கருத்துச் சொல்லலாம், அறிவுரை கொடுக்கமுடியாது!
அன்புள்ள சிநேகிதியே,

யாரிடம் எதைச் சொல்லிப் புலம்புவது என்று தெரியவில்லை. என் மன உளைச்சலை உங்களிடம் கொட்டுகிறேன். நீங்கள் இந்த ஊரிலேயே இருப்பதால், இங்கே இருக்கும் கலாச்சாரத்தைத்தான் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும், நியாயம் என்று ஒன்று இருக்கிறதே! ஒரு தாயின் மனதை நோகடிக்கலாமா? நீங்களே சொல்லுங்கள்... பத்துமாதம் சுமந்து பெற்று, வளர்த்து, பணத்தை எண்ணி எண்ணிச் செலவழித்து இவர்களைப் படிக்கவைத்து, வீட்டை, நிலத்தை விற்று கல்யாணத்தைப் பண்ணி - எத்தனை, எத்தனை கவலைகளையும், பொறுப்புகளையும் சுமந்திருக்கிறோம். எல்லாவற்றையும் துச்சமாக மதித்து, சொல்லால் அடித்துவிட்டுப் போகிறாள் என் பெண்.

எனக்கு இரண்டு பெண்கள். நாங்கள் சாதாரணக் குடும்பம். பெரிய பெண்ணை சுமாராகப் படிக்கவைத்து, திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். அவளுக்குப் பெரியகுடும்பம். அடிக்கடி போக்குவரத்து கிடையாது. கல்யாணம், கார்த்திகை என்றால் தலையைக் காட்டிவிட்டுப் போவாள். இரண்டாவது படிப்பில் படுசுட்டி. துறுதுறுவென்று இருப்பாள். வசதிக்குமீறி அவளை வெளியூருக்கு அனுப்பிப் படிக்கவைத்தோம். M.S. படிக்க அமெரிக்கா வர முயற்சி செய்துகொண்டிருந்தாள். அதற்குள் ஒரு அருமையான வரன் அமைந்தது. மிகவும் பெரிய இடம். அந்த அளவுக்கு ஈடுகொடுக்க, இருக்கும் வீட்டை அடமானம் வைத்து, இருந்த நிலத்தை விற்று, ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்தினோம். இந்தக் குடும்பத்திற்கு இப்படியொரு அதிர்ஷ்டமா என்று உறவினர், நண்பர்கள் எல்லாரும் பேசிக்கொண்டார்கள் என்று கேள்விப்பட்டேன். சந்தோஷமாகத்தான் US வந்தாள். நன்றாகத்தான் குடித்தனம் நடத்தினார்கள். அப்புறம் அவர்களுக்குள் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவன் கொடுமைப்படுத்தினான் என்றாள். என்ன மாதிரிக் கொடுமை என்று இந்த அம்மாவுக்கு தெளிவாகச் சொல்லவில்லை. வீட்டின்மேலே வாங்கிய கடன்கூட அடையவில்லை.

ஆனால், வாழ்க்கையை அடக்கம் செய்தாகிவிட்டது. அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும், நான் அனுபவித்த துக்கம். என் பெண் அப்புறம் Ph.D. படித்தாள். எங்கள் யாரையும் இங்கே வர அனுமதிக்கவில்லை. பணவசதியும் இல்லை. எங்கள் வீட்டுக்காரர் மூன்று வருடங்களுக்கு முன்னால் தவறிப் போய்விட்டார். என் துக்கச்சுமை அதிகம்தான் ஆகிப்போனது. அவளால் வர முடியவில்லை. எல்லாம் முடிந்து ஒரு நல்ல வேலையில் இருக்கிறாள். என்னை அழைத்துக்கொண்டு வந்தாள், இங்கே. "எல்லோரும் இந்த ஊரில் மறுதிருமணம் செய்துகொள்கிறார்களே, நான் யாரையாவது பார்க்கட்டுமா?" என்று கேட்டேன். அவள், சிரித்து மழுப்பினாள். அப்புறம் மெள்ள மறுபடியும் கேட்டேன். "அம்மா, இன்னும் திருமணத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறாயே. நீயே பார்த்து கொண்டுவரும் மாப்பிள்ளைக்கு வேறு எந்த வீட்டை அடமானம் வைக்கப் போகிறாய்?" என்று நக்கலாகக் கேட்டாள். எங்களுக்குள் தினம் அவளுடைய திருமணத்தைக் குறித்து ஏதேனும் வாக்குவாதம் நடக்கும். நேற்றைக்குத்தான் கடைசியில் நான் ஒரு மாதிரியாகச் சந்தேகப்பட்டத்தை உறுதிப்படுத்தினாள். அவளுடைய கம்பெனியில் வேலை பார்ப்பவன். இந்த ஊரைச் சேர்ந்தவன். இரண்டு வருடமாகப் பழக்கம். நான் என் மனதிலுள்ள ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல், அடக்கிக்கொண்டேன். நான் பேசாமல் இருந்ததால் அதைச் சம்மதம் என்று எடுத்துக்கொண்டு, அவனைப்பற்றி சகஜமாக வேறு பேச ஆரம்பித்தாள். நான் இந்தியாவிற்குத் திரும்பிப் போனபிறகு, இருவரும் ஒன்றாக இருக்க வேறுவீடு பார்த்திருக்கிறார்களாம்.

இவ்வளவு சீரீயஸ் ஆனபிறகு என்ன செய்வது? வேறு மதமோ, ஜாதியோ ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு விடு என்று சொன்னேன். அவள் சம்மதிக்கவில்லை. அவனும் அவளைப் போல விவாகரத்தானவன். இரண்டுபேருக்கும் மனம் ஒத்துப் போவதுதான் முக்கியம் என்று முடிவெடுத்து விட்டார்களாம். என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எவ்வளவோ வாதாடிப் பார்த்தேன். "தயவுசெய்து குடும்பம், மானம், கலாச்சாரத்தைப் பற்றிப் பேசாதே! இந்தியாவிலேயே இதெல்லாம் சகஜமாகப் போய்விட்டது. நான் வாழ்க்கையில் ஒருமுறை அடிபட்டது போதும். இனிமேல் என் வழியில்தான் நடப்பேன். அடுத்த வாரத்திலிருந்து, அவன் இங்குதான் வந்து தங்குவான். நாங்கள் பெரியவீடு பார்க்கும்வரை" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். "நான் கிளம்பிப்போகிறேன்" என்றேன். "அது உன்னுடைய இஷ்டம்" என்று என் மனசைக் குத்துவதுபோலச் சொல்லிவிட்டாள். நான் ஒரு பட்டிக்காட்டு அம்மா என்று அவள் நினைக்கிறாள். கல்யாணம் என்று ஒழுங்காகப் பண்ணும்போதே, உறவு நிலைக்கவில்லையே! இப்போது இந்த "Living together" என்றால், எந்த நிமிடமும் அவர்கள் பிரிந்துவிட முடியுமே! மறுபடியும், அவளுடைய காலம் எப்படி இருக்கும்? குழந்தைகள் பெற்றுக்கொண்டு ஒரு குடும்பமாக இருந்தால்தானே வாழ்க்கைக்கு அர்த்தம்? நான் சொல்வதில் நியாயம் இருக்கிறதா, இல்லை, பைத்தியக்கார அம்மா, பழைய சம்பிரதாயத்தில் இன்னும் ஊறிக் கொண்டிருக்கிறாளா? எனக்கு எதுவுமே புரியவில்லை. அவளை சப்போர்ட் செய்யாதீர்கள். எனக்காகக் கொஞ்சம் பரிந்து பேசுங்கள்.

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே,

உங்களைப் புரிந்துகொண்டு பரிந்துபேசத் தயாராக இருக்கிறேன். ஆனால் கேட்பதற்கு உங்கள் பெண் தயாராக இருக்கமாட்டாளே, அம்மா. ஒரு வயதுக்குமேல் நம்மால் நம் கருத்துக்களைத்தான் தெரிவிக்கமுடியும். அறிவுரை கொடுக்கமுடியாது. இது ஒரு கலாசார இடைவெளி. தனிமனிதக் கலாசாரம், சமூகக் கலாசாரம் - இரண்டிலுமே நமக்கும், அவர்களுக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. அதைப் புரிந்துகொள்வதே பெரிய பாடு. புரிந்துகொண்டு, அவர்கள் வழியை அனுசரித்துப் போகும் அணுகுமுறை இன்னொரு பெரிய சவால். உங்கள் பெண் வயதிலும், வாழ்க்கையிலும் சிறிது முதிர்ச்சி பெற்றவள். அவள் மனதில் இருக்கும் கொந்தளிப்போ, வெறுப்போ, கசப்போ, அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தைப் பொறுத்தது. திருமணத்தால் ஏற்படும் பந்தம் அவளுக்கு விலங்காகத் தெரியலாம். அதனால் ஒரு பய உணர்ச்சி, தற்காப்பின்மை எல்லாம் இருக்கும். உங்களுக்கு அவளுடைய முடிவில் ஒரு பாதுகாப்பின்மை தெரிகிறது. ஆனால் அவளுக்கு அந்த முடிவு ஒரு சுயபாதுகாப்பைக் கொடுக்கிறது. எப்போது, உங்கள் பெண்ணுக்கு அந்த உறவு ஒரு பலத்தைக் கொடுக்கிறதோ, ஒரு குடும்பம் வேண்டும், ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதோ, அப்போது, அவள் உங்கள் சிந்தனையை நோக்கி வருவாள். பல வருடங்கள் துணையில்லாமல் இருந்தாளே, அவளுக்கு இப்போது ஒரு உறவு கிடைத்திருக்கிறது இல்லையா? அவள் சந்தோஷம்தானே உங்களுக்கு முக்கியம். நீங்களும் ஒரு வழியில் சந்தோஷம்தானே படவேண்டும். உங்கள் முயற்சி அவளுக்கு வெற்றியைத் தரவில்லை. இப்போது அவளுடைய முயற்சி. நான் அவளுக்கு ஒத்துப்போகவில்லை. புரிந்துகொள்கிறேன். உங்களுடைய ஆதங்கமும், தாயின் பாசமும் புரிகிறது. என்னுடைய பரிவும் இருக்கிறது. உங்கள் பெண் உங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்று நீங்கள் நினைத்தாலும், நீங்கள் அவளைப் புரிந்துகொள்ளப் பாருங்கள். கொஞ்சம், இல்லையில்லை, ரொம்பக் கஷ்டம்தான். வேறு வழியில்லை.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com