாரியாரால் 'வியாச நாயகன்' விருது வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றிருக்கிறார். நற்கதை நம்பி விருது, சி.பா. ஆதித்தனார் விருது, தமிழ் வளர்ச்சித்துறை விருது எனப் பல விருதுகளையும் கௌரவங்களயும் பெற்றிருக்கிறார்.

"நான் இந்த உயிர் எழுத்தைக் கொண்டு மெய்யெழுத்தைத் தொட்டுத் தொய்யாது தொடர்ந்து எழுதுகிறேன். `ஏன்' என்பது இல்லை. `வான்' என்பதே என் எல்லை" என்று சொல்லி, எழுத்தை நேசித்து, எழுத்தையே தியானித்து, எழுத்தையே வேள்வியாகச் செய்துவரும் வாசவன், தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்துவருகிறார். இலக்கியப் பிதாமகராக மதிக்கத்தக்க, முன்னோடி என்று டாக்டர். வாசவனைச் சொல்வதில் தவறேதுமில்லை.

அரவிந்த்

© TamilOnline.com