செப்டம்பர் 2015: வாசகர் கடிதம்
ஆகஸ்ட் இதழில் வெளியான K.S. ராமமூர்த்தி அவர்களின் நேர்காணல் உள்ளத்தை உலுக்கிவிட்டது. இளவயதில் வறுமையில் வாடி, பின்னால் பலருக்கு உதவும் இந்த அற்புத மனிதரின் வாழ்க்கையில்தான் எவ்வளவு சோதனைகள் மற்றும் அரிய சாதனைகள். மண்ணடியில் தொடங்கிய இவரது பயணம் பல நாடுகளுக்கும் பரவி, கடைசியில் சேவைசெய்யத் தாய்நாடு வந்து, மாணவ மாணவியருக்குக் கல்விப்பாதை காட்டி, அவர்களின் முன்னேற்றத்திற்கு அடிக்கல் நாட்டியதை எப்படிப் பாராட்டுவதென்று தெரியவில்லை. கல் ராமன் நேர்காணல் மற்றும் இதர பகுதிகளும் வழக்கம்போல் சுவையாக இருந்தது.

கே.ராகவன்,
பெங்களுரு, இந்தியா

*****


தற்காலக் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டாற்றி வரும் விழியன் பற்றியும், அவரெழுதிய 'காந்தி புன்னகைக்கிறார்' சிறுகதையும் படித்தேன். சிறுகதை மிகவும் அற்புதம். அமெரிக்க தேசிய இறகுப்பந்து சேம்பியன்ஷிப்களை வென்று சாதனை படைத்துள்ள கோகுல் & கார்த்திக் சகோதரர்களுக்கு அன்பான வாழ்த்துக்களும் ஆசிகளும். தாயார் மேலுள்ள அபிமானத்தையும், படிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் சம்பவங்கள் நிறைந்த கல் ராமன் அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பு.

கே.எஸ். ராமமுர்த்தி அவர்களின் "SODEWS பற்றிய விவரங்கள் படித்து மிகவும் ஆச்சரியப்பட்டோம். அவர்களின் தன்னலமற்ற தியாகமும், படிப்படியான வளர்ச்சியும் போற்றப்பட வேண்டியவை. அவரின் முயற்சிகளுக்குத் துணை நிற்போம். இளம் சாதனையாளர் அத்விகாவுக்குப் பலகோடி வாழ்த்துக்கள்.

தென்றலில் வரும் அத்தனை விஷயங்களும் அருமை.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிடி, கலிஃபோர்னியா

*****


விழியன் எழுதிய சிறுகதையின் கடைசிப் பகுதியைப் படித்ததும் என் விழிகளில் கண்ணீர் வந்துவிட்டது. அற்புதம். திருக்குறள் சரவெடி சிறுமி அத்விகா விரைவில் கின்னஸில் இடம் பிடித்துவிடுவாள் போலிருக்கிறதே! மனமார்ந்த வாழ்த்துக்கள். கல் ராமன் அவர்களது 'தவிர்க்கப்பட்ட தற்கொலை' கல் மனதையும் கரைத்துவிடும். அவரைப் பெற்ற தாய்க்கு நன்றி செலுத்தினேன். நந்தா விளக்கு நாயகன் அப்துல் கலாம் அவர்கள் நிஜமாகவே பாரத குடிமக்களின் உள்ளங்களில் வாடாமலராகத் திகழ்கிறார் என்பது நிதர்சனமாகி விட்டது. மொத்தத்தில் இம்மாதத் தென்றலைப் படித்தவுடன் மனம் நெகிழ்ந்துவிட்டது உண்மை.

கமலா சுந்தர்,
பிரின்ஸ்டன், நியூ ஜெர்சி

*****


கோகுல் & கார்த்திக் இருவரும் அமெரிக்க சாம்பியன்ஷிப்களை வென்றுள்ள சாதனைபற்றித் தென்றல் இதழ் படித்துத் தெரிந்துகொண்டேன். மிகவும் மகிழ்ச்சி. அவர்கள் மென்மேலும் பெரும் சாதனை படைக்கட்டும். தங்கச் சகோதரர்கள் தங்கமும், வைரமுமாய் ஜொலிக்க வாழ்த்துக்கள்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com