3rd i வழங்கும் சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழா
3rd i தனது 13வது வருடாந்தர 'சான் ஃப்ரான்சிஸ்கோ சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழா, பாலிவுட் அண்ட் பியாண்ட், நியூ பீப்பிள் மற்றும் காஸ்ட்ரோ திரையரங்குகளில் அக்டோபர் 22 முதல் 25வரை நடைபெற உள்ளது.

இதில், விவரணப் படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் 15 திரையிடப்படும். இவ்விழாவின் 'சவுத் பே' பதிப்பு நவம்பர் 1ம் தேதி பாலோ ஆல்டோவின் சினிஆர்ட்ஸ் திரையரங்கில் தொடங்கும். இதில் தெற்காசிய மற்றும் வெளிநாடுவாழ் தெற்காசிய இயக்குனர்களின் படைப்புக்கள் திரையிடப்படும்.

தொடக்கநாள் இரவு, ஏ.ஆர். ரஹ்மானைப் பற்றிய உமேஷ் அகர்வாலின் 'Jai Ho' திரையிடப்படும். இதில் மணிரத்தினம் தொடங்கி, லண்டனின் ஆண்ட்ரூ லாயிட் வெபர் வரையிலான இவரது இசைப்பயணம்பற்றிப் பேசப்பட்டுள்ளது. இப்படம் சமீபத்தில் வெள்ளை மாளிகையில் திரையிடப்பட்டது.

'Focus on Freedoms' பகுதியில் அன்பு, சுதந்திரம், வாழ்க்கை, ஆண்-பெண் சமத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட படங்கள் இடம்பெறும். இதில் ஹர்ஜந்த் கில்லின் 'மர்திஸ்தான்' (இந்தியா) மற்றும் பிரசன்னா வித்தநாகேயின் 'Silence in the courts' (இலங்கை) பாலியல் வன்கொடுமை பற்றி பேசுவன. சான் ஃப்ரான்சிஸ்கோவின் நைனா கபூட்டி இயக்கிய 'Petals in the Dust' ஆவணப்படம் பாலின வன்முறையின் கலாசாரப் பின்னணியை அலசுவதோடு, நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளுக்கு ஆளாகி மீண்டு வந்தவர்களின் கதைகளையும் சொல்கிறது. பாலோ ஆல்டோவில் இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பெண்களது எதிர்காலம் மற்றும் அவர்களது சுதந்திரம் பற்றிய விவாத அரங்கு நடைபெறும்.

'Voices of Partition' நிகழ்ச்சியில் மாரா அஹமத் இயக்கிய 'A Thin Wall' திரையிடப்படும். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை வரலாறு, சமாதான சாத்தியக் கூறுகள் ஆகியவற்றை இது ஆராய்கிறது. அடுத்து வரும் விவாத அரங்கில், பிரிவினையால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். விஷால் பாரத்வாஜ் இயக்கிய 'ஹைதர்' காஸ்ட்ரோ தியேட்டரில் திரையிடப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் 'ஹாம்லெட்' கதையைத் தழுவிய இப்படத்தில், காஷ்மீரில் தொடர்ந்து வரும் பிரச்சனை அலசப்படுகிறது. 'Curfewed Nights' புத்தக ஆசிரியரும், திரை எழுத்தாளருமான பஷரத் பீர் இதில் பங்கேற்பார்.

'Indie narratives' பகுதியில் கமல் ஸ்வரூப்பின் புகழ்பெற்ற படமான 'OM-DAR-BA-DAR' (1988) நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வெளியாகிறது. 2014ம் ஆண்டுக்கான 'சிறந்த இளம் இயக்குனர்' விருதை வெனிஸ் படவிழாவில் பெற்ற ஆதித்ய விக்ரம் சென்குப்தாவின் 'LABOR OF LOVE' படமும் திரையிடப்பட உள்ளது. ஆஸ்கார் விருதுபெற்ற இயக்குனரான டனிஸ் டானோவிச்சின் 'TIGERS' திரைப்படமும் திரையிடப்படும். இம்ரான் ஹஷ்மி-கீதாஞ்சலி நடித்துள்ள இப்படம் பெரிய தொழில்நிறுவனங்களின் பேராசையை எதிர்த்துப் போராடும் ஒரு பாகிஸ்தானிய விற்பனையாளரின் உண்மைக்கதை.

'Comedies' பகுதியில் திரையிடப்படும் படங்கள்:
ராஜ்குமார் ஹிரானியின் 'PK' (அமிர்கான் நடித்தது)
எம். மணிகண்டனின் 'காக்கா முட்டை
ஃபாஸியா மிர்சாவின் 'ME, MY MOM, AND SHARMILA' தவிர இரண்டு குறும்படங்கள் 'THE FIRST SESSION', "RECLAIMING PAKISTAN'
குறும்படம் 'COAST TO COAST: MUMBAI TO THE MISSION'

அதிகத் தகவலுக்கு: www.thirdi.org

தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com